×

பாகிஸ்தானை வீழ்த்தி டெஸ்ட் சாம்பியன் இறுதிப்போட்டிக்கு தகுதி; மிகப்பெரிய போராட்டத்தை வெளிப்படுத்தி வெற்றியை வசமாக்கியுள்ளோம்: தென்ஆப்பிரிக்க கேப்டன் பவுமா நெகிழ்ச்சி

செஞ்சுரியன்: பாகிஸ்தான் அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் தென்னாப்பிரிக்கா அணி 2 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்றது. இந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய பாகிஸ்தான் அணி 211 ரன்கள் எடுத்தது. தென்ஆப்பிரிக்கா அணி முதல் இன்னிங்ஸில் 301 ரன்களை குவித்து, 90 ரன்கள் முன்னிலை பெற்றது. 2வது இன்னிங்ஸில் பாகிஸ்தான் அணி 237 ரன்களை மட்டுமே சேர்த்ததால், தென்னாப்பிரிக்கா அணியின் வெற்றிக்கு 148 ரன்கள் மட்டுமே இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.

இதன்பின் களமிறங்கிய தென்னாப்பிரிக்கா அணி 99 ரன்களுக்கு 8 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. பின்னர் இணைந்த யான்சன் – ரபாடா கூட்டணி 51 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து தென்ஆப்பிரிக்கா அணியை வெற்றிபெற வைத்தது. இந்த வெற்றியின் மூலமாக தென்ஆப்பிரிக்கா அணி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப்போட்டிக்கு முன்னேறி சாதனை படைத்துள்ளது. இதுகுறித்து தென்னாப்பிரிக்கா அணியின் கேப்டன் டெம்பா பவுமா கூறுகையில், “இந்த தருணம் எனக்கு மிகவும் எமோஷனலான ஒன்று. இந்த வெற்றி எங்கள் அணிக்கு மகிழ்ச்சியையும், சந்தோஷத்தையும் கொண்டு வந்துள்ளது. மிகப்பெரிய போராட்டத்தை வெளிப்படுத்தி வெற்றியை வசமாக்கியுள்ளோம். நான் இன்னும் திணறிக் கொண்டே தான் இருக்கிறேன்.

அவர்களை மார்க்ரம் சிறப்பாக வழிநடத்தி செல்கிறார். இந்த போட்டியில் 8 விக்கெட்டுகளை இழந்தபோது, ஓய்வறையில் பெரிதாக எந்த உரையாடலும் நடக்கவில்லை. ஆனால் எங்கள் அனைவருக்கும் வெல்வோம் என்ற நம்பிக்கை இருந்தது. ஆட்டத்தை பார்க்கும் இடத்திற்கே நான் வரவில்லை. பாத் ரூமிலேயே இருந்துவிட்டேன். கடைசியாக 15 ரன்கள் அடிக்க வேண்டிய சூழல் வந்தபோது தான் வெளியில் வந்தேன். எங்களுக்கு மட்டுமல்லாமல் பயிற்சியாளர்கள் குழுவிற்கும் இது மிகப்பெரிய வெற்றி. இந்த உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் சீசனை இந்திய அணிக்கு எதிராக தொடங்கினோம்.

எங்களுக்கு அதிக போட்டிகளில் விளையாடும் வாய்ப்பு அளிக்கப்படவில்லை. அதேபோல் நாங்களும் இரக்கமே இல்லாத அளவிற்கு ஆட்டங்களில் ஆதிக்கம் செலுத்தவில்லை. ஆனால் வெற்றி பெறுவதற்கான வழிகளை மட்டும் கண்டறிந்து கொண்டே இருந்தோம். இதுபோன்ற ஆட்டங்களில் வெல்வதன் மூலமாக அணியில் உள்ள அனைவருக்கும் நம்பிக்கை அதிகரிக்கும். எந்த வீரர் மோசமான ஃபார்மில் இருந்தாலும் அவர்களுக்கு வாய்ப்புகள் அளிக்கப்பட்டு கொண்டே இருந்தது. இந்த தருணத்தை கொண்டாட நினைக்கிறோம்’’ என்றார்.

The post பாகிஸ்தானை வீழ்த்தி டெஸ்ட் சாம்பியன் இறுதிப்போட்டிக்கு தகுதி; மிகப்பெரிய போராட்டத்தை வெளிப்படுத்தி வெற்றியை வசமாக்கியுள்ளோம்: தென்ஆப்பிரிக்க கேப்டன் பவுமா நெகிழ்ச்சி appeared first on Dinakaran.

Tags : Pakistan ,Championship ,Bawuma Lachi ,South Africa ,Dinakaran ,
× RELATED உலக டெஸ்ட் சாம்பியன் ஷிப்: புள்ளிப்பட்டியலில் பாகிஸ்தான் சரிவு