×

ரூ.21 கோடி மதிப்பீட்டில் அம்மா உணவகங்களை புனரமைக்கும் பணிகள் தீவிரம்

சென்னை: ெசன்னையில் உளள அம்மா உணவகங்களை ரூ.21 கோடியில் புனரமைக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதனால் விரைவில் புதுப்பொலிவுடன் இயக்க சென்னை மாநகராட்சி திட்டமிட்டுள்ளது. தமிழகத்தில் ஏழை, எளிய மக்கள் பசியால் வாடிவிடக் கூடாது என்பதற்காக மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவால் கடந்த 2013ம் ஆண்டு அம்மா உணவகத்தை தொடங்கினார். இங்கு காலை, மதியம், இரவு என 3 வேளையும் மிகக் குறைந்த விலையில் உணவுகள் வழங்கப்பட்டு வருகிறது. சென்னையில் முதன் முதலில் தொடங்கப்பட்ட அம்மா உணவகம் திட்டத்திற்கு மக்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்தது. இதனால், சென்னை மாநகராட்சி சார்பில் கடந்த 2013 முதல் 2016 காலகட்டத்தில் வார்டுக்கு இரண்டு என மொத்தம் 407 இடங்களில் அம்மா உணவகங்கள் திறக்கப்பட்டன. இந்த உணவகங்களுக்கு பொது மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்றிருந்த இந்த அம்மா உணவகங்கள் தமிழ்நாடு முழுவதும் ஏராளமான இடங்களில் இயங்கி வருகின்றன. சென்னையை பொறுத்தவரை பல்வேறு காரணங்களுக்காக சில அம்மா உணவகங்கள் மூடப்பட்டு தற்போது 388 இடங்களில் அம்மா உணவகங்கள் செயல்பட்டு வருகின்றன. சென்னையில் அம்மா உணவங்கள் எல்லாமே மக்கள் அதிகம் வந்து செல்லும் பகுதிகளில் அமைக்கப்பட்டுள்ளன. இங்கு ஒரு இட்லி ரூ.1-க்கும் சாம்பார் சாதம், எலுமிச்சை சாதம் உள்ளிட்ட கலவை சாதம் ரூ.5-க்கும் 2 சப்பாத்தி ரூ.3-க்கும் விற்கப்பட்டு வருகின்றன. இது பொதுமக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது.

அம்மா உணவகங்கள் அதிமுக ஆட்சியில் ஆரம்பிக்கப்பட்ட போதிலும், அதை தொடர்ந்து ஆட்சி மாற்றம் ஏற்பட்டு திமுக ஆட்சி நடைபெற்று வருகிறது. ஆனாலும் அதே பெயரில் அம்மா உணவகங்கள் செயல்படும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்ததும் மக்கள் மத்தியில் பாராட்டை பெற்றுத் தந்தது. சென்னையில் உள்ள அம்மா உணவகங்கள் மூலம் தினசரி 2 லட்சம் இட்லி, 10 ஆயிரம் அளவில் சாதங்கள், 70 ஆயிரம் சப்பாத்திகள் விற்பனை செய்யப்படுகிறது. இதன் மூலம் தினசரி 5 லட்சம் ரூபாய் என, ஆண்டுக்கு 20 கோடி ரூபாய் வருவாய் கிடைக்கிறது. ஆனால், அதற்கான செலவு ஆண்டுக்கு 140 கோடி ரூபாய் ஆகிறது என்றும் இதனால், 120 கோடி ரூபாய் ஒவ்வொரு ஆண்டும் மாநகராட்சிக்கு நஷ்டம் ஏற்படுவதாகவும் கூறப்பட்டது. ஆனாலும் தொடர்ந்து அம்மா உணவகங்கள் இயக்கப்படும் என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார். இந்ந சூழ்நிலையில், அம்மா உணவகங்கள் தொடங்கப்பட்டு 12 ஆண்டுகளை கடந்த நிலையில், பல கட்டிடங்களின் உள் பகுதியில் சமையல் செய்யும் போது வெளியேறும் ஆவி, எண்ணெய் படிந்து சுவர்கள் அசுத்தமாக உள்ளன. பல இடங்களில் வெளிச்சமின்றி, போதிய மின் விளக்குகள் இல்லாமலும் உள்ளன. பொதுமக்கள் உண்பதற்கான மேசைகளின் கால்கள் உடைந்து அவை ஓரங்கட்டப்பட்டுள்ளன.

மேலும் கட்டிடத்தை சுற்றி உலோக தகடுகளால் அமைக்கப்பட்டுள்ள கூரைகளும் சேதமடைந்து காணப்பட்டது. இந்நிலையில், அம்மா உணவகத்தில் திடீர் ஆய்வு நடத்திய முதல்வர் மு.க.ஸ்டாலின், அம்மா உணவகங்களை மேம்படுத்த ரூ.21 கோடி ஒதுக்கீடு செய்து உத்தரவிட்டார். இந்த நிதியில், கட்டிடங்களில் உள்ள விரிசல்களை சரிசெய்வது, சுவர்களுக்கு வண்ணம் பூசுவது, முறையான கழிவுநீர் கட்டமைப்பை உருவாக்குவது உள்ளிட்ட பணிகளை மேற்கொள்ள திட்டமிட்டுள்ளது. இதை தொடர்ந்து, அம்மா உணவகங்களின் கட்டமைப்பை மேம்படுத்த மாநகராட்சி டெண்டர் கோரியது. தற்போது இதற்கான பணிகள் முடிவடைந்து அம்மா உணவகங்களில் சீரமைப்பு பணிகளை சென்னை மாநகராட்சி தீவிரப்படுத்தியுள்ளது. இந்த பணிகள் முடிவடையும் போது அம்மா உணவகங்கள் புதுப்பொலிவு பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதுமட்டுமல்ல, பயனாளிகளின் வருகையை அதிகரிக்க, ருசியான புதிய உணவு வகைகளை அறிமுகப்படுத்தவும் வாய்ப்புள்ளது என்றும் கூறப்படுகிறது.

முழு அளவில் பணிகள் நடைபெறும் அம்மா உணவகங்கள் மட்டும், பணிகள் முடிவடையும் வரை மூடுவதற்கான வாய்ப்புகள் உள்ளது என்றும் மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து, சென்னை மாநகராட்சி அதிகாரிகள் கூறியதாவது: தற்போது அனைத்து அம்மா உணவகங்களிலும், அன்றாட உணவு விநியோகப் பணிகள் பாதிக்காதவாறு புனரமைப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன. பல இடங்களில் கூரைகள் மாற்றப்பட்டு வருகின்றன. சுவர்களுக்கு வண்ணம் பூசுதல், மின்சார ஒயர்களை மாற்றுதல், மின் விளக்குகள் அமைத்தல் உள்ளிட்ட பணிகளும் நடைபெற்று வருகின்றன. மேலும் கடந்த 2013ம் ஆண்டு வாங்கப்பட்ட குளிர்சாதன பெட்டி, கிரைண்டர், மிக்சி உள்ளிட்ட மின்சாதன பொருட்கள் பழுதாகி கிடக்கும் நிலையில் அவற்றுக்கு பதிலாக புதிதாக வாங்கும் பணிகளும் நடைபெற்று வருகின்றன. இப்பணிகள் அனைத்தையும் வேகமாக முடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பணிகள் முடிந்து அம்மா உணவகங்கள் முழு அளவில் செயல்பாட்டுக்கு வரும் போது சென்னையில் உள்ள அனைத்து அம்மா உணவகங்களும் புதுப்பொலிவு பெறும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

 

The post ரூ.21 கோடி மதிப்பீட்டில் அம்மா உணவகங்களை புனரமைக்கும் பணிகள் தீவிரம் appeared first on Dinakaran.

Tags : Amma ,Chennai ,Chennai Corporation ,Chief Minister of ,Tamil Nadu ,Dinakaran ,
× RELATED குப்பை கழிவுகளை வீசுவதை தடுக்க...