வினோத்காம்ப்ளி மூளையில் ரத்தக்கட்டி: டாக்டர் அதிர்ச்சி தகவல்

மும்பை: இந்திய அணியின் முன்னாள் வீரர் வினோத் காம்ப்ளி. 52 வயதாகும் வினோத் காம்ப்ளி கடந்த சில ஆண்டுகளாகவே உடல் நல பிரச்னைகளால் அவதிப்பட்டு வருகிறார். இந்திய அணியில் தனக்கு சரியான வாய்ப்பு கிடைக்கவில்லை என்ற எண்ணம் அவருக்கு ஏற்பட்டதன் காரணமாக அவர் போதை மற்றும் மதுவுக்கு அடிமையானார். அதனால் அவரது உடலில் பல்வேறு பிரச்னைகள் ஏற்பட்டன. கடந்த 10 ஆண்டுகளாக அவர் அதிலிருந்து மீண்டு வருவதற்காகவும், அதனால் ஏற்பட்ட உடல் நல பிரச்னைகளை சரி செய்வதற்காகவும் சிகிச்சைகளை மேற்கொண்டு வருகிறார்.

எனினும், அவரது உடல் நிலை நாளுக்கு நாள் மோசமாகி கொண்டு செல்கிறது. இந்த நிலையில் அவருக்கு மூளையில் ரத்தக் கட்டிகள் இருப்பதாக அவருக்கு சிகிச்சை அளித்து வரும் ஆக்ருதி மருத்துவமனையின் டாக்டர் விவேக் திரிவேதி கூறி இருக்கிறார். அவருக்கு இந்த மருத்துவமனையில் கட்டணமில்லா சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் அவர் கூறி இருக்கிறார். சமீபத்தில் வினோத் காம்ப்ளி ஒரு நிகழ்ச்சியில் அவரது பால்ய கால நண்பரான சச்சின் டெண்டுல்கரை சந்தித்து இருந்தார். அந்த காட்சிகள் சமூக வலைதளங்களில் அதிகம் பகிரப்பட்டன. அப்போது வினோத் காம்ப்ளி மிகவும் உணர்ச்சி வசப்பட்ட நிலையில் இருந்தார்.

அவரது உடல் நிலை மோசமாக இருப்பதும் அவர் நிதானமான மனநிலையில் இல்லாமல் இருப்பதும் அந்த வீடியோக்கள் மூலமாக வெளி உலகுக்கு தெரியவந்தது. இதையடுத்து 1983 உலகக் கோப்பை வென்ற முன்னாள் வீரர்களான கபில் தேவ் மற்றும் சுனில் கவாஸ்கர் ஆகியோர் அவருக்கு உதவ தயாராக இருப்பதாக கூறி இருந்தனர். அவர்களது உதவியை ஏற்க உள்ளதாக வினோத் காம்ப்ளி கூறி இருந்தார். இந்த நிலையில் தான் அவரது உடல்நிலை மேலும் மோசம் அடைந்துள்ளது.

The post வினோத்காம்ப்ளி மூளையில் ரத்தக்கட்டி: டாக்டர் அதிர்ச்சி தகவல் appeared first on Dinakaran.

Related Stories: