×

தாய்லாந்தில் இருந்து சென்னைக்கு விமானத்தில் ரூ3.5 கோடி கஞ்சா கடத்தி வந்த பயணி கைது: 2 நாட்களில் ரூ9.5 கோடி கஞ்சா பறிமுதல்


மீனம்பாக்கம்: தாய்லாந்தில் இருந்து சென்னைக்கு விமானத்தில் ரூ3.5 கோடி மதிப்பிலான உயர் ரக கஞ்சா கடத்தி வந்த சென்னையை சேர்ந்த பயணியை விமானநிலைய சுங்கத்துறை அதிகாரிகள் கைது செய்தனர். இதேபோல், கடந்த சில நாட்களுக்கு முன் தாய்லாந்தில் இருந்து சென்னை வந்த விமானத்தில் உயர்ரக உலர் கஞ்சா கடத்தி வந்த பெண்ணை கைது செய்துள்ளனர். கடந்த 2 நாட்களில் தாய்லாந்தில் இருந்து கடத்தி வரப்பட்ட மொத்தம் ₹9.5 கோடி மதிப்பிலான உயர்ரக உலர் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது. இதுதொடர்பாக 2 பேரை கைது செய்து விசாரிக்கின்றனர்.

தாய்லாந்து நாட்டின் தலைநகர் பாங்காக்கில் இருந்து, நேற்று முன்தினம் நள்ளிரவு சென்னை விமானநிலையத்துக்கு ஏர்ஏசியா விமானம் வந்திறங்கியது. அதில் வந்த பயணிகளின் உடைமைகளை விமானநிலைய சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். இதில், தாய்லாந்துக்கு சுற்றுலா பயணியாக சென்னையை சேர்ந்த 35 வயது மதிக்கத்தக்க ஆண் சென்று, குறுகிய நாட்களிலேயே திரும்பி வந்துள்ளார். அவரது நடவடிக்கையில் அதிகாரிகளுக்கு சந்தேகம் ஏற்பட்டது. அப்பயணியை நிறுத்தி விசாரித்தபோது, முன்னுக்குப் பின் முரணாகப் பதிலளித்தார். இதையடுத்து அவரது உடைமைகளை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.

இச்சோதனையில், அவரது உடைமைகளில் மறைத்து வைத்திருந்த 7 பார்சல்களை சுங்கத்துறை அதிகாரிகள் பிரித்து பார்த்தனர். அதில், சர்வதேச அளவில் ரூ3.5 கோடி மதிப்பிலான பதப்படுத்தப்பட்ட சுமார் 3.5 கிலோ எடையிலான ஹைட்ரோபோனிக் எனும் உயர்ரக உலர் கஞ்சாவை சென்னை பயணி கடத்தி வந்திருப்பதை கண்டறிந்தனர். இதைத் தொடர்ந்து, அப்பயணியை கைது செய்து, ரூ3.5 கோடி மதிப்பிலான உயர்ரக கஞ்சாவையும் பறிமுதல் செய்தனர். இதேபோல், கடந்த 2 நாட்களுக்கு முன் தாய்லாந்தில் இருந்து சென்னைக்கு விமானத்தில் கடத்தி வரப்பட்ட ரூ6 கோடி மதிப்பிலான 6 கிலோ ஹைட்ரோபோனிக் எனும் உயர்ரக உலர் கஞ்சாவை விமானநிலைய சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக ஏற்கெனவே ஒரு வடமாநில பெண்ணை கைது செய்து விசாரிக்கின்றனர்.

அடுத்தடுத்து 2 நாட்களில் தாய்லாந்தில் இருந்து சென்னைக்கு விமானத்தில் கடத்தி வரப்பட்ட ரூ9.5 கோடி மதிப்பில் 9.5 கிலோ எடையிலான ஹைட்ரோபோனிக் உயர்ரக கஞ்சாவை விமானநிலைய சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர். இதுதொடர்பாக ஒரு பெண் உள்பட 2 பேரை கைது செய்து, அவர்கள் சர்வதேச போதைபொருள் கடத்தல் கும்பலை சேர்ந்தவர்களா, இவற்றை சென்னையில் யாருக்கு தருவதற்காக கடத்தி வந்தனர் என பல்வேறு கோணங்களில் விசாரித்து வருகின்றனர். இதனால் சென்னை விமானநிலையத்தில் பயணிகளிடையே பரபரப்பு நிலவியது.

The post தாய்லாந்தில் இருந்து சென்னைக்கு விமானத்தில் ரூ3.5 கோடி கஞ்சா கடத்தி வந்த பயணி கைது: 2 நாட்களில் ரூ9.5 கோடி கஞ்சா பறிமுதல் appeared first on Dinakaran.

Tags : Thailand ,Chennai ,
× RELATED சென்னைக்கு விமானத்தில் ரூ.6 கோடி மதிப்புள்ள ஹைட்ரோ போனிக் கஞ்சா பறிமுதல்