சென்னை: பிஎஸ்எல்வி சி-60 ராக்கெட் நேற்று வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது. ஸ்பேட் எக்ஸ் விண்கலன் புவி வட்ட பாதையில் நிலை நிறுத்தப்பட்டது. இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம்(இஸ்ரோ) பல்வேறு விண்வெளி திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. வானிலை ஆராய்ச்சி, புவி கண்காணிப்பு, பாதுகாப்பு திட்டங்கள் உட்பட பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. கடந்த ஆண்டு சந்திரயான்- 3, ஆதித்யா எல்1 ஆகிய திட்டங்களை வெற்றிகரமாக செயல்படுத்தி உலகை திரும்பி பார்க்க வைத்தது. வணிக ரீதியாகவும் வெளிநாட்டு செயற்கைக் கோள்களை விண்ணில் நிலை நிறுத்தியதன் மூலம், உலக சந்தையில் முன்னணி அமைப்பாக இஸ்ரோ திகழ்கிறது.
இஸ்ரோ தனது கனவு திட்டமான மனிதர்களை விண்வெளிக்கு அனுப்பும் ககன்யான் திட்டத்தை செயல்படுத்த தீவிரமாக பணியாற்றி வருகிறது. ககன்யான் திட்டத்தின் கீழ் 2025ம் ஆண்டு விண்வெளிக்கு மனிதர்களை அனுப்ப திட்டமிடப்பட்டுள்ளது. அடுத்த படியாக 2035ம் ஆண்டுக்குள் விண்வெளியில் ஆய்வு மையத்தையும் நிறுவ திட்டமிடப் பட்டுள்ளது. இதற்கான முன் தயாரிப்பு திட்டமாக விண்வெளியில் விண்கலன்களை ஒன்றிணைக்கும் ஸ்பேஸ் டாக்கிங் எனப்படும் ஸ்பேட்எக்ஸ் திட்டத்தை செயல்படுத்த திட்டமிட்டது.
இந்த ஸ்பேட்எக்ஸ் திட்டத்தில் தலா 220 கிலோ எடை கொண்ட இரண்டு சிறிய விண்கலன் புவி வட்ட பாதையில் நிலைநிறுத்த திட்டமிடப்பட்டது. இந்த 2 விண்கலன்கள் ஸ்பேட்எக்ஸ் ஏ, ஸ்பேட்எக்ஸ் பி ஆகியவை பிஎஸ்எல்வி சி-60 ராக்கெட்டில் பொருத்தும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு, எரிபொருள் நிரப்புதல் உள்ளிட்ட அனைத்து ஆயத்த பணிகளும் முடிக்கப்பட்டு விண்ணில் செலுத்துவதற்கு தயார் நிலையில் வைக்கப்பட்டது. தொடர்ந்து ராக்கெட் மற்றும் விண்கலனை விஞ்ஞானிகள் தீவிரமாக கண்காணித்து வந்தனர். இந்த ராக்கெட் ஏவுதலுக்கான 25 மணி நேர கவுன்ட்டவுன் நேற்று முன்தினம் இரவு 9 மணிக்கு தொடங்கியது.
முன்னதாக நேற்று இரவு 9.58 மணிக்கு ஏவ திட்டமிடப்பட்டு பின்னர் 10 மணி 15 வினாடிகளில் விண்ணில் செலுத்தப்படும் என அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் ஆந்திர மாநிலம் ஹரிக்கோட்டாவில் உள்ள சதிஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தின் முதல் ஏவுதளத்திலிருந்து இருந்து நேற்று திட்டமிட்டப்படி 10 மணி 15 விநாடிகளில் ராக்கெட் விண்ணில் ஏவப்பட்டது. ராக்கெட் ஏவப்பட்ட 15 நிமிடம் 15 விநாடிகளில் ஸ்பேட்எக்ஸ் பி விண்கலனும், 15 நிமிடம் 20 விநாடிகளில் ஸ்பேட்எக்ஸ் ஏ விண்கலனும் பிரிந்து பூமியில் இருந்து 475 கி.மீ. உயரத்தில் திட்டமிடப்பட்ட புவி வட்ட பாதையில் வெற்றிகரமாக நிலை நிறுத்தப்பட்டது.
இந்த 2 விண்கலனும் ஒரே புவி வட்ட பாதையில் குறிப்பிட்ட இடைவெளிகளில் பயணிக்கும். ராக்கெட் ஏவப்பட்டு சில மணி நேரங்கள் வரை 10 மீட்டர் இடைவெளியில் பயணித்து பின்னர் இடைவெளி அதிகரிக்கப்பட்டு இன்றைய தினம் 20 கி.மீ இடைவெளிகளில் பயணிக்கும். பின்னர் ஒரு வாரம் கழித்து வரும் ஜனவரி 7ம் தேதி அன்று விண்கலன்கள் ஒன்றிணைக்கும் பணிகள் மேற்கொள்ளப்படும். இந்த பணி வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்டு பின் தான் ஸ்பேட்எக்ஸ் திட்டம் முழுமையாக வெற்றியடையும். இந்த இரண்டு விண்கலன்களும் ஒன்றிணைந்த பின் ஒரு விண்கலத்தில் இருந்து மற்றொரு விண்கலத்திற்கு மின் ஆற்றல் (எலக்ட்ரிக்கல் எனர்ஜி) அனுப்பப்படும்.
சந்திரயான் 4 திட்டத்தில் நிலவில் இருந்து மாதிரி எடுத்து திரும்புதல், இந்தியாவின் விண்வெளி மையம் உருவாக்குதல் போன்ற விண்வெளி திட்டங்களுக்கு இந்த தொழில்நுட்பம் மிக முக்கியத்துவம் வாய்ந்தது. இந்த திட்டம் வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்டால் அமெரிக்கா, ரஷ்யா, சீனாவை தொடர்ந்து ஸ்பேஸ் டாக்கிங் தொழில் நுட்பத்தை கொண்ட நான்காவது நாடு என்ற பெருமையை இந்தியா அடையும். விண்கலன்கள் வெற்றிகரமாக நிலைநிறுத்தப்பட்ட பின் விஞ்ஞானிகள் கரகோஷங்களை எழுப்பியும், ஒருவருக்கொருவர் கைகொடுத்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். தொடர்ந்து இஸ்ரோ தலைவர் சோம்நாத்‘‘இன்றைய திட்டம் வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்டது. திட்ட இயக்குநர் உட்பட அனைத்து விஞ்ஞானிகளுக்கும் வாழ்த்துகள்’’ என்றார்.
* 24 ஆய்வு கருவிகள்
இந்த பிஎஸ்எல்வி சி-60 ராக்கெட்டில் கடைசி கட்ட, 4 வது ராக்கெட் பாகத்தில் இஸ்ரோவின் 14 ஆய்வு கருவிகளும், தனியார் மற்றும் கல்வி நிறுவனங்களின் 10 ஆய்வு கருவிகளும் என மொத்தம் 24 ஆய்வு கருவிகளை கொண்ட புவி வட்ட ஆய்வு தொகுப்பு பூமியில் இருந்து 350 கி.மீ தூரத்தில் புவி வட்ட பாதையில் வலம் வந்து ஆய்வுகளை மேற்கொள்ளவுள்ளது. இதற்கு முன்பு வரை கடைசி கட்ட ராக்கெட் பாகங்கள் பயன்கள் ஏதும் இல்லாமல் சில மாதங்களுக்கு பின் எரிக்கப்படும் அல்லது கைவிடப்படும் நிலையில் இந்த முறை இது செயல்படுத்தப்படுகிறது குறிப்பிடத்தக்கது.
The post பிஎஸ்எல்வி சி-60 ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது: ஸ்பேட் எக்ஸ் விண்கலன் புவி வட்ட பாதையில் நிலை நிறுத்தம் appeared first on Dinakaran.