* இறைவனிடம் செல்வதாக உருக்கமான கடிதம், கடைசி நிமிடங்களை செல்போனில் பதிவு செய்த துயரம்
திருவண்ணாமலை: திருவண்ணாமலை கிரிவலப்பாதையில் உள்ள பண்ணை வீட்டில் தங்கியிருந்த தாய், மகள், மகன் உள்பட 4 பேர் விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலுக்கு வருகைதரும் பக்தர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. பவுர்ணமி நாட்கள் மட்டுமின்றி, மாதத்தின் அனைத்து நாட்களிலும் பக்தர்கள் கிரிவலம் சென்று வழிபடுகின்றனர். குறிப்பாக, வார இறுதி நாட்களில் கிரிவல பக்தர்களின் எண்ணிக்கை வெகுவாக அதிகரிக்கிறது.
இந்நிலையில், திருவண்ணாமலை கிரிவலப்பாதையில் அடி அண்ணாமலை அருகே சூரியலிங்கம் சன்னதி எதிரில், டிவைன் பார்ம் ஹவுஸ் ஸ்டே எனும் பெயரில் தனியாருக்கு சொந்தமான பண்ணை வீடு தங்கும் விடுதி செயல்படுகிறது. இந்த விடுதியில் குடும்பத்தினருடன் தங்குவதற்காக, சென்னை வியாசர்பாடி எம்கேபி நகர் 13வது குறுக்குத் தெருவைச் சேர்ந்த ருக்மணி பிரியா(45) என்பவர், ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்துள்ளார்.
அதன்படி, ருக்மணி பிரியா அவரது மகள் ஜலந்தரி(18), மகன் முகுந்த் ஆகாஷ்குமார்(13) மற்றும் சிவகங்கை மாவட்டம், காரைக்குடி தாலுகா செங்கரை கிராமத்தைச் சேர்ந்த ஸ்ரீமகாகால வியாசர்(40) ஆகியோர் நேற்று முன்தினம் பகல் 1 மணிக்கு, அந்த பண்ணை வீட்டில் தங்கியுள்ளனர். பின்னர், கிரிவலம் சென்றுவிட்டு இரவு அறைக்கு திரும்பியுள்ளனர். இந்நிலையில், நேற்று காலை 11.30 மணி வரை பண்ணை வீட்டின் அறை கதவுகள் திறக்கவில்லை. எனவே, அங்கு பணிபுரியும் ஊழியர்களுக்கு சந்தேகம் ஏற்பட்டது.
இதனால், ஜன்னல் வழியாக எட்டிப்பார்த்தனர். அப்போது, பண்ணை வீட்டுக்குள் நான்கு பேரும் வாயில் நுரை தள்ளிய நிலையில், இறந்து கிடந்தது கண்டு அதிர்ச்சியடைந்தனர். எனவே, உடனடியாக போலீசுக்கு தகவல் அளித்தனர். அதைத்தொடர்ந்து, திருவண்ணாமலை டவுன் ஏஎஸ்பி சதீஷ்குமார் மற்றும் தாலுகா போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் நேரு உள்ளிட்டோர் விரைந்து வந்து விசாரணை நடத்தினர். அப்போது, நான்கு பேரும் இறந்து நீண்ட நேரமானது தெரியவந்தது.
மேலும், நான்கு பேரும் விஷம் அருந்தி தற்கொலை செய்துகொண்டது தெரியவந்தது. அங்கிருந்த விஷ பாட்டிலையும் போலீசார் கைப்பற்றினர். அது, குடித்த சில நிமிடங்களில் மரணத்தை ஏற்படுத்தும் தன்மைகொண்ட சயனைடு போன்று இருந்தது போலீசாரை அதிர்ச்சியடைய செய்தது. அதைத்தொடர்ந்து, ஸ்ரீமகாகால வியாசர், ருக்மணி பிரியா, ஜலந்தரி, முகுந்த் ஆகாஷ்குமார் ஆகியோரின் சடலங்களை கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், நான்கு பேரும் இறந்து கிடந்த அறையில் இருந்து 10 பக்க கடிதம் மற்றும் 3 செல்போன்கள் கைப்பற்றப்பட்டது.
மேலும், இறந்த நான்கு பேரின் ஆதார் அட்டை உள்ளிட்ட ஆவணங்கள் அனைத்தும் ஒரு பைலில் பாதுகாப்பாக வைத்திருப்பதும் தெரியவந்தது. எனவே, அதனையும் கைப்பற்றினர். இதுகுறித்து, போலீஸ் தரப்பில் கூறுகையில், ‘4 பேரும் தற்கொலை செய்திருப்பது முதற்கட்ட விசாரணையில் உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும், தற்கொலை செய்துகொண்டதை செல்போன் வீடியோவில் கடைசி நிமிடத்தில் பதிவு செய்துள்ளனர். அதில், நாங்கள் வந்த வேலை முடிந்துவிட்டது. இறைவனின் விருப்பப்படி மகாலட்சுமியின் திருவடி செல்கிறோம் என தெரிவித்துள்ளனர் என்றனர்.
மேலும், 10 பக்க கடிதத்தில் தற்கொலை செய்துகொள்ள விரும்பி முடிவு எடுத்ததாக எழுதியுள்ளனர். அதிலும், இறைவனிடம் செல்வதற்காக தற்கொலை செய்துகொள்வதாக குறிப்பிட்டுள்ளனர் என போலீஸ் தரப்பில் தெரிவித்தனர். அதோடு, தற்கொலைக்கு பயன்படுத்தப்பட்டது சயனைடா அல்லது வேறு ஏதேனும் விஷமா என்பது குறித்து பிரேத பரிசோதனை அறிக்கைக்கு பிறகே தெரியவரும் என்றனர்.
இந்நிலையில், போலீசார் நடத்திய விசாரணையில், சென்னை வியாசர்பாடியைச் சேர்ந்த ருக்மணிபிரியா, கடந்த நான்கு ஆண்டுகளுக்கு முன்பு கணவரை பிரிந்து, ஸ்ரீமகாகால வியாசருடன் வாழ்ந்து வந்தது தெரியவந்துள்ளது. மேலும், கடந்த சில மாதங்களாக பவுர்ணமி நாட்களில் திருவண்ணாமலைக்கு வந்து சென்றதும் தெரியவந்துள்ளது. திருவண்ணாமலை கிரிவலப்பாதையில் நடந்த இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியிருக்கிறது.
* தற்கொலைக்கு காரணம் என்ன?
திருவண்ணாமலை கிரிவலப்பாதையில் உள்ள பண்ணை வீட்டில் தங்கியிருந்த நான்கு பேர் தற்கொலை செய்து கொண்டதற்கு, தீவிர பக்திதான் காரணமா அல்லது வேறு ஏதேனும் நெருக்கடிகள் இருந்ததா என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளது. மேலும், நான்கு ஆண்டுகளுக்கு முன்பு கணவரை பிரிந்த ருக்மணி பிரியாவுக்கும், சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த ஸ்ரீமகாகால வியாசருக்கும் இடையே எப்படி தொடர்பு ஏற்பட்டது என்பது குறித்தும் தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
அதோடு, ஸ்ரீமகாகால வியாசரின் சிவகங்கை மாவட்ட முகவரியில், சிறுமி ஜலந்தரி, சிறுவன் முகுந்த் ஆகாஷ்குமாரின் ஆதார் அட்டை முகவரி உள்ளது. ருக்மணிபிரியாவின் ஆதார் அட்டையில் மட்டும் சென்னை வியாசர்பாடி முகவரி உள்ளது. எனவே, சென்னையில் வசித்து வந்தனரா அல்லது சிவகங்கை மாவட்டத்தில் வசித்து வந்தனரா என்பதும் சந்தேகத்தை ஏற்படுத்தியிருக்கிறது. எனவே, ஆதார் அட்டைகளில் குறிப்பிட்டுள்ள சென்னை மற்றும் சிவகங்கை மாவட்ட முகவரிகளுக்கு சென்று போலீசார் முழுமையாக விசாரித்த பிறகே உண்மை நிலை தெரிய வரும் வாய்ப்புள்ளது.
The post திருவண்ணாமலை கிரிவலப்பாதையில் உள்ள பண்ணை வீட்டில் தாய், மகன், மகள் உள்பட 4 பேர் விஷம் குடித்து தற்கொலை appeared first on Dinakaran.