மகள் வழி பேரனை இளைஞர் அணி தலைவராக அறிவித்ததால் ராமதாஸ் – அன்புமணி நேரடி மோதல்: பாமக பொதுக்குழு மேடையில் காரசார வாக்குவாதம்

* நான் சொல்வதை கேட்காவிட்டால் கட்சியை விட்டு வெளியே போ என ராமதாஸ் மிரட்டல்

* பனையூர் அலுவலகத்தில் தனியாக சந்திக்க தொண்டர்களுக்கு அன்புமணி அழைப்பு

விழுப்புரம்: வானூர் அருகே நடந்த பாமக சிறப்பு புத்தாண்டு பொதுக்குழு கூட்டத்தில், தனது மூத்த மகளின் மகன் முகுந்தனை இளைஞரணி தலைவராக நியமிப்பதாக, அக் கட்சியின் நிறுவனர் ராமதாஸ் அறிவித்தார். இதை கட்சித் தலைவர் அன்புமணி ஏற்கவில்லை. பொதுக்குழு கூட்ட மேடையிலேயே இதுதொடர்பாக தந்தைக்கும் மகனுக்கும் வார்த்தைப் போர் வெடித்தது. இதனால் பாமகவில் பெரும் சலசலப்பு ஏற்பட்டு, பரபரப்பு நிலவுகிறது. விழுப்புரம் மாவட்டம் வானூர் அருகேயுள்ள பட்டானூரில் அமைந்துள்ள தனியார் திருமண மண்டபத்தில் பாமகவின் சிறப்பு புத்தாண்டு பொதுக்குழு கூட்டம் அக்கட்சியின் தலைவர் அன்புமணி மற்றும் பாமகவின் நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் தலைமையில் நேற்று நடைபெற்றது.

கூட்டம் துவக்கத்தின்போது மறைந்த முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங் இறப்பிற்கு மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது. தொடர்ந்து கட்சியின் தலைவர் அன்புமணி பேசும்போது, 2025ம் ஆண்டு நாம் அர்ப்பணிப்போடு பணியாற்றினால் 2026ம் தேர்தலில் வெற்றி பெறுவோம். 2019ம் ஆண்டு நாம் எடுத்த தவறான முடிவால் மீண்டு வரமுடியவில்லை. 2026ம் ஆண்டு தமிழகத்தில் கூட்டணி ஆட்சிதான். அக்கூட்டணியில் பாமக இருக்கும். பேனரில் அய்யா படம் மட்டும் போடுங்கள். என் படம் உள்பட யார் படமும் போடவேண்டாம். இதற்காக கட்சியில் குழப்பம் விளைவிக்க வேண்டாம் என்றார். அதை தொடர்ந்து பொதுக்குழுவில் 30 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

அன்புமணி பேசி முடித்ததும். பாமக நிறுவனர் ராமதாஸ் பேசத்தொடங்கினார். அவர் பேசும்போது, பாமகவின் மாநில இளைஞர் அணித் தலைவர் முகுந்தன் என்று அறிவித்ததோடு அவருக்கு அனைவரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்றார். முகுந்தன் மாநில இளைஞர் அணி தலைவர் பொறுப்பை ஏற்று அன்புமணிக்கு உதவியாக…என்று கூறிக்கொண்டிருக்கும்போது, உடனே குறுக்கிட்ட அன்புமணி, மேடையிலேயே இதற்கு எதிர்ப்பு தெரிவித்தார். ‘கட்சியில் 4 மாதத்திற்கு முன்புதான் முகுந்தன் வந்திருக்கிறார். அவருக்கு இளைஞர் அணி என்றால் என்ன தெரியும்.. அனுபவம் எப்படி இருக்கும்.

வேறு யாரையாவது, நல்ல அனுபவசாலியை நியமியுங்கள். களத்தில் நல்ல அனுபவம் வேணும், நல்ல திறமைகள் வேணும். வந்த உடனேயே அவரை இளைஞர் அணி பொறுப்பில் போட்டால் எப்படி..’ என்று மேடையிலேயே அன்புமணி கேள்வி எழுப்பினார்.  இதற்கு அப்போதே ராமதாஸ் மறுத்து பதில் கூறினார். இதைத்தொடர்ந்து இருவருக்கும் வார்த்தை மோதல் வெடித்தது. இதனால் ஆத்திரமடைந்த ராமதாஸ், ‘‘ நான் சொல்வதைதான் எல்லோரும் கேட்க வேண்டும். நான் வளர்த்த கட்சி, நான் தொடங்கிய கட்சி…யாராக இருந்தாலும் நான் சொல்வதைத்தான் கேட்க வேண்டும்.

