பெரியாறு அணை நீர்மட்டம் சரிந்து வரும் நிலையில் வைகை அணை நீர்மட்டம் மீண்டும் 65 அடி

ஆண்டிபட்டி: முல்லைப்பெரியாறின் நீர்மட்டம் குறைந்து வரும் நிலையில், தொடர் நீர்வரத்தால் வைகை அணையின் நீர்மட்டம் மீண்டும் 65 அடியை எட்டியுள்ளது. இதனால், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். தேனி மாவட்டம், ஆண்டிபட்டி அருகே, 71 அடி உயரமுள்ள வைகை அணை உள்ளது. இதில், தேக்கப்படும் தண்ணீர் மதுரை, தேனி, திண்டுக்கல், ராமநாதபுரம், சிவகங்கை ஆகிய 5 மாவட்டங்களின் குடிநீர், பாசனத்திற்கு பயன்படுத்தப்படுகிறது. கடந்த மாதம் அணையின் நீர்மட்டம் 65 அடியை எட்டிய நிலையில், பூர்வீக பாசன பகுதிகளுக்கு ஒரு மாதம் தொடர்ச்சியாக தண்ணீர் திறந்து விடப்பட்டது.

இதனால், கடந்த 12ம் தேதி அணை நீர்மட்டம் 49 அடியாக குறைந்தது. பின்னர் 3 நாட்கள் தொடர்ச்சியாக பெய்த கனமழையால் நீர்வரத்து அதிகரித்து 17ம் தேதி நீர்மட்டம் 62 அடியை எட்டியது. இதையடுத்து மீண்டும் ஒரு போக பாசனத்திற்காக 500 கனஅடி நீர் திறக்கப்பட்டது. நீர்திறக்கப்பட்டாலும் அணைக்கு நீர்வரத்து 1000 கனஅடிக்கு குறையாமல் இருந்து வந்தது. இந்நிலையில் வைகை அணை நீர்மட்டம் மீண்டும் 65 அடியை எட்டியுள்ளது.

இன்று காலை நிலவரப்படி வைகை அணையின் நீர்மட்டம் 65.03 அடி. நீர்வரத்து வினாடிக்கு 1025 கனஅடி. அணையில் இருந்து வினாடிக்கு 569 கனஅடி நீர் வெளியேற்றப்படுகிறது. நீர்இருப்பு 4,637 மில்லியன் கனஅடி. 152 உயரமுள்ள பெரியாறு அணையின் நீர்மட்டம் 127.70 அடி. அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 364 கனஅடி. அணையில் இருந்து வினாடிக்கு 1100 கனஅடி நீர் வெளியேற்றப்படுகிறது. நீர் இருப்பு 4,201 மில்லியன் கன அடி.

The post பெரியாறு அணை நீர்மட்டம் சரிந்து வரும் நிலையில் வைகை அணை நீர்மட்டம் மீண்டும் 65 அடி appeared first on Dinakaran.

Related Stories: