சஸ்பெண்ட் செய்யப்பட்ட கிராம பெண் உதவியாளர் தற்கொலை முயற்சி

கள்ளக்குறிச்சி, டிச. 20: சஸ்பெண்ட் செய்யப்பட்ட கிராம பெண் உதவியாளர் தற்கொலை முயற்சியில் ஈடுபட்ட சம்பவம் கள்ளக்குறிச்சியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் வட்டத்திற்கு உட்பட்ட வடக்கனந்தல் மேற்கு பகுதி கிராம நிர்வாக அலுவலராக தமிழரசி என்பவர் பணியாற்றி வருகிறார். அதே அலுவலகத்தில் அதே பகுதியை சேர்ந்த சங்கீதா என்பவர் கிராம உதவியாளராக பணியாற்றி வந்தார். இந்நிலையில் இருவருக்கும் இடையே கடந்த 2 மாதங்களாக கருத்து வேறுபாடு இருந்து வந்ததாக கூறபடுகிறது.

இந்நிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு கிராம நிர்வாக அலுவலர் தமிழரசி அலுவலகத்தில் பணியில் இருந்தபோது கிராம உதவியாளர் சங்கீதா அலுவலகத்தை திடீரென பூட்டிவிட்டு சென்றுள்ளார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வைரலாகியது. இதைத்தொடர்ந்து கிராம நிர்வாக அலுவலர் தமிழரசி மற்றும் கிராம உதவியாளர் சங்கீதா ஆகிய இருவரையும் வருவாய்த்துறை அதிகாரிகள் அழைத்து விசாரணை மேற்கொண்டனர். அதனையடுத்து கிராம நிர்வாக அலுவலரை அலுவலகத்தில் வைத்து பூட்டிய விவகாரத்தில் கிராம உதவியாளர் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டி சின்னசேலம் வட்டாட்சியருக்கு மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் நேற்று முன்தினம் அதிரடியாக உத்தரவிட்டார்.

அதனை தொடர்ந்து கிராம உதவியாளர் சங்கீதாவை தற்காலிக பணிநீக்கம் செய்து சின்னசேலம் வட்டாட்சியர் முனோஜ்முனியன் உத்தரவிட்டார். இந்நிலையில் நேற்று அதிகாலையில் சங்கீதா தூக்கமாத்திரைகளை சாப்பிட்டும் தனது கையில் பிளேடால் அறுத்தும் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. உடனே உறவினர்கள் அவரை மீட்டு கள்ளக்குறிச்சி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர் சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து கச்சிராயபாளையம் போலீசார் சிகிச்சை பெற்று வரும் சங்கீதாவிடம் நேரில் விசாரணை மேற்கொண்டனர். சஸ்பெண்ட் செய்யப்பட்ட கிராம பெண் உதவியாளர் தற்கொலை முயற்சியில் ஈடுபட்ட சம்பவம் கள்ளக்குறிச்சியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

The post சஸ்பெண்ட் செய்யப்பட்ட கிராம பெண் உதவியாளர் தற்கொலை முயற்சி appeared first on Dinakaran.

Related Stories: