இதன்படி குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் சிறப்பு பரிசு தொகுப்பு வழங்கப்பட்டு வருகிறது. இந்த திட்டம் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், ரொக்க பணத்துடன், அரிசி, சர்க்கரை, கரும்பு உள்ளிட்ட பொருட்களுடன் பொங்கல் பரிசை ஒவ்வொரு ஆண்டும் அரசு வழங்குகிறது. இந்நிலையில், வருகிற பொங்கல் பண்டிகையையொட்டி(2025ம் ஆண்டு) தலா ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை மற்றும் ஒரு முழுக்கரும்பு வழங்கிட தமிழக அரசு நேற்று அறிவிப்பு வெளியிட்டது. இது தொடர்பாக கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் நேற்று வெளியிட்ட அறிவிப்பு:
தமிழர்களின் பழம்பெரும் பாரம்பரியத்தையும், பண்பாட்டையும் பிரதிபலிக்கும் விழாவாகப் பொங்கல் பண்டிகை தமிழ்நாட்டில் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. இந்நாள் அறுவடைத் திருவிழாவாகவும், இயற்கைக்கும், உழவர் பெருங்குடி மக்களுக்கும் அவர்தம்மோடு சேர்ந்து உழைத்த கால்நடைகளுக்கும், நன்றியையும் மகிழ்ச்சியையும் தெரிவிக்கும் விழாவாகவும் ஒவ்வொரு ஆண்டும் கொண்டாடப்படுகிறது. 2025ம் ஆண்டு தைப்பொங்கலைச் சிறப்பாகக் கொண்டாடும் வகையில் அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்கள் மற்றும் இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்பத்தினருக்கு தலா ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை மற்றும் ஒரு முழுக்கரும்பு வழங்கிட அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
இதன் மூலம் 2,20,94,585 அரிசி குடும்ப அட்டைதாரர்களும், இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்பத்தினர்களும் பயன்பெறுவார்கள். இதனால் அரசுக்கு ரூ.249.76 கோடி செலவு ஏற்படும். மேலும், பொங்கல் திருநாளை முன்னிட்டு வழங்கப்படவுள்ள இலவச வேட்டி சேலைகள் அனைத்தும் தயார் செய்யப்பட்டு, அனைத்து மாவட்டங்களுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. பொங்கல் பரிசுத் தொகுப்புடன் இவற்றையும் சேர்த்து வழங்குவதற்குத் தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இவ்வாறு அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.
பொங்கல் பரிசு தொகுப்பை வழங்கிட அனைத்து மாவட்டங்களிலும் ஏற்பாடுகள் துரிதமாக நடைபெற்று வருகிறது. பொங்கல் தொகுப்புடன் இலவச வேட்டி, சேலையும் வழங்கப்பட உள்ளது. அதனால், ரேஷன் கடைகளில் நெரிசல் ஏற்படக்கூடும் என்பதால் பயனாளிகளுக்கு டோக்கன் வழங்கும் முறை பின்பற்றப்பட உள்ளது. ஒவ்வொரு ரேசன் கடைகளிலும் குடும்ப அட்டைதாரர்களுக்கு எந்த தேதியில், எந்த நேரத்தில் பொங்கல் பரிசுத்தொகுப்பு வழங்கப்படும் என்பதை குறிப்பிட்டு டோக்கன் வழங்கும் பணி ஜனவரி 9ம் தேதி முதல் தொடங்கும். ரேசன் கடை ஊழியர்கள் மூலம் டோக்கன் விநியோகிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
The post அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கும் பொங்கல் பரிசு தொகுப்பு அறிவிப்பு: இலவச வேட்டி, சேலையும் சேர்த்து வழங்கப்படும் appeared first on Dinakaran.