இந்த குழந்தைகள் காப்பகங்கள். பணிபுரியும் பெற்றோரின், குறிப்பாகப் பெண்களின் மன அழுத்தத்தைக் குறைக்கவும். பெண் தொழிலாளர்கள் அதிகளவில் பணியாற்றக்கூடிய சூழலை உருவாக்கவும் தமிழ்நாடு தொழில் முன்னேற்ற நிறுவனத்தின் மூலம் 17 தொழில் பூங்காக்களில் குழந்தைகள் காப்பகங்கள் தொடங்கப்பட உள்ளன. ஏற்கனவே 13 தொழிற்பூங்காக்களில் 63 குழந்தைகள் காப்பகங்கள் பல்வேறு தொழிற்சாலைகள் மூலம் நடத்தப்பட்டு வருகின்றன. இவற்றின் பயனாக ஏறத்தாழ 1 லட்சத்து 50 ஆயிரம் தொழிலாளர்கள் பயன்பெற்று வருகிறார்கள்.
2024-25ஆம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கையில் அறிவித்தபடி இந்த குழந்தைகள் காப்பகங்கள் வேலைக்குச் செல்லும் பெற்றோர்கள் தொழிற்சாலைகளில் கவலையின்றிப் பணியாற்றுவதற்கான சூழல்களை உருவாக்கிட உதவும். இந்த 17 தொழிற் பூங்காக்களில் புதிதாக ஏற்படுத்தப்படும் குழந்தைகள் காப்பகங்களில் ஏறத்தாழ 3 லட்சத்து 23 ஆயிரம் தொழிலாளர்கள் பயன்பெறுவார்கள். இத்திட்டத்தைச் செயல்படுத்துவதற்காக தமிழ்நாடு தொழில் முன்னேற்ற நிறுவனம் சென்னையில் உள்ள இந்திய வர்த்தக மற்றும் தொழில்துறை கூட்டமைப்பு சார்ந்த பெண்கள் நிறுவனத்துடன் (FICCI) இணைந்து பணியாற்ற உள்ளது.
இத்திட்டத்திற்குத் தேவையான உட்கட்டமைப்பு வசதிகளை தமிழ்நாடு தொழில் முன்னேற்ற நிறுவனம் உருவாக்கும். சென்னையில் உள்ள இந்திய வர்த்தக மற்றும் தொழில்துறை கூட்டமைப்பின் பெண்கள் அமைப்பு காப்பகங்களைச் செயல்படுத்தி பராமரிக்கும் பணிகளை மேற்கொள்ளும். குழந்தைகள் காப்பகங்கள் இந்த 2017-ஆம் ஆண்டு மகப்பேறு நன்மைச்சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ள தேசிய வழிகாட்டுதல்களின் அடிப்படையில் செயல்படும்.
தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத் துறை அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா முன்னிலையில் நடைபெற்ற இந்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் தமிழ்நாடு தொழில் முன்னேற்ற நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் கி.செந்தில்ராஜ் இ.ஆ.ப. மற்றும் இந்திய வர்த்தக மற்றும் தொழில்துறை கூட்டமைப்பினுடைய (சென்னை) பெண்கள் பிரிவின் தலைவர் முனைவர் திவ்யா அபிஷேக் ஆகியோர் இணைந்து கையெழுத்திட்டனர்.தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத் துறை அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்டு உரையாற்றும்போது,
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொலைநோக்குப் பார்வை மற்றும் திடமான முயற்சிகளின் காரணமாக திராவிட மாடல் ஆட்சியின் சிறப்புகளைத் தமிழ்நாடு தொடர்ந்து மேம்படுத்தி வருகிறது. தமிழ்நாடு அரசு அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சி மற்றும் நலன் ஆகியவற்றை முக்கிய நோக்கமாகக் கொண்டுள்ளது. இதன் காரணமாக இந்தியா முழுவதும் உள்ள தொழிற்சாலைகளில் பணிபுரியும் பெண்களில் 43 சதவீதத்தினர் தமிழ்நாடு மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் என்பதில் நாங்கள் பெருமிதம் கொள்கிறோம். இது இந்திய தொழிற்துறை வளர்ச்சிக்கு. தமிழ்நாட்டுப் பெண் தொழிலாளர்களின் விலைமதிப்பற்ற பங்களிப்பைப் பறைசாற்றுகிறது.
தமிழ்நாடு தொழில் முன்னேற்ற நிறுவனம், 17 தொழிற் பூங்காக்களில் குழந்தைகள் காப்பக வசதியை அறிமுகப்படுத்துவது உழைக்கும் பெண்களின் குறிப்பாக, தாய்மார்களின் தனிப்பட்ட பணிச்சுமையைக் குறைப்பதற்கான மற்றொரு சிறப்பான திட்டமாகும். இந்த முன்முயற்சியானது வேலைக்குச் செல்லும் பெண்களின் வேலை மற்றும் தனிப்பட்ட பொறுப்புகளைச் சமநிலைப்படுத்துவதோடு அவர்களின் பொருளாதாரம் மேம்படுவதற்கும் உதவுகிறது. பணிச்சூழலை மேம்படுத்துவதன் மூலம் பெண் தொழிலாளர்களின் தனிப்பட்ட தேவைகளைப் பூர்த்தி செய்வதோடு பாலின சமத்துவத்தையும் மேம்படுத்துகிறது.
இது, நமது மாநிலத்தின் உளவியல், பொருளாதார மற்றும் சமூக நலனை உயர்த்துகிறது. தொழில் வளர்ச்சியிலிருந்து தொழிலாளர் நலனைப் பிரிக்க முடியாது என்ற எங்கள் நம்பிக்கையின் பிரதிபலிப்பே இந்த முயற்சியாகும். பெண்களுக்கு அதிகாரம் அளித்து, தொழில்களை வலுப்படுத்துவதுடன் சமுகக் கட்டமைப்பையும் இது மேம்படுத்துகிறது. இந்திய வர்த்தக மற்றும் தொழில்துறை கூட்டமைப்பு (சென்னை) பெண்கள் அமைப்புடனான இந்தப் புரிந்துணர்வு ஒப்பந்தம், திராவிட மாடல் அரசின் “எல்லோர்க்கும் எல்லாம்”
என்ற கோட்பாட்டின் அடிப்படையில் அனைவரையும் உள்ளடக்கிய தொழில் சூழலை உருவாக்குவது ஒரு புதிய மைல்கல்லாக அமையும் என்று நான் நம்புகிறேன் ” என தொழில்துறை அமைச்சர் தெரிவித்தார்கள்.
இந்நிகழ்ச்சியில், தமிழ்நாடு தொழில் முன்னேற்ற நிறுவனத்தின் செயல் இயக்குநர் D.சிநேகா இ.ஆ.ப. மற்றும் தமிழ்நாடு தொழில் முன்னேற்ற நிறுவனத்தின் அதிகாரிகளும், இந்திய வர்த்தக மற்றும் தொழில்துறை கூட்டமைப்பு சென்னை பெண்கள் அமைப்பின் அதிகாரிகளும் கலந்துகொண்டனர்.
The post 17 சிப்காட் தொழிற்பூங்காக்களில் குழந்தைகள் காப்பகங்கள் அமைக்க அமைச்சர் டி.ஆர்.பி ராஜா முன்னிலையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்து.!! appeared first on Dinakaran.