திருவள்ளூர் மாவட்டம், திருத்தணியில் சிறப்பு பெற்ற முருகன் கோயிலுக்கு தினமும் பல்வேறு பகுதிகளில் இருந்து பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தந்து முருகப்பெருமானை தரிசனம் செய்து தங்களது வேண்டுதல்களை நிறைவேற்றுகின்றனர். பக்தர்கள் தங்கள் வேண்டுதலை நிறைவேற்றும் வகையில், மலைக்கோயில் மற்றும் சரவணப்பொய்கை திருக்குளம் பகுதிகளில் முடி காணிக்கை செலுத்தும் மையங்களில் குழந்தைகள், பெண்கள் உட்பட ஏராளமானோர் முடி காணிக்கை செலுத்துகின்றனர்.
முடி காணிக்கை செலுத்தும் குழந்தைகள் வெந்நீரில் குளிக்க சோலார் வசதியுடன் வாட்டர் ஹீட்டர் ஒன்று பொருத்தப்பட்டிருந்தது. முறையான பராமரிப்பின்றி சோலார் மற்றும் வாட்டர் ஹீட்டர் பழுதாகி பல மாதங்களாக பயனற்று இருந்தது. இதனால், குளிர் காலத்தில் முடி காணிக்கை செலுத்தும் குழந்தைகளுக்கு குளிர்ந்த நீரில் குளிக்க வைத்தால், காய்ச்சல், ஜலதோஷம் உள்ளிட்ட உடல் நல பாதிப்பு ஏற்படும் என்பதால், தனி நபர்கள் பக்கெட் ₹50க்கு விற்பனை செய்யும் வெந்நீரை பணம் கொடுத்து வாங்கி பயன்படுத்த வேண்டிய நிலைக்கு பக்தர்கள் தள்ளப்பட்டனர். குழந்தைகளை குளிக்க வைக்க வெந்நீருக்கு பக்தர்கள் சந்திக்கும் அவதி குறித்து தினகரன் நாளிதழில் கடந்த 16ம் தேதி படத்துடன் செய்தி வெளியிடப்பட்டது.
இச்செய்தி எதிரொலியாக திருக்கோயில் அறங்காவலர் குழு தலைவர் சு.ஸ்ரீதரன் மற்றும் அறங்காவலர்கள் ஆலோசனைப்படி திருக்கோயில் இணை ஆணையர் ரமணி உடனடியாக நடவடிக்கை எடுத்து மலைக் கோயிலில் முடி காணிக்கை செலுத்தும் மையத்தில் உள்ள குளியல் அறைகளில் வெந்நீர் வசதி மற்றும் பழுதான சோலார் இணைப்பை சீரமைக்க நிதி ஒதுக்கீடு செய்தார். இதனையடுத்து, புதிதாக 25 லிட்டர் கொள்ளளவு கொண்ட 4 வாட்டர் ஹீட்டர்கள் கொள்முதல் செய்யப்பட்டு பொருத்தப்பட்டு, மின்சாரம் மற்றும் சோலார் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது. இதனால், பக்தர்கள் வெந்நீரில் குளித்து சாமி தரிசனம் செய்ய மகிழ்ச்சியுடன் செல்கின்றனர்.
The post திருத்தணி முருகன் கோயிலில் முடி காணிக்கை செலுத்தும் மையத்தில் வெந்நீர் வசதி: பக்தர்கள் மகிழ்ச்சி appeared first on Dinakaran.