அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் துன்புறுத்தல் வழக்கு; 3 பெண் ஐபிஎஸ் அதிகாரிகள் கொண்ட குழு விசாரணை: சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

சென்னை: அண்ணாபல்கலைக்கழக மாணவி பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளான வழக்கில் 3 ஐபிஎஸ் அதிகாரிகள் கொண்ட விசாரணைக்குழுவை நியமித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அண்ணா பல்கலைக்கழக இரண்டாம் ஆண்டு மாணவி டிசம்பர் 23ம் தேதி ஞானசேகரன் என்பவரால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டதாக வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்நிலையில், சென்னை உயர் நீதிமன்றத்திற்கு வழக்கறிஞர் வரலட்சுமி எழுதிய கடிதத்தில், இந்த சம்பவம் தொடர்பான காவல்துறையினரின் விசாரணையில் குறைபாடுகள் உள்ளது. அதனால் வழக்கை சிபிஐ விசாரணை நடத்த உத்தரவிட வேண்டும் என்று கோரியிருந்தார். இதையடுத்து, இந்த வழக்கை தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுப்பதாக விடுமுறைகால நீதிமன்ற நீதிபதிகள் எஸ்.எம்.சுப்பிரமணியம், வி.லட்சுமி நாராயண் ஆகியோர் அறிவித்தனர்.

இதை தொடர்ந்து பாஜக வழக்கறிஞர் அ.மோகன்தாஸ் தொடர்ந்த வழக்கும் விசாரணைக்கு வந்தது. வழக்ைக விசாரித்த நீதிபதிகள், இந்த சம்பவம் குறித்து காவல்துறையும், அண்ணா பல்கலைக்கழகமும் விளக்கம் அளிக்க வேண்டும் என்று நேற்று உத்தரவிட்டிருந்தனர். இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. காவல்துறை தரப்பில் அட்வகேட் ஜெனரல் பி.எஸ்.ராமன் ஆஜராகி, சம்பவம் தொடர்பான விசாரணை அறிக்கையை சீலிட்ட கவரில் தாக்கல் செய்தார். தொடர்ந்து அவர் வாதிடும்போது, ‘சம்பவம் நடந்தது தொடர்பாக போலீஸ் கமிஷனர் அருண் அளித்த பேட்டியில், இதுவரையில் நடைபெற்ற விசாரணையில் ஒருவர் குற்றவாளி என்று ெதரியவந்துள்ளது. தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது என்றுதான் தெரிவித்துள்ளார். மீடியாக்கள் பிரச்னையை பெரிதுபடுத்தியதால் சட்டம் ஒழுங்கை கருத்தில் கொண்டு அவர் பேட்டியளித்துள்ளார்.

முதல் தகவல் அறிக்கையை 14 பேர் ஓ.டி.பி மூலம் பார்த்துள்ளனர். அவர்களிடம் விசாரணை நடந்து வருகிறது. சம்பவம் நடந்த நேரத்தில் குற்றவாளியின் செல்போன் ஏரோப்பிளேன் மோடில் இருந்தது. தொடர் விசாரணையில் வேறு போன் மூலம் பேசினாரா என்ற தகவல் ெதரியவரும். தொடர் விசாரணையில்தான் யார், யார் குற்றவாளிகள் என்று தெரியவரும். போலீஸ் தரப்பில் எப்ஐஆர் லீக் ஆகவில்லை. தேசிய தகவல் மையத்தின் தொழில்நுட்ப கோளாறு காரணமாக லீக் ஆகியுள்ளது என்றார். இதை கேட்ட நீதிபதிகள், கமிஷனர் அனுமதி இல்லாமல் பேட்டி கொடுக்க முடியுமா? என்றனர். இதற்கு அட்வகேட் ெஜனரல் மாவட்ட கலெக்டர்கள், மாவட்ட கண்காணிப்பாளர்கள், போலீஸ் கமிஷனர்கள் அலுவல் ரீதியாக பேட்டி அளிக்க அனுமதி தேவையில்லை. அகில இந்திய சர்வீஸ் விதிகளிலும் இது குறித்து குறிப்பிடப்படவில்ைல.

பத்திரிகைகள், மீடியாக்கள் பிரச்னையை பெரிது படுத்தியதால்தான் சட்டம் ஒழுங்கு பிரச்னை வந்துவிடக்கூடாது என்பதற்கான முன் எச்சரிக்கையாகத்தான் கமிஷனர் பேட்டியளித்துள்ளார் என்றார். இதற்கு நீதிபதிகள் பத்திரிகைகள் செய்தி வெளியிடுவது அவர்களுக்கு தரப்பட்ட உரிமை. அவர்களின் செய்திகளின் தவறோ, விதி மீறல் இருந்தாலோ சம்மந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கலாம் என்றனர். இதை தொடர்ந்து கூடுதல் அட்வகேட் ஜெனரல் ஜெ.ரவீந்திரன் வாதிடும்போது, ‘அண்ணா பல்கலைக்கழகத்தில் 3 ஷிப்டுகளில் செக்யூரிட்டிகள் பணியாற்றி வருகிறார்கள். வளாகம் முழுவதும் 988 கேமராக்கள் வைக்கப்பட்டுள்ளன. அதில் 849 கேமராக்கள் இயங்கிவருகின்றன. 139 கேமராக்கள் பழுதாகியுள்ளன. அவற்றையும் சரி செய்யும் பணி நடந்துள்ளது. அண்ணா பல்கலைக்கழக வளாகத்தின் நுழைவு வாயில் நாலாபுறம் கண்காணிக்கும் வகையில் 4 கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன.

வரும்காலத்தில் பாதுகாப்பை மேலும் பலப்பலப்படுத்துவது குறித்தும், அது தொடர்பான நடவடிக்கைகள் எடுப்பது குறித்தும் குழு அமைக்கப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட பெண்ணுக்கும் கவுன்சிலிங் கொடுக்கப்பட்டுள்ளது. அவரது படிப்பு தொடரும். அதில் எந்த இடர்பாடும் இருக்காது என்பது உறுதி செய்யப்படுகிறது. நாங்கள் பத்திரிகை சுதந்திரத்திற்கு எதிரானவர்கள் இல்லை. ஆனால், அந்த செய்திகள் மக்கள் மத்தியில் பிரச்னையை ஏற்படுத்திவிடக்கூடாது என்பதுதான் எங்கள் கவலை என்றார். அப்போது நீதிபதிகள், பத்திரிகைகள் எதிரிகள் இல்லை. தவறு நடந்தால் அரசுதான் அதை சரி செய்ய வேண்டும். பத்திரிகைகளை குறை சொல்ல கூடாது என்று தெரிவித்தனர். இதை தொடர்ந்து மனுதாரர்கள் சார்பில் வழக்கறிஞர்கள் ஜெயப்பிரகாஷ், ஜி.எஸ்.மணி ஆகியோர் சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்று கோரினர்.

இதை தொடர்ந்து நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு வருமாறு: குற்றவாளி தொடர் குற்றங்களில் ஈடுபட்டவர். அவர் மீது பல வழக்குகள் இருந்தும் அவரை கண்காணிக்க போலீசார் தவறி விட்டனர். அவர் ஆளும்கட்சியை சேர்ந்தவர் என்று கூறுவதையும், இந்த விஷயத்தை அரசியலாக்குவதையும் இந்த நீதிமன்றம் ஏற்கவில்லை. எப்ஐஆர் பாதிக்கப்பட்ட பெண்ணின் மொபைல் எண், வீட்டு முகவரியுடனும் பொது தளத்தில் வெளிவந்துள்ளது. இது பாரதிய நாகரிக் சுரக்‌ஷா சன்ஹிதா சட்டம் பிரிவு 72க்கு எதிரானது. இதனால், மாணவர்கள் மத்தியில் கொந்தளிப்பு ஏற்பட்டுள்ளது. பெண் என்பவர்தான் சமுதாயத்தில் அதிகம் பாதிக்கப்படுகிறார்கள். இதற்கு காரணம் பெண்கள் இல்லை. சமுதாயம்தான்.
அந்த பெண்ணின் படிப்பில் எந்த தடையும் இருக்க கூடாது. அவருக்கு படிப்பு செலவு மற்றும் விடுதி செலவுகளை அண்ணா பல்கலைக்கழகமே ஏற்க வேண்டும்.

இந்த வழக்கில் விசாரணை நேர்மையாகவும், நியாயமாகவும் நடைபெற வேண்டும் என்பதற்காக இந்த வழக்கை விசாரிக்க சிறப்பு விசாரணை குழுவை இந்த நீதிமன்றம் நியமிக்கிறது. சிறப்பு விசாரணை குழுவில் அண்ணா நகர் துணை கமிஷனர் சினேகா பிரியா, ஆவடி துணை கமிஷனர் ஐமான் ஜமால், சேலம் துணை கமிஷனர் பிருந்தா ஆகியோர் நியமிக்கப்படுகிறார்கள். அவர்களுக்கு சம்பந்தப்பட்ட போலீசார் உரிய ஒத்துழைப்பு தரவேண்டும். பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு அரசு ரூ.25 லட்சம் இழப்பீடு தரவேண்டும். தற்போது முதல் கட்ட விசாரணை நடந்துள்ளது. சிபிஐ விசாரணை கோருவதை ஏற்க முடியாது என்று நீதிபதிகள் தெரிவித்தனர்.

The post அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் துன்புறுத்தல் வழக்கு; 3 பெண் ஐபிஎஸ் அதிகாரிகள் கொண்ட குழு விசாரணை: சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு appeared first on Dinakaran.

Related Stories: