ஐயப்பன் அறிவோம் 45: அச்சன்கோயில்

அகத்தியரின் அறிவுரைப்படி சொரிமுத்து அய்யனார் கோயிலுக்கு வந்து வழிபட்டார் கன்னிச்சாமியான மன்னர் ராஜசேகரபாண்டியன். தொடர்ந்து இக்கோயில் போன்று ஒற்றுமையுள்ள ஐயப்பனின் சொந்த வாழ்விடம் என அழைக்கப்படுகின்ற இரண்டாவது சக்கரமாக அமைந்துள்ள சுவாதிட்டானம்(இடுப்பு) எனப்படும் அச்சன்கோயிலுக்கு (கேரளா கொல்லம்) ராஜசேகரபாண்டியன் வந்தார்.  அச்சன் என்றால் மலையாளத்தில் தந்தை, கடவுள் என பொருள் உண்டு, பக்தர்களின் அச்சத்தை நீக்கும் கடவுள் குடியிருக்கும் இடம்(கோயில்) அச்சன்கோயில் என்றழைக்கப்படுகிறது.

இங்கு மணிகண்ட முத்தையன் என்ற தர்மசாஸ்தா அரசனாக(காடுகளின் அரசன்) வீற்றிருக்கிறார். சாஸ்தா அமர்ந்த நிலையில் ஒரு கையில் சந்தன கிண்ணம், தீர்த்தம் பிரசாதம், மற்றொரு கையில் வாள் ஏந்திய நிலையில். பூர்ணாதேவி, புஷ்கலாதேவி ஆகிய இரண்டு மனைவிகள் நின்றபடி மலர் தூவி பூஜை செய்வது போன்று அமைக்கப்பட்டுள்ளது. சபரிமலையில் 18 படிகள் இருந்தாலும் ஐயப்பன் பிரம்மச்சாரியாக தவக்கோலத்தில் இருப்பதால் அங்கு குறிப்பிட்ட வயதுடைய பெண்கள் அங்குள்ள 18 படி ஏற முடியாது.

ஆனால் இங்கு இரண்டு மனைவிகளுடன் கல்யாண சாஸ்தாவாக அமைந்திருப்பதால் இங்கு 18 படிகள் அமைக்கப்பட்டு அனைத்து வயதுடைய பெண்களும் வந்து செல்லும் நடைமுறையை சாஸ்தா வழங்கியுள்ளதாக கூறப்படுகிறது. அதன்படி சபரிமலை தர்மசாஸ்தாவிற்கு அடுத்தப்படியாக சிறப்பு வாய்ந்தவராக பார்க்கப்படுகிறார் இந்த முத்தையா சாஸ்தா. கேரளாவில் பரசுராமரால் சிலை அமைக்கப்பட்ட பெருமைக்குரிய கோயில் கருவறை சிலைகள் எத்தனை இருந்தாலும், நாளடைவில் அவை சில காரணங்களால் அழிந்து போனது.

அதற்கு பதிலாக புதிய சிலைகள் மாற்றி அமைக்கப்பட்டது. ஆனால் அழியாமல் பழைய சிலை(விக்கிரகம்) உள்ள ஒரே இடம் இந்த அச்சன்கோயில் தர்மசாஸ்தா. சாஸ்தா கையில் உள்ள சந்தன கிண்ணத்தில் சந்தனம் மூலிகை தீர்த்த பிரசாதம் உள்ளது. காடான இப்பகுதியில் பாம்பு உள்ளிட்ட விஷ ஜந்துக்கள் தீண்டினால் மருத்துவமனை செல்லாமல், இக்கோயிலுக்கு வந்து சந்தனம், தீர்த்தததை மருந்தாக உண்ணும் பழக்கம் இன்று வரை உள்ளது.

இதனால் இங்கு நிரந்தரமாக நம்பூதிரிகள்(அர்ச்சகர்) தங்குகின்றனர். அச்சன்கோயிலில் அரசனாக இருப்பதால், காவல் தெய்வமான கருப்பணசாமிக்கு முக்கிய இடம் உண்டு. எனவே கருப்பண சாமியை வணங்கி அவர் அனுமதி பெற்ற பிறகே தர்மசாஸ்தாவை வணங்க வேண்டும் என்ற நம்பிக்கை உள்ளது. சாமியே சரணம் ஐயப்பா நாளையும் தரிசிப்போம்

The post ஐயப்பன் அறிவோம் 45: அச்சன்கோயில் appeared first on Dinakaran.

Related Stories: