திருச்சி: ஸ்ரீரங்கத்தில் வைகு ண்ட ஏகாதசி விழா நாளை மறுநாள் திருநெடுந்தாண்டகத்துடன் துவங்குகிறது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான சொர்க்கவாசல் திறப்பு வரும் 10ம் தேதி நடைபெறுகிறது. பூலோக வைகுண்டம் என்று போற்றப்படும் திருச்சி ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் இந்த ஆண்டுக்கான வைகுண்ட ஏகாதசி திருவிழா திருநெடுந்தாண்டகம் நிகழ்ச்சியுடன் நாளை மறுநாள்(30ம் தேதி) தொடங்குகிறது. பகல்பத்து உற்சவத்தின் முதல் நாளான திருமொழி திருவிழா வரும் 31ம் தேதி தொடங்குகிறது. அன்றையதினம் காலை 7.45 மணிக்கு நம்பெருமாள் மூலஸ்தானத்தில் இருந்து புறப்பட்டு காலை 8.30 மணிக்கு அர்ஜுன மண்டபம் வந்தடைவார். காலை 8.30 மணி முதல் பகல் 12 மணி வரை அரையர்கள் நம்பெருமாள் முன் நின்று நாலாயிரம் திவ்யப்பிரபந்த பாடல்களை அபிநயம் மற்றும் இசையுடன் பாடுவார்கள்.
இரவு 7 மணிக்கு அர்ஜுன மண்டபத்தில் இருந்து நம்பெருமாள் புறப்பட்டு இரவு 9.45 மணிக்கு மூலஸ்தானம் சென்றடைவார். பகல் பத்தின் முதல் நாளில் இருந்து மூலவர் ரங்கநாதர் முத்தங்கி சேவையில் காட்சியளிப்பார். இந்த முத்தங்கி சேவை தொடர்ந்து 20 நாட்களுக்கு நடைபெறும். இதேபோல் பகல்பத்தின் ஒவ்வொரு நாளும் உற்சவர் நம்பெருமாள் வெவ்வேறு அலங்காரத்தில் அர்ஜுன மண்டபத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு சேவை சாதிப்பார். பகல்பத்து உற்சவத்தின் 10ம் நாளான வரும் 9ம் தேதி நம்பெருமாள் நாச்சியார் திருக்கோலம் எனப்படும் மோகினி அலங்காரத்தில் எழுந்தருளுவார். 10ம் தேதி ராப்பத்து உற்சவத்தின் முதல் நாள் வைகுண்ட ஏகாதசி திருநாள் ஆகும். அன்றைய தினம் அதிகாலை 4.15 மணிக்கு நம்பெருமாள் மூலஸ்தானத்தில் இருந்து புறப்பட்டு அதிகாலை 5.15 மணிக்கு பரமபதவாசல் எனப்படும் சொர்க்க வாசலில் எழுந்தருளுவார்.
இதையொட்டி நம்பெருமாள் ரத்தின அங்கி அணிந்து பக்தர்களுக்கு அருள்பாலிப்பார். சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சியில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொள்வார்கள். அன்று இரவு 10 மணி வரை சொர்க்கவாசல் திறந்திருக்கும். 11ம் தேதி முதல் 15ம் தேதி வரை பகல் 1 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும். 16ம் தேதி மாலை 4 மணி முதல் இரவு 8.30 மணி வரை திறந்திருக்கும். ராப்பத்து 8ம் திருநாளான 17ம் தேதி சொர்க்கவாசல் திறப்பு இல்லை. 18ம் தேதி வழக்கம்போல் பகல் 1 முதல் இரவு 8 மணி வரையும், 19ம் தேதி காலை 10.30 முதல் இரவு 8 மணி வரை பரமபத வாசல் திறந்திருக்கும். சொர்க்கவாசல் திறப்பு தினமான 10 தேதி முதல் ராப்பத்து எனப்படும் திருவாய்மொழி திருநாள் தொடங்குகிறது. ராப்பத்தின் ஒவ்வொரு நாளும் உற்சவர் நம்பெருமாள் வெவ்வேறு அலங்காரத்தில் ஆயிரங்கால் மண்டபத்தின் நடுவே உள்ள திருமாமணி ஆஸ்தான மண்டபத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு சேவை சாதிப்பார்.
ராப்பத்து 7ம் திருநாளான 16ம் தேதி நம்பெருமாள் திருக்கைத்தல சேவையும், 8ம் திருநாளான 17ம் தேதி திருமங்கைமன்னன் வேடுபறி நிகழ்ச்சியும், 10ம் திருநாளான 19ம் தேதி தீர்த்தவாரியும், 20ம் தேதி நம்மாழ்வார் மோட்சமும், இயற்பா சாற்றுமறை நிகழ்ச்சியும் நடைபெறும். இத்துடன் வைகுண்ட ஏகாதசி திருவிழா நிறைவுபெறுகிறது. விழாவிற்கான ஏற்பாடுகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. கோயில் வளாகம் முழுவதும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
The post நாளை மறுநாள் திருநெடுந்தாண்டகத்துடன் ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் வைகுண்ட ஏகாதசி விழா துவக்கம்: ஜன.10ம் தேதி சொர்க்கவாசல் திறப்பு appeared first on Dinakaran.