இந்நிலையில் குளிர்கால கூட்டத்தொடரில் பங்கேற்க நாடாளுமன்றத்துக்கு நேற்று வந்த இந்தியா கூட்டணி கட்சி எம்பிக்கள், அமித்ஷாவை கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். காங்கிரஸ், திமுக, ஆர்ஜேடி, இடதுசாரிகள், ஆம் ஆத்மி உள்ளிட்ட கட்சியினர் கையில் அம்பேத்கர் படத்தை ஏந்தியவாறு ‘அமித்ஷா மன்னிப்பு கேட்க வேண்டும்’ என கோஷமிட்டனர். அம்பேத்கரை அவமதித்ததற்காக அமித்ஷா நாட்டு மக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும், தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டுமென மாநிலங்களவை எதிர்க்கட்சி தலைவரான காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே வலியுறுத்தினார். இதேபோல் மக்களவையிலும் அமித்ஷா மன்னிப்பு கேட்கக்கோரி எதிர்க்கட்சி எம்பிக்கள் அமளியில் ஈடுபட்டனர்.
அதிக பாவங்கள் செய்பவர்கள் தான் புண்ணியத்தை பற்றி கவலைப்பட வேண்டும். நாட்டை பற்றியும், மக்களை பற்றியும், அரசியல் சட்டத்தின் பாதுகாப்பு பற்றியும் கவலைப்படுவோர் புராட்சியாளர் அம்பேத்கர் பெயரைத்தான் சொல்வார்கள் என்று அமித்ஷாவின் பேச்சுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்திருந்தார். இந்தநிலையில் அமித்ஷாவின் பேச்சுக்கு கண்டனம் தெரிவித்து தமிழ்நாடு முழுவதும் திமுக சார்பில் மாவட்ட தலைநகரங்களில் இன்று(19ம் தேதி) காலை ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று கட்சி தலைமை அறிவித்தது. அதன்படி மாவட்ட தலைநகரங்களில் இன்று ஆர்ப்பாட்டம் நடந்தது.
சென்னையில் திமுக ரீதியாக உள்ள 5 மாவட்டங்கள் சார்பில் மொத்தம் 75 இடங்களில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சென்னை கிழக்கு மாவட்ட திமுக சார்பில் ஓட்டேரி மேம்பாலம் அருகில் மேயர் பிரியா தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. வள்ளுவர்கோட்டம் அருகே திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, மாவட்டச் செயலாளர் சிற்றரசு தலைமையில் ஆர்பாட்டம் நடைபெற்றது. சென்ைன தென்மேற்கு மாவட்ட திமுக சார்பில் மயிலை தா.வேலு தலைமையில் சாலை சிட்டி சென்டர் அருகில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சேப்பாக்கம் பகுதி திமுக சார்பில் சிந்தாதிரிப்பேட்டை அருணாச்சலம் தெரு வெங்கடேஸ்வரா ஓட்டல் அருகில் பகுதிச் செயலாளர் மதன்மோகன் தலைமையில் ஆர்பாட்டம் நடைபெற்றது.
அதேபோன்று சைதாப்பேட்டை மேற்கு பகுதி செயலாளர் கிருஷ்ணமூர்த்தி தலைமையில் கலைஞர் வளைவு அருகே ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சென்னை மாநகராட்சி மண்டல குழு தலைவர் துரைராஜ் தலைமையில் வேளச்ச்சேரி சாலையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தாம்பரத்தில் எஸ்.ஆர்.ராஜா எம்எல்ஏ தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதேபோன்று, வடசென்னை கிழக்கு மாவட்ட திமுக சார்பில் 16 இடங்களிலும், சென்னை தெற்கு மாவட்ட திமுக சார்பில் 26 இடங்களிலும் ஆர்ப்பாடம் நடைபெற்றது.
சென்னையில் உள்ள திமுக மாவட்ட ரீதியாக சென்னை வடக்கு, சென்னை வட மேற்கு, சென்னை கிழக்கு, சென்னை மேற்கு, சென்னை தென் மேற்கு, சென்னை தெற்கு என 5 மாவட்டங்கள் சார்பில் மொத்தம் 75 இடங்களில் இன்று காலை அமித்ஷாவை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தின் போது, அமித்ஷாவை பதவி விலக கோரி கண்டன கோஷங்களை எழுப்பினர். செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களிலும் ஆர்பாட்டங்கள் நடைபெற்றன.
நாகை அவுரித்திடலில் மாவட்ட செயலாளர் கவுதமன் தலைமையிலும், மயிலாடுதுறை கிட்டப்பா அங்காடி முன் மாவட்ட செயலாளர் நிவேதா முருகன் தலைமையிலும், பெரம்பலூர் புதுபஸ்ஸ்டாண்டில் மாவட்ட செயலாளர் ஜெகதீசன், தஞ்சை பழைய பஸ்ஸ்டாண்டில் துரை சந்திரசேகரன் எம்எல்ஏ, திருவாரூர் பழைய பஸ் நிலையத்தில் பூண்டி கலைவாணன் எம்எல்ஏ தலைமையிலும் ஆர்ப்பாட்டம் நடந்தது. புதுக்கோட்டை தலைமை தபால் நிலையம் முன் வடக்கு மாவட்ட செயலாளர் செல்லபாண்டியன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் எம்எல்ஏ முத்துராஜா உள்ளிட்டோர் பங்கேற்றனர். அரியலூர் தலைமை தபால் நிலையம் முன் மாவட்ட துணை செயலாளர் சந்திரசேகர், கரூர் தலைமை தபால் நிலையம் முன் மாவட்ட அவை தலைவர் ராஜேந்திரன், திருச்சி கலெக்டர் அலுவலகம் அருகில் மத்திய மாவட்ட செயலாளர் வைரமணி தலைமையிலும் போராட்டம் நடந்தது. இதில் அமைச்சர் அமித் ஷா பதவி விலக கோரியும், ஒன்றிய அரசை கண்டித்தும் கோஷங்கள் எழுப்பினர்.
சேலம் மத்திய மாவட்ட சார்பில் சூரமங்கலம் தபால் நிலையம், காந்திரோடு வருமானவரித்துறை அலுவலகம், கோட்டை ஸ்டேட் வங்கி முன்பும் ஆர்ப்பாட்டம் நடந்தது. சேலம் கிழக்கு மாவட்ட திமுக சார்பில் மாவட்ட செயலாளர் எஸ்.ஆர்.சிவலிங்கம் தலைமையில் அமானிகொண்டலாம்பட்டியிலுள்ள பி.நாட்டாமங்கலம் அம்பேத்கர் சிலை முன்பு ஆர்ப்பாட்டம் நடந்தது. சேலம் மேற்கு மாவட்ட திமுக சார்பில் அமித்ஷாவை கண்டித்து இடைப்பாடி, சங்ககிரி, மேட்டூர் பகுதிகளில் உள்ள தபால் அலுவலகங்கள் முன்பு ஆர்ப்பாட்டம் நடந்தது.
இதேபோல் கிருஷ்ணகிரி புதிய பேருந்து நிலையம் அண்ணா சிலை எதிரே திமுக கிழக்கு மாவட்ட செயலாளர் மதியழகன் எம்எல்ஏ தலைமையிலும் ஓசூர் ராம்நகர் அண்ணா சிலை அருகில் மேற்கு மாவட்ட செயலாளர் பிரகாஷ் எம்எல்ஏ தலைமையிலும் ஆர்ப்பாட்டம் நடந்தது. தர்மபுரி பிஎஸ்என்எல் அலுவலகம் முன்பு கிழக்கு மாவட்ட சார்பில் நகர செயலாளர் நாட்டான் மாது தலைமையிலும், பாப்பிரெட்டிப்பட்டி பேருந்து நிலையம் அம்பேத்கர் சிலை அருகில் மேற்கு மாவட்ட செயலாளர் பழனியப்பன் தலைமையிலும், நாமக்கல் அண்ணா சிலை அருகில் கிழக்கு மாவட்ட திமுக அவைத்தலைவர் மணிமாறன் தலைமையிலும், திருச்செங்கோட்டில் அண்ணா சிலை அருகில் மேற்கு மாவட்ட செயலாளர் மதுரா செந்தில் தலைமையிலும் ஆர்ப்பாட்டம் நடந்தது.
மதுரையில் மாநகர் மாவட்ட செயலாளர் கோ.தளபதி தலைமையில், கோ.புதூர் பஸ்நிலையத்தில் திமுகவினர் இன்று ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதேபோல, சிவகங்கையில் திமுக சார்பில் அம்பேக்தர் சிலை அருகே நகர திமுக செயலாளர் துரை ஆனந்த் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தேனியில் வடக்கு மாவட்ட திமுக சார்பில் தேனி நகர் நேரு சிலை அருகே ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு பெரியகுளம் தொகுதி எம்எல்ஏ சரவணக்குமார் தலைமை வகித்தார். விருதுநகர் தேசபந்து மைதானத்தில் எம்எல்ஏ ஏஆர்ஆர் சீனிவாசன் தலைமையில் நகர்மன்ற தலைவர் மாதவன் முன்னிலையில் திமுகவினர் அமித்ஷாவை கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில், நகர செயலாளர் தனபாலன் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர். இதேபோல, ராமநாதபுரம், திண்டுக்கல் மாவட்டங்களில் அமித்ஷாவை கண்டித்து திமுகவினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
கடலூர் மஞ்சக்குப்பம் தலைமை தபால் நிலையம் அருகே கடலூர் கிழக்கு மாவட்ட திமுக பொருளாளர் எம்ஆர்கேபி கதிவரன் தலைமையில் மத்திய அமைச்சர் அமித்ஷாவை கண்டித்து திமுகவினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதில், ஐயப்பன் எம்எல்ஏ, மேயர் சுந்தரி ராஜா உள்ளிட்ட ஏராளமான நிர்வாகிகள், தொண்டர்கள் கலந்து கொண்டனர். விழுப்புரம் பழைய பேருந்து நிலையம் அருகில் உள்ள அண்ணல் அம்பேத்கர் சிலை அருகில் இன்று காலை திமுகவினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
விழுப்புரம் வடக்கு மாவட்ட திமுக சார்பில் திண்டிவனம் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு இன்று காலை 11 மணி அளவில் வடக்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் சேகர் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. கள்ளக்குறிச்சி தெற்கு மாவட்ட திமுக சார்பில் நான்குமுனை சந்திப்பில் தெற்கு மாவட்ட திமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கோவை மாவட்ட ஒருங்கிணைந்த திமுக சார்பில் சாயிபாபாகாலனி மேட்டுப்பாளையம் ரோட்டில் உள்ள பிஎஸ்என்எல் முதன்மை பொதுமேலாளர் அலுவலகம் முன்பு இன்று காலை ஆர்ப்பாட்டம் நடந்தது. திமுக மாவட்ட செயலாளர்கள் நா.கார்த்திக் (மாநகர்), தொண்டாமுத்தூர் ரவி (கோவை வடக்கு), தளபதி முருகேசன் (கோவை தெற்கு) ஆகியோர் தலைமை தாங்கினர். இதில், கோவை ெதாகுதி எம்.பி., கணபதி ராஜ்குமார் உள்பட திரளானவர்கள் பங்கேற்றனர்.
ேவலூர் பழைய பஸ் நிலையத்தில் திருவள்ளுவர் சிலை அருகே திமுக சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. மாவட்ட செயலாளர் ஏ.பி.நந்தகுமார் எம்எல்ஏ, மாநகர செயலாளர் கார்த்திகேயன் எம்எல்ஏ ஆகியோர் தலைமையில் நடந்த இந்த ஆர்ப்பாட்டத்தில் ஏராளமான திமுகவினர் கலந்துகொண்டு அமித்ஷாவை கண்டித்து கோஷமிட்டனர். திருவண்ணாமலை மாவட்டத்தில் பல இடங்களில் போராட்டம் நடந்தது. திருப்பத்தூர் பஸ் நிலையத்தில் திமுக சார்பில் நகர செயலாளர் ராஜேந்திரன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது. நெல்லை வண்ணார்பேட்டையில் மத்திய மாவட்ட பொறுப்பாளர் டி.பி.எம்.மைதீன்கான், கிழக்கு மாவட்ட செயலாளர் ஆவுடையப்பன் தலைமையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில் பாளை எம்எல்ஏ அப்துல்வகாப், மேயர் ராமகிருஷ்ணன் உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்றனர்.
தென்காசி புதிய பஸ் நிலையத்தில் தெற்கு மாவட்ட பொறுப்பாளர் ஜெயபாலன் தலைமையில் திமுக கூட்டணி கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதுபோல் சங்கரன்கோவிலில் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு வடக்கு மாவட்ட செயலாளர் ராஜா எம்எல்ஏ தலைமை வகித்தார். நாகர்கோவிலில் தலைமை தபால் நிலையம் முன்பு குமரி கிழக்கு மாவட்ட திமுக செயலாளர் மேயர் மகேஷ் தலைமையில் இன்று ஆர்ப்பாட்டம் நடந்தது. இதனை போன்று குமரி மேற்கு மாவட்ட திமுக சார்பில் தக்கலையில் உள்ள தலைமை தபால் நிலையம் முன்பு முன்னாள் அமைச்சர் மனோதங்கராஜ் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தமிழகம் முழுவதும் நடைபெற்ற ஆர்ப்பாட்டங்களில் கலந்து கொண்டவர்கள் அண்ணல் அம்பேத்கரை அவமதித்த அமித்ஷாவை கண்டித்து கோஷம் எழுப்பினர்.
அமித்ஷா உருவபொம்மை எரிப்பு
அண்ணல் அம்பேத்கரை அவமதித்த அமித்ஷாவை கண்டித்து தமிழகத்தில் பல்வேறு இடங்களில் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் ரயில் மறியல் போராட்டம் மற்றும் ஆர்ப்பாட்டம் நடத்தினர். திருப்பத்தூர் ரயில் நிலையத்தில் இன்று காலையில் ரயில் மறியல் போராட்டம் நடத்த முயன்ற விடுதலை சிறுத்தை கட்சியினரை போலீசார் கைது செய்தனர். ஆம்பூர் ரயில் நிலையத்தில் திருப்பத்தூர் விசிக வடக்கு மாவட்ட செயலாளர் ஓம்பிரகாஷ் தலைமையில் ரயில் மறியல் போராட்டம் நடத்தப்போவதாக அறிவித்திருந்தனர். அதன்படி காலை 9.40 மணிக்கு ஆம்பூர் வந்த லால்பாக் எக்ஸ்பிரஸ் ரயிலை மாவட்ட செயலாளர் தலைமையில் மறித்தனர். அவர்களை போலீசார் தடுத்து கைது செய்தனர்.
ராணிப்பேட்டை முத்துக்கடை பஸ் நிலையத்தில் மாநில சுற்றுச்சூழல் அணி தலைவர் வினோத்காந்தி தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது. இதேபோல் முத்துக்கடை பஸ் நிலையம் அருகே விசிக சார்பில் மத்திய மாவட்ட செயலாளர் ரமேஷ்கர்ணா தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது. விழுப்புரம் மாவட்டம் திண்டிவனத்தில் ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபடுவதாக விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் அறிவித்ததை தொடர்ந்து திண்டிவனம் ரயில் நிலையம் முன்பு நூற்றுக்கு மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். நாகர்கோவிலில் வடசேரியில் அமித்ஷாவைக் கண்டித்து விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது கன்னியாகுமரி கிழக்கு மாவட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சி செயலாளர் கோபி பேரறிவாளன் தலைமையில் அமித்ஷாவின் உருவ பொம்மையை எரித்ததால் பரபரப்பு ஏற்பட்டது. அதை போலீசார் தடுத்து, உருவ பொம்மை எரித்தவர்களை கைது செய்தனர்.
The post அம்பேத்கரை அவமதித்த அமித்ஷாவை கண்டித்து தமிழகம் முழுவதும் திமுக போராட்டம்: மாவட்ட தலைநகரங்களில் நடந்தது appeared first on Dinakaran.