புளோரிடா: புற்றுநோய் பாதிப்பில் இருந்து மீண்டு விட்டேன் என்று வீடியோ வெளியிட்டு நடிகர் சிவராஜ்குமார் தெரிவித்துள்ளார். கன்னட நட்சத்திர நடிகர் சிவராஜ்குமார். இவருக்கு புற்றுநோய் பாதித்ததால் சிகிச்சைக்காக அமெரிக்கா சென்றிருந்தார். அங்குள்ள புளோரிடா மாகாணத்தில் உள்ள மியாமி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு நடத்தப்பட்ட பரிசோதனையில், அவரது சிறுநீர் பையில் புற்றுநோய் பாதிப்பு கண்டறியப்பட்டது. இது அவரது ரசிகர்களுக்கு கடும் அதிர்ச்சியையும், கவலையையும் ஏற்படுத்தியது. இந்நிலையில் அவருக்கு கடந்த 26ம் தேதி அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. இதில் புற்றுநோய் பாதித்திருந்த சிறுநீர் பை அகற்றப்பட்டு, செயற்கை முறையில் சிறுநீர்பை ஏற்படுத்தப்பட்டதாகக் கூறப்பட்டிருந்தது.
அறுவை சிகிச்சை நடைபெற்று ஒரு வார காலத்துக்கு பிறகு, சிவராஜ்குமார், தனது மனைவியுடன் ஒரு வீடியோவை புத்தாண்டு நாளில் வெளியிட்டுள்ளார். அதில் ரசிகர்களுக்கு மகிழ்ச்சியான செய்தியை பதிவிட்டுள்ளார். அதாவது, நான், புற்று நோயிலிருந்து முற்றிலும் குணமடைந்து விட்டதாக மருத்துவர்கள் கூறியுள்ளனர். ரசிகர்களாகிய உங்களின் பரிபூரண ஆசியால்தான் இன்று நான் குணம் அடைந்துள்ளேன். உங்கள் அனைவரின் பிரார்த்தனையும் பலித்து விட்டது. உங்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். விரைவில் குணமடைந்து, நாடு திரும்புவேன் என்று கூறியிருக்கிறார்.
The post ‘புற்றுநோய் பாதிப்பில் இருந்து மீண்டு விட்டேன்’ – வீடியோ வெளியிட்டு அறிவித்த நடிகர் சிவராஜ்குமார் appeared first on Dinakaran.