மரக்காணம் பகுதியில் 19 கிராம மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை

மரக்காணம், டிச. 18: வங்க கடலில் உருவாகி உள்ள காற்றழுத்த தாழ்வு நிலையால் ஆழ்கடல் பகுதியில் சூறாவளி காற்றுடன் கடல் சீற்றம் அதிகமாக இருக்கும் என்றும் விழுப்புரம் மாவட்டத்தில் கனமழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இதன் காரணமாக கடலோர பகுதியான விழுப்புரம் மாவட்டத்திற்கு ஆரஞ்சு அலர்ட்டும் விடுத்துள்ளனர். இந்நிலையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை காரணமாக மரக்காணம் பகுதியில் உள்ள மீனவர்கள் மறு உத்தரவு வரும் வரையில் கடலுக்கு செல்லக்கூடாது என மீன்வளத்துறை சார்பில் நேற்றுமுன்தினம் மாலை அறிவிக்கப்பட்டது.

இந்த அறிவிப்பின் காரணமாக விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் பகுதியில் உள்ள 19 மீனவ கிராமங்களை சேர்ந்த மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்கு செல்லவில்லை. இதனால் அவர்கள் கடற்கரை ஓரம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த தங்களது விசைப்படகுகள் மற்றும் மீன்பிடி சாதனங்களை பாதுகாப்பான இடத்தில் வைத்துள்ளனர். விழுப்புரம் மாவட்டத்தில் அடிக்கடி ஏற்படும் கடல் சீற்றம் மற்றும் கனமழை காரணமாக பெஞ்சல் புயலிலிருந்து அடுத்தடுத்து தடை விதிக்கப்படுவதால் கடந்த ஒரு மாதத்தில் மட்டும் இப்பகுதியில் உள்ள மீனவர்கள் 20 நாட்கள் மீன்பிடிக்க கடலுக்கு செல்லவில்லை என கூறுகின்றனர். இதனால் அரசு சார்பில் மீனவர்களுக்கு உரிய நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை வைத்துள்ளனர். இப்பகுதியில் உள்ள மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்கு செல்லாததால் மார்க்கெட்டிற்கு மீன்கள் வரத்து முற்றிலுமாக தடைபடும். இதனால் பதப்படுத்தி வைத்துள்ள சிறியவகை மீன்களின் விலையும் அதிகரிக்கும் என மீனவர்கள் கூறுகின்றனர்.

The post மரக்காணம் பகுதியில் 19 கிராம மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை appeared first on Dinakaran.

Related Stories: