வாணியம்பாடி அருகே பட்டப்பகலில் பாலாற்றில் ஜேசிபி மூலம் டிராக்டரில் மணல் கடத்தல்: சமூக வலைதளங்களில் வீடியோ வைரல்

வாணியம்பாடி: திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி அடுத்த நாட்றம்பள்ளி ஒன்றியத்துக்குட்பட்ட ராமநாயக்கன் பேட்டை கிராமத்தின் மயான பகுதியை ஒட்டி உள்ள பாலாற்று பகுதிகளில் நேற்று பட்டப்பகலில் ஜேசிபி மூலம் டிராக்டரில் மண் கடத்தலில் சமூக விரோதிகள் ஈடுபட்டுள்ளனர் . இதைக்கண்ட அப்பகுதியை சேர்ந்தவர்கள் செல்போன் மூலம் மணல் கடத்துவதை படம் பிடித்து சமூக வலைத்தளங்களில் பரவ விட்டனர். மேலும் சம்பந்தப்பட்ட காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்துள்ளனர். அதன்பேரில் சம்பவ இடத்திற்கு போலீசார் பார்வையிட வந்த போது, சம்பவ இடத்தில் இருந்து ஜேசிபி, டிராக்டர் மற்றும் மணல் கடத்தல் கும்பலை சார்ந்தவர்கள் தலைமறைவாகினர். இதுகுறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதுதொடர்பாக, அப்பகுதி பொதுமக்கள் மற்றும் பாலாறு பாதுகாப்பு இயக்கம் தன்னார்வலர்கள் தெரிவிக்கையில், ‘மணல் கடத்தல் குறித்து போலீசாருக்கு தகவல் தெரிவித்து, போலீசார் சம்பவ இடத்திற்கு வருவதற்குள் மணல் கடத்தல் கும்பலுக்கு தகவல் சென்று பாலாற்றில் இருந்து தலைமறைவாகியுள்ளனர். அப்பொழுது மணல் கடத்தல் கும்பல் மட்டுமின்றி அவர்களிடம் தகவல்களை தெரிவிக்கும் நபர்களையும் கண்டறிந்து சட்டரீதியான கடும் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என தெரிவித்தனர். சமூக விரோதிகள் ஒரு சில நேரங்களில் மறைமுகமாக இரவு நேரத்தில் மணலை மூட்டைகளில் கட்டி பைக்கில் கடத்தி வந்த நிலையில், தற்போது பட்டப் பகலில் ஜேசிபி மூலம் மணல் கொள்ளையில் ஈடுபட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

 

The post வாணியம்பாடி அருகே பட்டப்பகலில் பாலாற்றில் ஜேசிபி மூலம் டிராக்டரில் மணல் கடத்தல்: சமூக வலைதளங்களில் வீடியோ வைரல் appeared first on Dinakaran.

Related Stories: