பெரியாருக்கும், தலைவர் கலைஞருக்கும் கிடைக்காத வாய்ப்பு நல்லகண்ணு அய்யாவுக்கு கிடைத்திருக்கிறது. 100 வயதைக் கடந்து நமக்கு வழிகாட்டியும், தமிழ்ச் சமுதாயத்துக்காக இன்னும் உழைக்க தயாராக இருக்கிறார். இந்த நேரத்தில் நல்லகண்ணுவின் 80வது பிறந்த நாள் விழாவை நான் நினைத்து பார்க்கிறேன். அந்த விழாவை மறைந்த நம்முடைய தா.பாண்டியன் முன்னின்று நடத்திய விழா அது. அந்த விழாவில் தலைவர் கலைஞர் பங்கெடுத்துக் கொண்டு நல்லகண்ணுவை வாழ்த்தினார்.
தலைவர் கலைஞரைவிட நல்லகண்ணு ஒரு வயதுதான் இளையவர். அதை குறிப்பிட்டு பேசிய கலைஞர், என்ன சொன்னார் தெரியுமா? “வயதால் எனக்கு தம்பி; அனுபவத்தால் எனக்கு அண்ணன்”, “என்னைவிட வயதால் இளையவர், ஆனால், அனுபவத்தாலும், தியாகத்தாலும் நம்மையெல்லாம் விட மூத்தவர்” என்று குறிப்பிட்டார். 2001ல் நடைபெற்ற அதிமுக ஆட்சியில் தலைவர் கலைஞர் அராஜகமாக கைது செய்யப்பட்டதும், அந்த கைதை கண்டித்து முதன் முதலாக அறிக்கை வெளியிட்டவர் யார் தெரியுமா? நம்முடைய நல்லகண்ணுதான்! இத்தனைக்கும் அப்போது இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் அதிமுகவின் கூட்டணியில் இருந்தார்.
அதைப் பற்றியெல்லாம் கவலைப்படாமல் அந்த அராஜகத்தை நல்லகண்ணு கண்டித்தார். நல்லகண்ணுவுக்கு, அண்ணல் அம்பேத்கர் விருது வழங்கினார் கலைஞர். நான் 2022ல் தகைசால் தமிழர் விருதை வழங்கினேன், இதுதான் எனக்கு கிடைத்த பெருமை. அம்பேத்கர் விருதை பெறும்போது, தமிழ்நாடு அரசு சார்பில் ஒரு லட்சம் ரூபாய் அய்யாவுக்கு கொடுக்கப்பட்டது. அதில் ஐம்பதாயிரத்தை, இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கும், இன்னொரு ஐம்பதாயிரத்தை விவசாய சங்கத்திற்கும் கொடுத்துவிட்டார் நல்லகண்ணு.
இப்போது, நம்முடைய ஆட்சி வந்த பிறகு என்னுடைய கரத்தால், தகைசால் தமிழர் விருது கொடுத்தபோது, அப்போது 10 லட்சம் ரூபாயை தந்தோம். அந்த 10 லட்ச ரூபாயை மட்டுமல்ல, அதனுடன் 5 ஆயிரம் ரூபாயைச் சேர்த்து, 10 லட்சத்து 5 ஆயிரம் ரூபாயை தமிழ்நாடு அரசுக்கே நிவாரண நிதியாக அளித்தவர்தான் நல்லகண்ணு. அவரின் 80வது பிறந்தநாளின்போது, அன்றைய இந்தியக் கம்யூனிஸ்ட் செயலாளர் தா.பாண்டியனும், பொருளாளர் எம்.எஸ்.தாவீத்தும், ஒரு கோடி ரூபாயை திரட்டி தந்தார்கள்.
அந்த ஒரு கோடி ரூபாயையும் மேடையிலேயே இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கே கொடுத்துவிட்டவர் தான் நல்லகண்ணு. அதே மேடையில், தமிழ்ச் சான்றோர் பேரவை அருணாசலமும், கவிஞர் இளவேனிலும் இணைந்து எடுத்த முயற்சியின் காரணமாக, கார் ஒன்றை வாங்கி, தலைவர் கலைஞர் மூலமாக சாவியை ஒப்படைத்தார்கள். அந்தக் காரையும் இயக்கத்திற்காக கொடுத்து விட்டார். இவ்வாறு, இயக்கம் வேறு, தான் வேறு என்று நினைக்காமல், இயக்கத்திற்காகவே, இயக்கமாவே வாழ்ந்துகொண்டு இருக்கக்கூடிய மாமனிதரை நினைத்து பெருமிதம் கொள்ளாமல் இருக்க முடியுமா?
தாமிரபரணியைக் காக்க அவர் நடத்திய போராட்டம் பற்றி அனைவருக்கும் தெரியும்! அப்போது சென்னை உயர்நீதிமன்றம் என்ன சொல்லியது தெரியுமா? “நமக்கெல்லாம் தனிப்பட்ட வேலை என்பது வீட்டு வேலையாக அமைகிறது. ஆனால், இந்த மனிதருக்கு எந்த நேரமும் பொதுமக்களைப் பற்றிய சிந்தனையும், அவர்களுக்காக உழைப்பதைத் தவிர வேறு வேலையே இல்லை” என்று சென்னை உயர்நீதிமன்றமே பாராட்டியது. நல்லகண்ணுவின் வழித்தடத்தில் நாமும் நடப்போம்.
நூற்றாண்டு கண்டுவிட்ட நல்லகண்ணு இன்னும் பல்லாண்டுகள் வாழ்க, வாழ்க. இவ்வாறு அவர் பேசினார். விழாவில் டி.ராஜா, வைகோ, முத்தரசன், மக்கள் இயக்கங்களின் தேசிய கூட்டமைப்பு நிறுவனர் மேதா பட்கர், முன்னாள் நீதியரசர் சந்துரு, கவிஞர் வைரமுத்து, விஐடி பல்கலைக்கழக வேந்தர் விசுவநாதன், முன்னாள் தலைமைச் செயலாளர் இறையன்பு, ஒடிசா மாநிலத்தின் முன்னாள் முதல்வரின் ஆலோசகர் பாலகிருஷ்ணன், முன்னாள் மேயர் சைதை துரைசாமி, இஸ்ரோ முன்னாள் இயக்குநர் மயில்சாமி அண்ணாதுரை உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
The post இயக்கம் வேறு, தான் வேறு என்று நினைக்காமல் இயக்கமாகவே வாழ்கிறார் நல்லகண்ணு: நூற்றாண்டு பிறந்தநாள் விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு appeared first on Dinakaran.