திருமலை: டிஜிட்டல் கைது என்பதெல்லாம் பொய். இதை பொதுமக்கள் யாரும் நம்ப வேண்டாம் என டிஜிபி தெரிவித்தார். இதுகுறித்து ஆந்திர டிஜிபி துவாரகா திருமலராவ் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது: சமீப காலமாக டிஜிட்டல் கைது என்ற பெயரில் சைபர் மோசடி செய்பவர்களின் மிரட்டல்கள் அதிகரித்து வருகிறது.
இதன்மூலம் பலரிடம் பல கோடி மோசடி செய்துள்ளனர். சைபர் குற்றங்களின் எண்ணிக்கை அதிவேகமாக அதிகரித்து வருகிறது. சட்டத்தில் டிஜிட்டல் கைது என்று எதுவும் இல்லை. இதுபோன்ற மிரட்டல்களை பொதுமக்கள் யாரும் நம்ப வேண்டாம். ஆந்திராவில் இந்தாண்டில், சைபர் குற்றங்கள் மூலம் ரூ.1,229 கோடி மோசடி செய்யப்பட்டுள்ளது. சமூக வலைதளங்களில் ஆட்சேபணைக்குரிய பதிவு வெளியிட்டவர்கள் மீது இதுவரை 572 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.
கஞ்சா மற்றும் போதைப்பொருள் வழக்குகளில் அரசு கொண்டு வந்துள்ள ‘கழுகு’ என்று தனிப்படை வலுப்பெற்று வருகிறது. நாட்டிலேயே முதன்முறையாக ஆந்திர மாநிலத்தில் ‘ஸ்மார்ட் போலீஸ் ஏஐ’ பயன்படுத்தப்படுகிறது. குற்றப்பதிவு முதல் வழக்கு விசாரணை வரை ‘ஸ்மார்ட் போலீஸ் ஏஐ’ தொழில்நுட்பம் உதவி செய்து வருகிறது. துணை முதல்வர் பவன்கல்யாணின் பாதுகாப்பு வலையமைப்பில் போலி ஐபிஎஸ் அதிகாரி ஊடுருவியது குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
The post டிஜிட்டல் கைது என்பது பொய், பொதுமக்கள் நம்ப வேண்டாம்: டிஜிபி உஷார் appeared first on Dinakaran.