சமூக வலைதளத்தில் ஒன்றிணைந்து விராலிமலை மலைக்கோயிலில் 300 இளைஞர்கள் உழவாரப்பணி

* அனைத்து இடங்களிலும் சுத்தம் செய்ய ஆலோசனை

* பொதுமக்களிடம் இருந்து குவியும் பாராட்டுகள்

விராலிமலை : விராலிமலை மலைக்கோயில் வளாகம் மற்றும் வனப்பகுதிகளை ஒன்றிணைந்த இளைஞர்கள் ஒரேநாளில் தூய்மைப்பணி மேற்கொண்டனர்.புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலை பகுதி இளைஞர்கள் விராலிமலை முருகன் மலைகோயில் வளாகம் மற்றும் வனப்பகுதியில் ஆங்காங்கே தேங்கி கிடக்கும் பிளாஸ்டிக் உள்ளிட்ட குப்பை கழிவுகளை அகற்ற முடிவு செய்தனர்.

தொடர்ந்து, இப்பணியில் ஈடுபடுத்திக்கொள்ள ஆர்வமுள்ள இளைஞர்கள் முன்வரலாம் என்று சமூக வலைதளத்தில் பதிவிட்டிருந்தனர். இதையடுத்து நேற்று(ஞாயிற்றுக்கிழமை) காலை கோயில் வளாகம் முன் சுமார் 300 க்கும் மேற்பட்ட இளைஞர்கள் ஒன்று திரண்டனர்.

இதனை தொடர்ந்து, அனைவரும் தனித்தனி குழுக்களாக பிரிக்கப்பட்டு அவர்கள் செய்யவேண்டிய பணி வழங்கப்பட்டது, தொடர்ந்து, பல்வேறு பகுதிகளுக்கு பிரித்து சென்று உழவார பணியை தொடங்கினர்.

பொதுவாக ஒரு நாட்டின் வளர்ச்சிக்கும், வளர்ச்சிக் கூறுகளின் நிலைத்த தன்மைக்கும் உந்து சக்திகளாக பல்வேறு காரணிகள் கூறப்பட்டாலும் அவற்றுள் முதன்மையானது மட்டுமல்ல தவிர்க்க முடியாத சக்தியாகவும் முன் நிற்பது அந்நாட்டின் இளைஞர்களே. புதிய சிந்தனைகள், மேம்பட்ட திறன்கள், புதுமைகளை உள்வாங்கும் நிலை, தளராத முயற்சி, வளர்ச்சி நோக்கிய இலக்கு, நவீன உத்திகளைக் கையாளுதல் போன்ற எண்ணற்ற பரிமாணங்கள் இளைஞர்களின் தகுதியையும் தரத்தையும் உயர்த்திப் பிடிப்பதால் அவர்களை விலக்கி வைத்துவிட்டு வளர்ச்சியை முன்னெடுத்துச் செல்வது இயலாத காரியமாகும்.

எனவே தான் நூறு ஆண்டுகளுக்கு முன்பே இளைஞர்கள் தான் நாட்டின் எதிர்காலம் அவர்களின் கைகளில் தான் நாடு உள்ளது என்று இளைஞர்களின் சக்தியை உலகிற்கு உணர்த்தினார் சுவாமி விவேகானந்தர்.

நாட்டில் மிகவும் துடிப்பான மற்றும் சக்தி வாய்ந்தவர்கள் இளைஞர்கள், உலகில் சில நாடுகள் தான் மக்கள் தொகையில் கணிசமான அளவு இளைஞர்களை கொண்டுள்ளது. அந்த வகையில் இந்தியாவின் மக்கள் தொகையில் ஏறத்தாழ 50 சதவீதத்திற்கும் மேல் 25 வயதிற்குட்பட்ட இளைஞர்கள் உள்ளனர். அறிவு, ஆற்றல், அனுபவம், துணிவு போன்றவற்றின் அடிப்படையில் வளரும் நாடுகளில் மட்டுமல்ல அமெரிக்கா போன்ற வளர்ந்த நாடுகளிலும் கூட இளைஞர்களின் செயல்பாடுகள் மிகுந்த முக்கியத்துவம் பெறுவதால் மாற்றங்களுக்கு வித்திடும் இன்றைய உலகில் இளைஞர்கள் மாற்று சக்திகளாக உருவாகி நிற்கின்றனர்.

வளர்ந்து வரும் பொருளாதார நாடுகளில் உலக அரங்கில் முக்கிய இடத்தைப் பெற்றுள்ள இந்தியாவின் வளர்ச்சி மற்றும் வெற்றிக்கு அடித்தளமாக இருப்பது வளர்ச்சி சார்ந்த நிகழ்வுகளில் இளைஞர்கள் ஈடுபடுவதும் அவர்களின் உறுதிமிக்க பங்களிப்பும் தான்.

அந்த வகையில் எல்லாவற்றிற்கும் அரசையே எதிர்பார்த்து காத்து கொண்டு இருக்காமல் நம்மால் முடியும் நம்மால் மட்டுமே முடியும் என்று மனதில் உறுதி தன்மையுடன் புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை மயில்கள் சரணாலயம் குழுவினர் முருகன் மலைக் கோயிலில் பொதுசுகாதார பணியில் ஈடுபட்டு வரும் இந்த இளைஞர்கள் பாராட்டுக்குறியவர்களே.

நம் வீட்டை நாம் தான் சுத்தம் செய்கிறோம் அதேபோல, நம் ஊரை நாம் ஏன் சுத்தம் செய்யக்கூடது என்ற கேள்வியோடு களத்தில் இறங்கிய நூற்றுக்கணக்கான இளைஞர்கள் விராலிமலைமலை கோயில் வனப்பகுதி மற்றும் வளாகத்தை கையில் எடுத்துள்ளனர். வரும் நாட்களில் பொதுமக்கள் கூடும் அனைத்து பகுதிகளிலும் சுகாதார பணி மேற்கொள்ள ஆலோசனை நடத்தி வருவதாக மகிழ்ச்சியுடன் கூறுகின்றனர்.

The post சமூக வலைதளத்தில் ஒன்றிணைந்து விராலிமலை மலைக்கோயிலில் 300 இளைஞர்கள் உழவாரப்பணி appeared first on Dinakaran.

Related Stories: