தொழிலாளர்கள் பற்றாக்குறையால் நாகர்கோவிலில் குறைந்து வரும் கரும்பு சாகுபடி

நாகர்கோவில்: குமரி மாவட்டத்தில் ெநற்பயிர், ரப்பர், தென்னை, வாழை, மரவள்ளி, காய்கறி பயிர்கள், மலைபயிர்கள் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. காவிரி டெல்டா மாவட்டமான தஞ்சை, திருவாரூர், மதுரை, மேலூர் உள்ளிட்ட பகுதிகளில் தை பொங்கலுக்கு விற்பனை செய்யும் வகையில் கரும்பு சாகுபடி நடப்பது வழக்கம். அங்கு விளைவிக்கப்படும் கரும்பு, பொங்கல் பண்டிகையையொட்டி குமரிக்கு அதிகம் வருகிறது.

இதனை தவிர ஜூஸ் கடைகளுக்கும் கரும்பு தினமும் வந்துகொண்டு இருக்கிறது. கரும்பின் தேவை அதிகரிப்பால், குமரி மாவட்டத்திலும் கரும்பு சாகுபடி ஆங்காங்கே நடந்து வருகிறது. நாகர்கோவில் ஊட்டுவாழ்மடம் அருகே இளங்கடையை சேர்ந்த முருகன் என்பவர் கரும்பு சாகுபடி செய்துள்ளார். இது போல் அஞ்சுகிராமம் பகுதியில் முத்துக்குமார் என்ற விவசாயியும் கரும்பு சாகுபடி செய்து வருகிறார்.

இவர்கள் சாகுபடி செய்யும் கரும்புகளை ஜூஸ் கடைகளுக்கு விற்பனை செய்து வருகின்றனர். விவசாயி முருகன் கடந்த காலங்களில் ஊட்டுவாழ்மடம் பகுதியில் சுமார் 2 ஏக்கர் பரப்பளவில் கரும்பு சாகுபடி செய்து இருந்தார். வேலை ஆட்கள் பற்றாக்குறை மற்றும் கரும்பு விலை இல்லாததால், தற்போது 50 சென்ட் நிலத்தில் கரும்பு சாகுபடி செய்துள்ளார்.

இது குறித்து விவசாயி முருகன் கூறியதாவது: நான் நெல், வாழை, காய்கறி பயிர்களை சாகுபடி செய்து வருகிறேன். தற்போது 25 ஏக்கர் பரப்பளவில் நெல்சாகுபடி செய்துள்ளேன். மேலும் சுழற்சி முறையில் காய்கறி பயிர்களை சாகுபடி செய்து வருகிறேன். இதனை தவிர கரும்பு சாகுபடி செய்யலாமா என ஆலோசனையின் பேரில் மதுரை மேலூரில் கரும்பு சாகுபடி செய்துவரும் விவசாயிகளிடம் கரும்பு சாகுபடி செய்வது எப்படி என தொழில்நுட்பத்தை தெரிந்துகொண்டேன். ஊட்டுவாழ்மடம் பகுதியில் 2 ஏக்கர் பரப்பளவில் கரும்பு சாகுபடி செய்தேன். நெல், வாழை, காய்கறி பயிர்கள் சாகுபடி முதல் அறுவடை காலம் வரை தொழிலாளர்கள் வேலைக்கு கிடைக்கின்றனர்.

ஆனால் கரும்பு சாகுபடி முதல் அறுவடை வரை வேலைக்கு தொழிலாளர்கள் கிடைப்பது இல்லை. அதுபோல் தை பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெட்டும்போது போதிய வருமானமும் கரும்புக்கு கிடைக்காது. இதனால் குறைந்த விலைக்கு கரும்புகள் விற்பனை செய்தேன். இதன் காரணமாக தற்போது கரும்பு சாகுபடி பரப்பளவை குறைத்துள்ளேன். கடந்த காலங்களில் மாசி மாதம் கரும்பு சாகுபடி செய்வேன். 12 மாதங்கள் கடந்து தை பொங்கல் பண்டிகைக்கு அறுவடை செய்வேன். வெளி மாவட்டங்களில் இருந்து அதிக கரும்புகள் வருவதால் போதுமான லாபம் எனக்கு கிடைக்கவில்ைல.

இதனால் சாகுபடி செய்யும் உத்தியை மாற்ற வேண்டும் என கருதி 50 சென்ட் நிலத்தில் கடந்த ஏப்ரல் மாதம் கரும்பு சாகுபடி செய்தேன். இந்த கரும்புகளை கோடைவெயிலின் தாக்கம் இருக்கும் ஏப்ரல் மாதம் அறுவடை செய்யவுள்ளேன். ஏப்ரல் மாதம் அறுவடை செய்து ஜூஸ் கடைகளுக்கு விற்பனை செய்தால் கரும்புக்கு நல்ல விலை கிடைக்கும் என்றார்.

The post தொழிலாளர்கள் பற்றாக்குறையால் நாகர்கோவிலில் குறைந்து வரும் கரும்பு சாகுபடி appeared first on Dinakaran.

Related Stories: