இதற்கிடையே இப்போது தமிழகம் முழுக்க பல்வேறு மாவட்டங்களில் சாலைகளை மேம்படுத்த மத்திய அரசு நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. மதுரை, திருச்சி, ஈரோடு உட்பட 6 மாவட்டங்களில் பல்வேறு சாலை திட்டங்களை மேம்படுத்த ரூ.85 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும் இது மத்திய சாலை உள்கட்டமைப்பு நிதியின் கீழ் இதற்கு நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் அறிவித்துள்ளார். இது தமிழ்நாட்டில் சாலை போக்குவரத்தை மேம்படுத்தி பொருளாதார செயல்பாடுகளை அதிகரிக்க உதவும் என அவர் குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பாகச் சாலை போக்குவரத்துத் துறை அமைச்சர் நிதின் கட்கரி தனது எக்ஸ் பக்கத்தில் முக்கிய அறிவிப்பை வெளியிட்டு இருக்கிறார்.
அதில் அவர், “ஈரோடு மாவட்டத்தில் மாநில நெடுஞ்சாலை 20ஐ பிரிக்கப்பட்ட இரு வழிப்பாதையாக மாற்றவும் மழைநீர் வடிகால் மற்றும் 2.9 கி.மீ.க்கு உயர்மட்ட பாலம் உட்பட விரிவுபடுத்தும் பணிகளுக்காகவும் ரூ.36.45 கோடிக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. திருப்பூர் மாவட்டத்தில், மேட்டுக்கடை-மூத்தம்பாளையம் சாலையை விரிவுபடுத்தி, அங்குள்ள திருப்பத்தை மேம்படுத்தி, 4.2 கி.மீ.க்கு தடுப்புச்சுவர் கட்டுவது உட்பட புனரமைப்பு பணிகளை மேற்கொள்ள ரூ.6.84 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மதுரை மாவட்டத்தில் மாநில நெடுஞ்சாலை-154ஐ அகலப்படுத்தவும், பலப்படுத்தவும், 6 கி.மீ. தொலைவுக்குப் பாதுகாப்பு மற்றும் வடிகால் பணிகள், மண்டல சாலை உள்கட்டமைப்பு பணிகளை மேற்கொள்ள ரூ.18.29 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. தஞ்சாவூர் மற்றும் திருச்சி மாவட்டங்களில், 9.4 கி.மீ தொலைவு இணைப்பை மேம்படுத்தும் வகையில், மேலத்தூர்-பத்தலப்பேட்டை சாலையை இருந்து இருவழியாகவும், இடைநிலை இருவழிப் பாதையாகவும் விரிவுபடுத்த ரூ. 20.52 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
திண்டுக்கல் மாவட்டத்தில், 4.4 கி.மீ. தொலைவுக்குத் தர்மத்துப்பட்டி -ஆடலூர்- தாண்டிக்குடி ரோட்டை விரிவுபடுத்தவும், பலப்படுத்தவும், கால்வாய் புனரமைப்பு மற்றும் தடுப்புச்சுவர் கட்டுதல் எனப் பாதுகாப்பான போக்குவரத்தை உறுதி செய்ய ரூ. 5.8 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மத்திய சாலை உள்கட்டமைப்பு நிதியின் கீழ் இதற்கு நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இது அங்கு உள்ளூர் பொருளாதாரச் செயல்பாடுகளைக் கணிசமாக அதிகரிக்கும்.. போக்குவரத்துத் திறனை மேம்படுத்தும், பயண நேரத்தைக் குறைக்கும், சாலைப் பாதுகாப்பை மேம்படுத்தும், மேலும் தமிழ்நாடு மாநிலம் முழுவதும் சமூக பொருளாதார வளர்ச்சிக்கான வாய்ப்புகளை உருவாக்கும்” என்று அவர் பதிவிட்டுள்ளார்.
The post தமிழகத்தில் 6 மாவட்டங்களில் பல்வேறு சாலை விரிவாக்க பணிகளுக்காக ரூ.85 கோடி நிதி ஒதுக்கீடு: ஒன்றிய அமைச்சர் நிதின் கட்கரி தகவல் appeared first on Dinakaran.