நான் சொல்வதை கேட்கவில்லை என்றால் யாரும் இந்த கட்சியில் இருக்க முடியாது’’ என்று ஆவேசமாக கூறினார். அதற்கு அன்புமணி, ‘‘நீங்கள் சொல்லுங்க…’’ என்று கூறவே, மீண்டும் மருத்துவர் ராமதாஸ், ‘‘இது நான் உண்டாக்கிய கட்சி. நான் சொல்வதை கேட்கவில்லை என்றால் யாரும் கட்சியில் இருக்க முடியாது..’’ என்றார். அதற்கு அன்புமணி, ‘‘அது சரி…’’ என்று கூறவே, குறுக்கிட்ட ராமதாஸ், ‘‘என்ன சரின்னா சரி… போ… அப்போ…’’ என்றதோடு, ‘‘நான் மீண்டும் சொல்கிறேன். மாநில இளைஞர் அணித் தலைவராக முகுந்தன் நியமிக்கப்படுகிறார்..’’ என்று அறிவித்து, எதிரே உள்ளவர்களை பார்த்து, ‘‘கையைத் தட்டுங்கப்பா..’’ என்று சத்தம் போட்டார்.

உடனே அன்புமணி, ‘‘குடும்பத்தில் இருந்து இன்னொன்றை போடுங்க…’’ என்று விரக்தியுடன் கூறியபடி தான் கையில் வைத்திருந்த மைக்கை தூக்கி மேஜையில் வீசி எறிந்தார். கடும் கோபத்தில் இருந்த அன்புமணி, தனக்கு பனையூரில் ஒரு அலுவலகம் உள்ளது. அங்கு வந்து என்னை தொண்டர்கள் சந்திக்கலாம் என்று கூறி மேடையில் இருந்து எழுந்தார். இதனால் கூட்டத்தில் சலசலப்பு ஏற்பட்டது.
ராமதாஸ் கார் மறிப்பு: ராமதாஸ், கூட்டத்தை முடித்துவிட்டு தனது காரில் புறப்பட்டு செல்லும்போது அவரது காரை வழிமறித்த அன்புமணியின் ஆதரவாளர்கள் எதிர்ப்பு கோஷம் எழுப்பினர்.

இதையடுத்து அங்கிருந்த நிர்வாகிகள் சிலர், சமாதானப்படுத்தி விலக்கவே அவரது கார் அங்கிருந்து புறப்பட்டது. தந்தை, மகன் மோதலால், கட்சி இரண்டாக பிரிந்துவிட்டதே என்று அங்கிருந்த பாமக தொண்டர்கள் அங்கலாய்த்ததை காண முடிந்தது. கடந்த ஓராண்டாகவே அன்புமணிக்கும், அவரது தந்தை ராமதாசுக்கும் கருத்து வேறுபாடு இருந்ததாக பேசப்பட்டு வந்தது. தற்போது இது கட்சி மேடையில், பொதுவெளியில் வெடித்துள்ளது.

* போன பிறகு போயிட்டாங்களேன்னு அழக் கூடாது.. இணையத்தில் வைரலாகும் ராமதாசின் பழைய டிவிட்..
பாமக பொதுக்குழுவில் தந்தை, மகன் இடையே மோதல் வெடித்த நிலையில், மருத்துவர் ராமதாஸ் கடந்த 2022 இதே டிசம்பரில் சமூக வலைத்தளத்தில் வெளியிட்ட பழைய டிவிட் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. அதில், நம்மள படைச்சது சாமின்னு சொல்றாங்க. ஆனா, நம்மள படைச்ச உண்மையான சாமி அப்பனும், ஆத்தாளும்தான்.

அவங்க போனதுக்கப்புறம் போயிட்டாங்களேன்னு அழுகுறதைவிட..வாழ்ற காலத்துல அவங்கள பொக்கிஷமா பாத்துக்கிறது ஒவ்வொரு புள்ளையோட கடமை…முத்துக்கு முத்தான என்ற திரைப்படத்தின் இறுதிக் காட்சியில் வரும் வசனம்தான் இது. அனைவரும் பின்பற்ற வேண்டிய பாடம் இது, என அதில் ராமதாஸ் பதிவிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

* யார் இந்த முகுந்தன்?
பாமக நிறுவனர் ராமதாசால், இளைஞரணி தலைவராக அறிவிக்கப்பட்ட முகுந்தன் யார் என்பது குறித்து பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது. வானூரில் நேற்று நடந்த பாமக பொதுக்குழுவில் கட்சியின் புதிய இளைஞரணி தலைவராக முகுந்தனை நியமித்து மருத்துவர் ராமதாஸ் அறிவித்தார். முகுந்தன், ராமதாசின் மூத்த மகள் காந்திமதியின் மகன் ஆவார். அதாவது, ராமதாசின் பேரன் ஆவார். முகுந்தனின் தந்தை பரசுராமனும் மருத்துவராக பணிபுரிந்து வருகிறார்.

கடந்த நாடாளுமன்ற தேர்தலின்போது கட்சியில் தீவிர பணியாற்றினார். அதைத் தொடர்ந்து சமூகநீதி பேரவையின் மாநில செயலாளராக நியமிக்கப்பட்டார். மேலும் மருத்துவர் ராமதாசுக்கு உதவியாகவும் இருந்து வருகிறார். ஏற்கனவே அன்புமணி மாநில இளைஞர் அணி தலைவர் பதவி வகித்து தலைவராக நியமிக்கப்பட்டுள்ளதால், இப்பதவி பாமகவில் முக்கியத்துவம் வாய்ந்ததாக நிர்வாகிகளால் பார்க்கப்படுகிறது. இதற்கு முன்பு ஜி.கே.மணியின் மகன் தமிழ்குமரன் இளைஞரணி தலைவர் பதவியில் இருந்தார்.

தமிழ்குமரன் பதவி விலகிய நிலையில், புதிய தலைவராக தற்போது முகுந்தன் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளார். ஏற்கனவே இதுதொடர்பாக பாமகவுக்குள் தகவல் கசிந்து பரபரப்பாக பேசப்பட்டு வந்தன. எந்த நேரமும் ராமதாசிடம் இருந்து இதுபற்றிய அறிவிப்பு வெளியாகலாம் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இதற்கு அன்புமணி கடும் எதிர்ப்பு தெரிவித்ததால், நேரடியாக கட்சியின் பொதுக்கூட்ட மேடையிலேயே ராமதாசும், அன்புமணியும் மோதிக் கொண்டனர்.

* 2026ல் யாருடன் கூட்டணி என்பதை நான் பார்த்துக் கொள்கிறேன்: ராமதாஸ்
வானூர் அருகே நடந்த பாமக பொதுக்குழு கூட்டத்தில் பாமக நிறுவனர் ராமதாஸ் பேசியதாவது: பாமகவிற்கு தனி வரலாறு உள்ளது. மக்களால் உருவாக்கப்பட்ட கட்சி பாமக. கும்மிடிப்பூண்டி முதல் கன்னியாகுமரி வரை 95 ஆயிரம் கிராம மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தி கட்சியை கொண்டு வந்தேன். 1989ம் ஆண்டு வன்னியர் சங்க நிர்வாகக்குழு கூட்டத்திற்கு பிறகு பல்வேறு அடக்குமுறைகளுக்கு இடையே பாமக தொடங்கப்பட்டது. கட்சி தொடங்கி 35 ஆண்டுகள் கடந்தும் ஆட்சியை பிடிக்க முடியவில்லை.

ஒவ்வொரு சட்டப்பேரவை தொகுதியில் ஒரு லட்சம் வாக்குகள் பெற்றால், வெற்றி நம் பக்கம். 2026ம் ஆண்டு கூட்டணி ஆட்சிதான். யாருடன் கூட்டணி என்பதை நான் பார்த்துக் கொள்கிறேன். ஒருமுறை தப்பு செய்தால் மீண்டும் தப்பு செய்வோம் என்று அர்த்தம் இல்லை. அது எந்த பாதை என்பதை அடுத்த ஆண்டு பொதுக்குழுவிலோ அதற்கு முன்போ முடிவு செய்வோம். அடுத்த ஆட்சியில் நாம் பங்கேற்போம்.தமிழகம், புதுவையில் ஆட்சி அமைக்கப்போவது நம் கூட்டணிதான். இங்குள்ளவர்கள் அமைச்சர்களாக இருப்பார்கள்.

நீங்கள் செல்போனை கீழே போட்டுவிட்டு உழைக்க வேண்டும். கட்சியை வளர்க்க வேண்டும். இரு கைகளை கூப்பி வணக்கம் சொல்லும்போது கைகளுக்கு இடையில் செல்போன் உள்ளது. இதை தவிர்க்க வேண்டும், என்றார். தமிழகத்தில் கடந்த நாடாளுமன்ற தேர்தலின்போது பாஜவுடன், பாமக கூட்டணி அமைத்தது. அப்போது ராமதாசுக்கு இக்கூட்டணியில் விருப்பமில்லை என தகவல் வெளியாகியது. ஆனால் இறுதியாக அன்புமணி சமாதானம் செய்து ராமதாசை ஒத்துக் கொள்ள செய்ததாக கூறப்பட்டது. தற்போது ராமதாஸ், அடுத்த கூட்டணியை நான் பார்த்துக் கொள்கிறேன் என அறிவித்திருப்பதன் மூலம் பாமக அடுத்த தேர்தலில் பாஜ அணியிலிருந்து வெளியேறக் கூடும் என்பது உறுதியாகியுள்ளது.

The post மகள் வழி பேரனை இளைஞர் அணி தலைவராக அறிவித்ததால் ராமதாஸ் – அன்புமணி நேரடி மோதல்: பாமக பொதுக்குழு மேடையில் காரசார வாக்குவாதம் appeared first on Dinakaran.

Related Stories: