எதிர்பார்ப்பு இல்லாமல் மழை தரும் கருமேகங்களை போல் நீதிபதிகளும் மக்களுக்கு நீதி வழங்க வேண்டும்: ஐகோர்ட் நிர்வாக கட்டிட திறப்பு விழாவில் தலைமை நீதிபதி பேச்சு

சென்னை: சென்னை உயர் நீதிமன்றத்தின் நிர்வாகத்துறைக்கான 11 அடுக்குகளை கொண்ட புதிய கட்டிடங்களை உச்ச நீதிமன்ற நீதிபதி எம்.எம். சந்தரேஷ், நீதிபதி மகாதேவன் ஆகியோர் நேற்று திறந்து வைத்தனர். இதன்பின் முன்னாள் பாரத பிரதமர் மன்மோகன் சிங் மறைவுக்கு 2 நிமிட மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது.

பின்னர் நடந்த நிகழ்ச்சியில் பேசிய, சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி கே.ஆர்.ராம், “நீதித்துறை விரைந்து நீதி வழங்குவதற்காக நிர்வாகத்துறையின் செயல்பாடுகள் மிக முக்கியமானது. நீதித்துறையின் முதுகெலுப்பாக செயல்படும் நிர்வாகத்துறைக்கு சென்னை உயர் நீதிமன்றத்தில் போதுமான இடவசதி இல்லாத நிலை இருந்து வந்தது. அதற்காக தற்போது சென்னை உயர் நீதிமன்றத்தில் 11 மாடிகளை கொண்ட புதிய நிர்வாக கட்டிடத்தை இன்று திறந்து வைக்கப்பட்டுள்ளது.

இந்த புதிய கட்டிடத்தில், வழக்கு ஆவணங்கள் பாதுகாப்பு, நீதித்துறைக்கான கணக்கு, வழக்கு அலுவலகங்கள், தபால் துறை உள்ளிட்ட நிர்வாகத்துறைக்கான அலுவலகங்கள் செயல்படும். சென்னை உயர் நீதிமன்றத்தில் கட்டி திறக்கப்பட்டுள்ள நிர்வாகத்துறைக்கான இந்த புதிய கட்டிடம் சாதாரண கட்டிடம் அல்ல. வருங்கால நீதிக்கான கட்டிடம். சமூகத்திற்கு நீதியை விரைந்து வழங்குவதில் இந்த புதிய கட்டிடம் முக்கிய பங்காற்றும். இந்த கட்டிடம் அமைவதற்கு உதவிய தமிழக அரசுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். பகவத் கீதை, திருக்குறளை மேற்கோள் காட்டி கருமேகங்கள் எந்தவித எதிர்பார்ப்பும் இல்லாமல் மழை பொழிவை கொடுத்து, இயற்கையை செழிக்க வைப்பது போல் நீதி வழங்கப்பட வேண்டும் என்று தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சியில் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ், ஆர்.மகாதேவன், சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் எஸ்.எஸ் சுந்தர், ஆர்.சுப்பிரமணியன், ஆர்.சுரேஷ்குமார், நீதிபதிகள், உயர் நீதிமன்ற பதிவாளர் ஜெனரல் எஸ்.அல்லி, அட்வகேட் ஜெனரல் பி.எஸ்.ராமன், கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் ஏ.ஆர்.எல்.சுந்தரேசன், தமிழ்நாடு பார் கவுன்சில் தலைவர் பி.எஸ்.அமல்ராஜ், வழக்கறிஞர்கள் சங்க தலைவர் ஜி.மோகனகிருஷ்ணன், செயலாளர் ஆர்.கிருஷ்ணகுமார், பொருளாளர் ஜி.ராஜேஷ், பொதுப்பணித்துறை பொறியாளர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

The post எதிர்பார்ப்பு இல்லாமல் மழை தரும் கருமேகங்களை போல் நீதிபதிகளும் மக்களுக்கு நீதி வழங்க வேண்டும்: ஐகோர்ட் நிர்வாக கட்டிட திறப்பு விழாவில் தலைமை நீதிபதி பேச்சு appeared first on Dinakaran.

Related Stories: