×

அண்ணா பல்கலை மாணவி பாலியல் வன்கொடுமை விவகாரம்; தேசிய மகளிர் ஆணையம் முதற்கட்ட விசாரணை நடத்தியது: இறுதி அறிக்கையை ஒன்றிய அரசிடம் சமர்ப்பிக்க உள்ளனர்

சென்னை: அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டது தொடர்பாக தேசிய மகளிர் ஆணையம் நேற்று விசாரணை நடத்தியது. இறுதி கட்ட அறிக்கையை ஒன்றிய அரசிடம் சமர்ப்பிக்கப் போவதாக ஆணையம் தெரிவித்துள்ளது. சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் கடந்த 23ம் தேதி மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கானது தமிழகத்தையே அதிர வைத்தது. பாலியல் வன்கொடுமை செய்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ள நபர் ஞானசேகரன் கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்த வழக்கில் சென்னை உயர் நீதிமன்றம் அமைத்துள்ள 3 ஐபிஎஸ் அதிகாரிகள் கொண்ட குழுவும் விசாரணை மேற்கொள்கிறது. மேலும் இந்த வழக்கை தேசிய மகளிர் ஆணையம் தாமாக முன் வந்து விசாரணைக்கு எடுத்தது. தேசிய மகளிர் ஆணைய உறுப்பினர்கள் மம்தா குமாரி, பிரவீன் ஷிவானிடே ஆகியோரை கொண்ட இருநபர் குழு இந்த வழக்கு குறித்து உண்மை கண்டறியும் பணியில் ஈடுபடும் என்று தேசிய மகளிர் ஆணையம் அறிவித்திருந்தது. இதையடுத்து இந்த அதிகாரிகள் நேற்று முன்தினம் சென்னைக்கு வந்ததனர். நேற்று அவர்கள் அண்ணா பல்கலைக்கழகத்திற்கு வருகை புரிந்து விசாரணை மேற்கொண்டனர். சுமார் 7 மணி நேரமாக நடைபெற்ற முதற்கட்ட விசாரணையில் அண்ணா பல்கலைக்கழகத்தில் மாணவர்களுக்கான பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள், சிசிடிவி கேமராக்கள் குறித்தும் விசாரணை நடைபெற்றது.

மேலும் பேராசிரியர்கள், பல்கலைக்கழக அதிகாரிகள், மாணவர்களிடமும் மகளிர் ஆணைய அதிகாரிகள் விசாரணை நடத்தினர். விசாரணையை மையமாக வைத்து தமிழக ஆளுநர் ஆர்.என் ரவியை நேரடியாக சந்தித்து ஆலோசனையில் ஈடுபட்டனர்.

ஆலோசனைக்கு பின் தேசிய மகளிர் ஆணைய உறுப்பினர் மம்தா குமாரி நிருபர்களிடம் கூறியதாவது:
முதற்கட்ட விசாரணையில் அண்ணா பல்கலைக்கழகத்தில் முக்கிய துறைகளுக்கு சென்று விசாரணை நடத்தியுள்ளோம். விசாரணை முழுமையாக முடியவில்லை, இன்னும் சிலவற்றை விசாரிக்க வேண்டியுள்ளது. முதற்கட்ட விசாரணையை மையமாக வைத்து ஆளுநரை நேரடியாக சந்தித்து ஆலோசனை நடத்தினோம். நாளையும் (இன்று) விசாரணை தொடரும். விசாரணை நிறைவு பெற்ற பின் டெல்லி சென்று ஒன்றிய அரசிடம் இறுதி அறிக்கை சமர்ப்பிக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

The post அண்ணா பல்கலை மாணவி பாலியல் வன்கொடுமை விவகாரம்; தேசிய மகளிர் ஆணையம் முதற்கட்ட விசாரணை நடத்தியது: இறுதி அறிக்கையை ஒன்றிய அரசிடம் சமர்ப்பிக்க உள்ளனர் appeared first on Dinakaran.

Tags : Anna University ,National Commission for Women ,Union Government ,Chennai ,Chennai… ,Dinakaran ,
× RELATED அண்ணா பல்கலைக்கழகத்தில் மாணவி...