×

பவானி அருகே வாய்க்காலுக்குள் பாய்ந்த கார் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பிய தம்பதி

 

பவானி, டிச. 30: பவானி அருகே காலிங்கராயன் வாய்க்காலுக்குள் கார் பாய்ந்தது. அதிர்ஷ்டவசமாக தம்பதி உயிர் தப்பினர்.  ஈரோடு மாவட்டம் பவானி அருகே உள்ள ராணா நகரை சேர்ந்தவர் ராஜேஷ். அரிசி வியாபாரி. இவரது மகன் ஸ்டீபன் (27). இவர் தனது மனைவியுடன் வெளியூர் சென்றுவிட்டு நேற்று முன்தினம் நள்ளிரவு பவானி திரும்பிக் கொண்டிருந்தார்.

கோவை-சேலம் தேசிய நெடுஞ்சாலை வழியாக வந்த இவர் காவேரி ஆற்றின் பாலம் அருகே காலிங்கராயன் வாய்க்கால் கரை வழியாக குறுக்குப் பாதையில் பவானிக்கு செல்ல காரை திருப்பினார். காலிங்கராயன்பாளையம் சுடுகாடு அருகே சென்றபோது ரோட்டில் குறுக்கிட்ட நாய் மீது மோதாமல் இருக்க காரை இடது புறமாக திருப்பினார். அப்போது, கட்டுப்பாட்டை இழந்த கார் வாய்க்காலுக்குள் பாய்ந்தது. வாய்க்காலில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியதால் கார் தண்ணீரில் மெதுவாக மூழ்கியது.

கார் தண்ணீரில் மூழ்குவதை அறிந்த கணவன், மனைவி இருவரும் சுதாரித்துக்கொண்டு கார் கதவை திறந்து கொண்டு கரையேறினர். இது குறித்து பவானி தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு படையினர் மீட்பு வாகனத்தின் உதவியுடன் தண்ணீரில் மூழ்கிய காரை தூக்கி கரைக்கு கொண்டு வந்தனர். வாய்க்காலில் பாய்ந்த காரில் கணவன், மனைவி இருவரும் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

The post பவானி அருகே வாய்க்காலுக்குள் பாய்ந்த கார் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பிய தம்பதி appeared first on Dinakaran.

Tags : Bhavani ,Kalingarayan canal ,Rajesh ,Rana Nagar ,Erode district ,Stephen ,
× RELATED பவானி காலிங்கராயன் வாய்க்காலில் தண்ணீர் திறப்பு