மானூர் பெரிய குளத்திற்கு நீர்வரும் கால்வாய் ஆக்கிரமிப்பு அடைப்புகள் சீரமைப்பு

*35 சதவீதம் அளவே நீர் இருப்பு

தியாகராஜநகர் : வடகிழக்கு பருவமழை முடிவுக்கு வராத நிலையில் மானூர் பெரிய குளத்திற்கு நீர் வரும் கால்வாய் பாதைகளில் பல இடங்களில் அடைப்பு உள்ளது. இதை பொதுப்பணி துறையினர் மற்றும் விவசாயிகள் இணைந்து அகற்றி வருகின்றனர். குளத்தில் தற்போது 35 சதவீதம் அளவிற்கே நீர் இருப்பு உள்ளது.நெல்லை மாவட்டத்தில் உள்ள பெரிய குளங்களில் மானூர் குளமும் ஒன்று.

சுமார் 1200 ஏக்கர் பரப்பளவு உடைய இந்த குளம் ஒரு முறை முழுமையாக நிரம்பினால் சுற்றுவட்டார கிராமங்களில் மூன்று முறை நெல் பாசன பணிகள் நடைபெறும் வாய்ப்பு கிடைக்கிறது. எட்டாம் குளம், மாவடி மதவக்குறிச்சி என 4 பஞ்சாயத்துகளை சேர்ந்த 35 கிராமங்கள் விவசாய பலன் பெறுகின்றன.

தற்போது வடகிழக்கு பருவமழை சீசன் முடிவுக்கு வராத நிலையில் இந்த குளம் முழுமையாக நிரம்பவில்லை. இன்றைய நிலவரப்படி சுமார் 35 சதவீத அளவிற்கு நீர் நிரம்பி உள்ளது. அடுத்து கனமழை தொடர்ந்து பெய்தால்தான் குளம் நிரம்பும் என்ற நம்பிக்கையில் விவசாயிகள் உள்ளனர்.

அதே நேரத்தில் சிற்றாறு கால்வாய் பகுதியில் உள்ள ஆயன்குளம், தெற்குப்பட்டி குளம் உள்ளிட்ட சில குளங்கள் நிரம்பிவிட்டன. மானூர் பெரிய குளத்திற்கு வரும் நீர் பாதையில் சில இடங்களில் அமலைச்செடி, செடிகள், நீர்கருவேலை மரங்கள் ஆக்கிரமித்து அடைத்துக் கொண்டுள்ளன.

அவற்றை அகற்றும் பணி தற்போது நடைபெறுகிறது. தொத்திக்குளம் பகுதியில் உள்ள கால்வாய் பாலத்தில் ஏற்பட்டுள்ள நீரோட்ட பாதை அடைப்புகளை பொதுப்பணிதுறையினர் மற்றும் விவசாயிகள் இணைந்து மேற்கொண்டனர்.

இதுகுறித்து மானூர் பெரியகுளம் விவசாயிகள் சங்க நிர்வாகிகள் முகமது இப்ராஹிம், சந்திரபால் ஆகியோர் கூறுகையில், நடப்பு ஆண்டு வடகிழக்கு பருவமழை சீசனில் மானூர் பெரியகுளம் நிரம்பும் என எதிர்பார்க்கிறோம். அதற்கான வாய்ப்புகள் உள்ளது. அதேநேரத்தில் சிற்றாறு நீரை அதிக அளவில் இக்குளத்திற்கு விரைவில் வந்து சேர அதிகாரிகள் துரித உதவிகளை மேற்கொள்ள வேண்டும் என்றனர்.

The post மானூர் பெரிய குளத்திற்கு நீர்வரும் கால்வாய் ஆக்கிரமிப்பு அடைப்புகள் சீரமைப்பு appeared first on Dinakaran.

Related Stories: