×

சில்லி பாயிண்ட்ஸ்…

சாம்சன் நீக்கம்

இந்திய அணியின் அதிரடி பேட்ஸ்மேன், விக்கெட் கீப்பர் சஞ்சு சாம்சன். ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் அணியின் கேப்டனாக தொடர்கிறார். இந்நிலையில் நாளை தொடங்கும் விஜய் ஹசாரே கோப்பை ஒருநாள் தொடரில் கேரளா அணிக்கு கேப்டனாக களமிறங்க இருந்தார். ஆனால் போட்டிக்கு முன்னதாக நடந்த பயிற்சி முகாமில் அவர் பங்கேற்காததால் அவர் அணியில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாக கேரளா கிரிக்கெட் சங்கம் அறிவித்துள்ளது. இத்தனைக்கும் சாம்சன், முகாமில் பங்கேற்க முடியாததற்கான காரணத்தையும் சசங்கத்துக்கு எழுதி இருந்தார். ஆனால் அதனை சங்கம் ஏற்கவில்லை. மற்ெறாரு மூத்த வீரர் சச்சின் பேபியும் காயம் காரணமாக அணியில் சேரவில்லை. அதனால் சல்மான் நிசார் புதிய கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.

தமிழ்நாடு அறிமுகம்

ஹாக்கி இந்தியா லீக் என்ற பெயரில் உள்ளூர் ஹாக்கிப் போட்டி மீண்டும் நடைபெற உள்ளது. ரூர்கேலாவில் டிச.28ம் தேதி தொடங்க உள்ள இப்போட்டியில் பங்கேற்கும் தமிழ்நாடு டிராகன்ஸ் அணியின் வீரர்கள் அறிமுக விழா சென்னையில் நடைபெற்றது. கூடவே வீரர்களுக்கான சீருடையும், இலட்சினையும் அறிமுகம் செய்யப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் வீரர்களுடன் தமிழ்நாடு அணி உரிமையாளர் சார்லஸ் மார்ட்டின் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

நியூசி-ஆஸி ஆட்டம் ரத்து

நியூசிலாந்து சென்றுள்ள ஆஸ்திரேலியா பெண்கள் அணி 3 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடுகிறது. இந்த 3 ஆட்டங்களும் வெலிங்டன்னில் நடக்கின்றன. இந்நிலையில் முதல் ஒருநாள் ஆட்டம் நேற்று நடைபெற இருந்தது. ஆனால் அங்கு பெய்த மழை காரணமாக ஆட்டம் டாஸ் கூட போடாமல் ரத்து செய்யப்பட்டது. இவ்விரு அணிகளுக்கு இடையிலான 2வது ஒருநாள் ஆட்டம் நாளை நடக்கிறது.

இனி பாகிஸ்தானும் வராது

சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் போட்டி மார்ச் மாதம் பாகிஸ்தானில் நடைபெறுவதாக இருந்தது. அங்கு செல்ல மறுத்த இந்தியா, போட்டியை வேறு நாட்டுக்கு மாற்றும்படி ஐசிசியை வலிறுத்தியது. அதற்கு பாக் எதிர்ப்பு தெரிவித்தது. இந்நிலையில் இரண்டு தரப்புக்கும் இடையில் ஐசிசி நிர்வாகிகள் சமரச பேச்சுவார்த்தை நடத்தினர். அதில் தீர்வு காண முடியவில்லை. அதனையடுத்து ‘சாம்பியன்ஷிப் கோப்பை போட்டி பாகிஸ்தானிலும், இந்தியா விளையாடும் ஆட்டங்கள் பொதுவான நாடுகளிலும் நடத்தப்படும்’ என்று ஐசிசி நேற்று அறிவித்தது. கூடவே ‘இந்தியா, பாகிஸ்தான் இடையிலான ஆட்டங்கள் இனி இந்தியா அல்லது பாகிஸ்தானில் நடைபெறாது.

இப்படி 2027ம் ஆண்டு வரை உலக கோப்பை உட்பட எந்த வகையான போட்டியாக இருந்தாலும் இந்த இரு நாடுகளும் மோதுவாதாக இருந்தால் அவை இரு நாடுகளுக்கும் பொதுவான இடங்களில் மட்டுமே நடக்கும்’ என்றும் ஐசிசி அறிவித்துள்ளது. இந்தியா கிரிக்கெட் விளையாட பாகிஸ்தான் செல்லாவிட்டாலும், பாகிஸ்தான் இங்கு வந்து விளையாடி வந்தது குறிப்பிடத்தக்கது. ஆனால் இந்தியாவில் அடுத்த ஆண்டு நடைபெற உள்ள மகளிர் உலக கோப்பை, 2026ம் ஆண்டு நடைபெற உள்ள ஆண்கள் உலக கோப்பை ஆகியவற்றில் விளையாட பாகிஸ்தான் இங்கு வராது. இரு நாடுகளும் விளையாடும் பொதுவான நாடு எது என்பது நேற்று அறிவிக்கப்படவில்லை.

The post சில்லி பாயிண்ட்ஸ்… appeared first on Dinakaran.

Tags :
× RELATED இலங்கை அணிக்கு எதிரான 2வது டி20...