தமிழ்நாட்டிற்கு நிதி ஒதுக்கீடு செய்வது உள்ளிட்ட அனைத்து விவகாரத்திலும் பாஜகவின் மோடி அரசு துரோகம் செய்து வருகிறது: பொன்குமார் கடும் தாக்கு

சென்னை: தமிழ்நாடு விவசாயிகள் தொழிலாளர்கள் கட்சி தலைவர் பொன்குமார் இன்று வெளியிட்ட அறிக்கை: தமிழ்நாட்டில் திராவிட மாடல் ஆட்சி அமைந்து மூன்றரை ஆண்டுகளை நிறைவு செய்துள்ளது. இந்த மூன்றரை ஆண்டு கால முதல்வர் மு.க.ஸ்டாலினின் ஓயாத உழைப்பால் எண்ணற்ற திட்டங்கள் நடைமுறைக்கு வந்துள்ளன. மகளிருக்கான உரிமை தொகை, உயர் கல்வி பயிலும் மாணவிகளுக்கு மாதம் ஆயிரம் உதவித்தொகை, மகளிருக்கான இலவச பேருந்து வசதி, மக்களை தேடி மருத்துவம், இல்லம் தேடி கல்வி இப்படி இந்தியா மட்டுமல்ல உலகமே பாராட்டி பின்பற்றக்கூடிய அரிய திட்டங்கள் மூலம் தமிழ்நாட்டின் பொருளாதார மேம்பாட்டிற்கும் தமிழ்நாட்டு மக்களின் வாழ்வாதாரத்திற்கும் வழி கோரியது திராவிட மாடல் அரசு. தொழில்துறையில் பின்னோக்கி இருந்த தமிழ்நாட்டை முன்னிலைக்கு கொண்டு வந்த பெருமை திராவிட மாடல் ஆட்சிக்கு உண்டு. இப்படிப்பட்ட நடவடிக்கைகள் மூலம் இந்தியாவின் முதன்மை மாநிலங்களில் இரண்டாவது இடத்தை தமிழ்நாடு அடைந்துள்ளது.

இப்படிப்பட்ட வளர்ச்சிக்கான முன்னெடுப்புகளை ஒரு மாநிலம் எடுக்கும் போது பாரபட்சம் இன்றி அந்த அரசுக்கு கை கொடுத்து உதவ வேண்டிய ஒன்றிய அரசு, அற்ப அரசியலுக்காக மாற்றான் தாய் மனப்பான்மையோடு நடந்து கொண்டு வருகிறது. தமிழ்நாட்டிற்கு நிதி ஒதுக்கீடு செய்வது உள்ளிட்ட அனைத்து பிரச்சனைகளிலும் பாஜகவின் மோடி அரசு துரோகம் செய்து வருகிறது. ஆனால் அவற்றை எல்லாம் பின்னுக்கு தள்ளிவிட்டு தமிழ்நாட்டின் முன்னேற்றத்திற்காக முழுமூச்சுடன் திராவிட மாடல் அரசு செயல்பட்டு வருகிறது.

இன்று இந்தியா முழுவதும் மட்டுமல்ல உலக அளவில் போதை கலாசாரம் தலைவிரித்து ஆடுகிறது. குஜராத் மாநிலம் அதானி துறைமுகத்தின் வழியாக டன் கணக்கில் போதைப் பொருட்கள் இறக்குமதி செய்யப்பட்டு இந்தியாவின் மாநிலங்களுக்கு விநியோகிக்கப்படுகிறது. இதனால் பள்ளி மாணவர்கள் உட்பட இளைஞர்கள் போதைக்கு அடிமையாக்கப்பட்டு வருவது வேதனைக்குரிய ஒன்றாகும். போதை கலாசாரத்தை ஒழிப்பது அரசுகளால் மட்டும் முடியாது. அரசு, அரசியல் கட்சி, தன்னார்வ தொண்டு நிறுவனங்கள், தனி மனிதர்கள் என அனைவரும் சேர்ந்து எடுக்க வேண்டிய சமூக கடமையாகும். அந்த அடிப்படையில் போதையில்லா உலகத்தை உருவாக்கிட அனைவரும் உறுதி ஏற்போம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

The post தமிழ்நாட்டிற்கு நிதி ஒதுக்கீடு செய்வது உள்ளிட்ட அனைத்து விவகாரத்திலும் பாஜகவின் மோடி அரசு துரோகம் செய்து வருகிறது: பொன்குமார் கடும் தாக்கு appeared first on Dinakaran.

Related Stories: