2025- பாதுகாப்பு சீர்திருத்த ஆண்டு: ஒன்றிய அரசு அறிவிப்பு

புதுடெல்லி புத்தாண்டையொட்டி பாதுகாப்பு அமைச்சகத்தின் அனைத்து செயலாளர்களுடன் பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் ஆய்வு கூட்டம் நடத்தினார். இதில்,எதிர்கால சீர்திருத்தங்களுக்கு உத்வேகம் அளிக்கும் வகையில்,2025-ம் ஆண்டை பாதுகாப்பு அமைச்சகத்தில் சீர்திருத்த ஆண்டாக கடைபிடிக்க ஒருமனதாக முடிவு செய்யப்பட்டது. இதன் நோக்கம் ஆயுத படைகளை தொழில்நுட்ப ரீதியாக மேம்பட்ட போருக்குத் தயாராக உள்ள படையாக மாற்றுவதாகும்.

அதில் ராஜ்நாத் சிங் பேசும்போது‘‘ஆயுதப்படைகளின் நவீனமயமாக்கல் பயணத்தில் சீர்திருத்தங்களுக்கான ஆண்டு ஒரு முக்கிய படியாக இருக்கும். இது நாட்டின் பாதுகாப்பானது தயார்நிலையில் முன்னெப்போதும் இல்லாத முன்னேற்றங்களுக்கு அடித்தளம் அமைக்கும்.21 ம் நூற்றாண்டின் சவால்களுக்கு மத்தியில் தேசத்தின் பாதுகாப்பு மற்றும் இறையாண்மையை உறுதி செய்ய இத்துறை தயாராகிறது’’ என்றார்.

பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கை: கூட்டு மற்றும் ஒருங்கிணைப்பு முயற்சிகளை மேலும் வலுப்படுத்துவதையும், ஒருங்கிணைந்த கட்டளைகளை நிறுவுவதை எளிதாக்குவதையும் நோக்கமாகக் கொண்டிருக்க வேண்டும். சைபர் மற்றும் விண்வெளி போன்ற புதிய களங்களிலும், செயற்கை நுண்ணறிவு, இயந்திரக் கற்றல், ஹைப்பர்சோனிக்ஸ், ரோபோட்டிக்ஸ் போன்ற வளர்ந்து வரும் தொழில்நுட்பங்களில் கவனம் செலுத்த வேண்டும். எதிர்காலப் போர்களை வெல்வதற்குத் தேவையான தொடர்புடைய உத்திகள், நுட்பங்கள் மற்றும் நடைமுறைகள் உருவாக்கப்பட வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

The post 2025- பாதுகாப்பு சீர்திருத்த ஆண்டு: ஒன்றிய அரசு அறிவிப்பு appeared first on Dinakaran.

Related Stories: