சென்னை மெரினா கடற்கரையில் உள்ள எம்.ஜி.ஆர் நினைவிடத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மலர்வளையம் வைத்து மரியாதை செலுத்தினார். அவரை தொடர்ந்து அதிமுக முன்னாள் அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், நிர்வாகிகள், தொண்டர்கள் மரியாதை செலுத்தினர். இதையடுத்து எம்.ஜி.ஆர். நினைவிட நுழைவாயிலில் அமைக்கப்பட்டிருந்த மேடையில் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அதிமுக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர். உறுதிமொழியில் போது, ‘‘எம்.ஜி.ஆரின் புகழை, எந்நாளும் காப்போம்! எந்நாளும் காப்போம்.
எம்.ஜி.ஆர். தமிழ் மண்ணை தாயாகவும்; தமிழ் மக்களை உயிராகவும் நேசித்தவர். அதிமுகவினரை, ரத்தத்தின் ரத்தங்களாக பூஜித்தவர். தூய உள்ளம் கொண்ட, தாய்மைப் பாசம் கொண்ட, எம்.ஜி.ஆர். அவர் வகுத்துத் தந்த பாதையில், தடம் மாறாது; தடுமாறாது! சோர்ந்து போகாது; சோரம் போகாது! ஒற்றுமை உணர்வோடு, பயணிப்போம்! பயணிப்போம். துரோகிகளை வீழ்த்துவோம். எம்.ஜி.ஆர். மண்ணை விட்டு மறைந்தாலும், நம் நெஞ்சை விட்டு மறையாத, அவரின் வழியிலே; பயணிப்போம்.
அரை நூற்றாண்டுகால அரசியலுக்கு, அதிமுகவை அழைத்து வந்த, முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வழியிலேயே, தொடர்ந்து பயணிப்போம்” என்று சூளுரைத்தனர். இந்நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர்கள் பொன்னையன், நத்தம் விஸ்வநாதன், ஆர்.பி.உதயகுமார், எஸ்.பி.வேலுமணி, பா.வளர்மதி, அவைத்தலைவர் தமிழ்மகன் உசேன் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் அனைவரும் கருப்பு சட்டை அணிந்து பங்கேற்றனர். அதேபோல், முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தனது ஆதரவாளர்களுடன் எம்.ஜி.ஆர் நினைவிடத்தில் மலர்தூவி மரியாதை செலுத்தினார்.
அப்போது முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம், மனோஜ் பாண்டியன் எம்எல்ஏ உள்பட ஏராளமானோர் உடன் இருந்தனர். இதே போல அமமுக பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன், சசிகலா எம்ஜிஆர் நினைவிடத்தில் மரியாதை செலுத்தினர். மேலும் தமிழக காங்கிரஸ் முன்னாள் தலைவர் திருநாவுக்கரசர் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். அப்போது அறந்தாங்கி எம்எல்ஏ எஸ்.டி. ராமச்சந்திரன், காங்கிரஸ் முன்னாள் மாவட்ட தலைவர் அரும்பாக்கம் க.வீரபாண்டியன் உட்பட பலர் கொண்டனர்.
எம்ஜிஆரின் நினைவுதினத்தையொட்டி, நேற்று அதிமுக நிர்வாகிகள் சென்னையில் பல்வேறு இடங்களில் அன்னதானம் வழங்கினர். சென்னை சிஐடி நகரில் எம்.ஜி.ஆர். இளைஞரணி இணைச்செயலாளர் டாக்டர் வி.சுனில் ஆயிரம் பேருக்கு அன்னதானம் வழங்கினார். அதேபோல இலக்கிய அணி சார்பில் அதிமுக தலைமை அலுவலகம் அருகில் அதிமுக இலக்கிய அணி இணைச் செயலாளர் டி.சிவராஜ் பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கினார். எம்.ஜி.ஆர்.நினைவுதினத்தையொட்டி, நகரில் பல இடங்களில் ஒலிபெருக்கி மூலமாக எம்.ஜி.ஆர். பாடல்கள் ஒலிபரப்பப்பட்டன. தொண்டர்கள் சார்பிலும் அன்னதானமும் நடந்தன.
The post 37வது நினைவு தினம் எம்ஜிஆர் நினைவிடத்தில் இபிஎஸ், ஓபிஎஸ் மரியாதை appeared first on Dinakaran.