×

கேரள போலீஸ் பாதுகாப்பின் கீழ் இருக்கும் முல்லை பெரியாறு அணை மீது பறந்த ஹெலிகாப்டரால் சர்ச்சை: பாதுகாப்பு குறித்து தமிழக அதிகாரிகள் சந்தேகம்

கூடலூர்: முல்லை பெரியாறு அணை மற்றும் பெரியாறு புலிகள் சரணாலயப் பகுதிகளுக்கு மேல், கடந்த சனிக்கிழமை ஹெலிகாப்டர் ஒன்று பறந்து சென்றது. இதுகுறித்து அணையில் இருந்த கேரள மாநில பாதுகாப்பு படையினர் உயரதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர். அதனடிப்படையில் கேரள மாநில உளவுத்துறை போலீசார் மற்றும் வனத்துறையினர் விசாரணை நடத்தினர். இதில் முதற்கட்டமாக, அந்த ஹெலிகாப்டர் பெங்களூருவைச் சேர்ந்த சஞ்சய் கௌடா குழுமத்திற்கு சொந்தமானது என்று தெரிய வந்துள்ளது. அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் வசிக்கும், கேரள மாநிலம் வண்டன்மேட்டை சேர்ந்த ஜெய்ஸ் வர்கீஸ் (53) என்பவர் விமானம் மூலம் கொச்சி வந்து, அங்கிருந்து ஹெலிகாப்டரில் சொந்த ஊரான தொடுபுழா வந்துள்ளார். பின்பு கொச்சிக்கு பயணித்த போது அணைக்கு மேல் ஹெலிகாப்டர் பறந்திருப்பது தெரியவந்துள்ளது.

இது தொடர்பான செய்தி கேரள ஊடகங்களில் வெளியாகி பலத்த சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அனுமதியின்றி ெஹலிகாப்டர் பறந்த விவகாரம், அணை பாதுகாப்பு குறித்த சந்ேதகங்களைக் கிளப்பி உள்ளதாக பல தரப்பில் இருந்தும் குற்றச்சாட்டுகள் வந்துள்ளன. இது குறித்து தமிழக அதிகாரிகள் கூறுகையில், ‘‘அணை தமிழகத்தின் உரிமையிலும், பராமரிப்பிலும் இருந்து வருகிறது. ஆனாலும் அணை பாதுகாப்பு கேரள காவல்துறை கட்டுப்பாட்டில் உள்ளது. எந்த தகவலும் இல்லாமல் நடக்கும் இதுபோன்ற சம்பவங்களால் அணையின் பாதுகாப்பு குறித்து மீளாய்வு செய்ய வேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து கேரள அரசு விளக்கம் தருவதோடு, நடவடிக்கையும் எடுக்க வேண்டும்’’ என்று தெரிவித்தனர்.

 

The post கேரள போலீஸ் பாதுகாப்பின் கீழ் இருக்கும் முல்லை பெரியாறு அணை மீது பறந்த ஹெலிகாப்டரால் சர்ச்சை: பாதுகாப்பு குறித்து தமிழக அதிகாரிகள் சந்தேகம் appeared first on Dinakaran.

Tags : Mullaperiyar dam ,Kerala ,Tamil Nadu ,Periyar Tiger Reserve ,Kerala State Security Forces ,Kerala State Intelligence… ,
× RELATED தமிழ்நாடு எல்லையில் கழிவுகளை கொட்டிய...