×

குமரி மாவட்டம் அருமனை அருகே பார் அமைத்தால் நானே தீ வைத்து கொளுத்துவேன்: காங்கிரஸ் எம்எல்ஏ ஆவேசம்

அருமனை: குமரி மாவட்டம் அருமனை அருகே மஞ்சாலுமூடு- மாலைக்கோடு சாலையில் உள்ள சிறக்கரை கிராமத்தில் ஒரு கட்டிடத்தில் தனியார் மதுக்கூடம் (பார்) அமைய உள்ளதாக தகவல் பரவியது. இதை கண்டித்து கிராம மக்கள் பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றனர். இந்தநிலையில் நேற்று காலை அந்த கட்டிடத்தில் பார் அமைக்கும் பணியில் சிலர் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. தகவல் அறிந்து சிறக்கரை கிராமத்தை சேர்ந்த பெண்கள், சிறுவர்கள் அங்கு திரண்டனர். அந்த கட்டிடத்தின் எதிரே பந்தல் அமைத்து அமர்ந்து, பார் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவலறிந்து இடைக்கோடு வருவாய் ஆய்வாளர் வீனா மற்றும் போலீசார் வந்து கட்டிடத்தில் வேலை செய்தவர்களிடம் விசாரணை நடத்தினர். அவர்கள் பார் அமைக்கவில்லை, ஓட்டலுக்கான பணிகள் நடந்து வருவதாக கூறினர்.

ஆனால், பொதுமக்கள் பார் அமைக்கவே வேலை செய்து வருவதாக கூறினர். கட்டிடத்தின் மேல்பகுதியில் பார் தொடர்பான பலகை உள்ளதாகவும் அதனை அகற்ற வேண்டும் எனவும் கூறினர். தகவல் அறிந்து காங்கிரஸ் எம்எல்ஏ தாரகை கத்பர்ட், இடைக்கோடு பேரூராட்சி தலைவி உமாதேவி ஆகியோர் வந்து விசாரித்தனர். தனியார் பார் அமைப்பதற்கான பணிகள் நடந்ததை உறுதி செய்த எம்எல்ஏ, தகர சீட்டுகளை அகற்றுமாறு உரிமையாளரிடம் கூறினார். பணியாளர்கள் இல்லை என அவர்கள் கூறியதால், கூடியிருந்த மக்களே ஆஸ்பெஸ்டாஸ் சீட்டுகளை அகற்றினர். அப்போது, இங்கு பார் அமைத்தால் நானே தீ வைத்து கொளுத்திவிட்டு, இங்கு அமர்ந்து போராடுவேன் என்று தாரகை கத்பர்ட் எம்எல்ஏ ஆவேசமாக கூறினார். அதன்பின் போராட்டம் கைவிடப்பட்டது.

 

The post குமரி மாவட்டம் அருமனை அருகே பார் அமைத்தால் நானே தீ வைத்து கொளுத்துவேன்: காங்கிரஸ் எம்எல்ஏ ஆவேசம் appeared first on Dinakaran.

Tags : Arumanai ,Kumari district ,Congress MLA ,Sirakkarai ,Manjalumoodu-Maalikodu road ,Dinakaran ,
× RELATED பாரில் சட்டவிரோத மது விற்பனை மேலாளர் கைது