மனுவாத பாசிச ஆட்சியை கொண்டுவர பாஜ முயற்சி: ஜி.ராமகிருஷ்ணன் குற்றச்சாட்டு


கோவை: மனுவாத பாசிச ஆட்சியை கொண்டு வருவதற்கு பாஜவினர் முயற்சி செய்கிறார்கள் என்று ஜி.ராமகிருஷ்ணன் பேசினார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 24வது கோவை மாவட்ட மாநாடு வரதராஜபுரம் பகுதியில் உள்ள தனியார் மண்டபத்தில் நடைபெற்றது. இந்த மாநாட்டில் கோவையில் திட்டமிட்டு வகுப்புவாத மோதலை உருவாக்கும் நோக்கில் பாஜ உள்ளிட்ட இந்துத்துவா அமைப்புகள் செயல்படுவதை தடுக்க வகுப்பு வாதத்திற்கு எதிராக மக்களை ஒன்றுபடுத்த வேண்டும், சிறு குறு தொழில் முனைவோரை பாதிக்கும் ஜிஎஸ்டி வரி விதிப்பை ரத்து செய்ய வேண்டும் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

மாநாட்டையொட்டி உழைப்பாளர் பேரணி நடைபெற்றது. பின்னர் நடந்த பொதுக்கூட்டத்தில், அக்கட்சியின் அரசியல் தலைமை குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன் பேசியதாவது: ஒன்றிய பாஜ அரசு கொண்டுவந்த சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்பு சட்டம், அரசியலமைப்பு சட்டத்திற்கு உட்பட்ட சட்டம் அல்ல. இந்த சட்டத்தில் யாரை வேண்டுமானாலும் கைது செய்து, விசாரணை செய்யாமல் பல ஆண்டுகள் தொடர்ந்து சிறையில் வைக்கலாம். பாசிச பாணியிலான பாஜ ஆட்சி நடைபெறுகிறது. கூட்டாட்சி தத்துவத்தை குழி தோண்டி புதைத்து சர்வாதிகார ஆட்சியை கொண்டுவர துடிக்கிறார்கள்.

நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகளை முடக்குகிறார்கள். ஒன்றிய பாஜ அரசு கார்ப்பரேட் கம்பெனிகளுக்கு முழுக்க முழுக்க ஆதரவாக நிற்கிறார்கள். மறுபக்கம் மனுவாத பாசிச ஆட்சியை கொண்டு வருவதற்கு முயற்சி செய்கிறார்கள். வரும் காலங்களில் பாசிச பாஜ அரசை வீழ்த்திட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மக்களைத் திரட்டி வீரியமிக்க போராட்டங்களை நடத்தும். இவ்வாறு அவர் பேசினார்.

The post மனுவாத பாசிச ஆட்சியை கொண்டுவர பாஜ முயற்சி: ஜி.ராமகிருஷ்ணன் குற்றச்சாட்டு appeared first on Dinakaran.

Related Stories: