கோவை, டிச. 19: கோவை தொப்பம்பட்டி கணபதி கார்டன் பகுதியை சேர்ந்தவர் மகாஸ்ரீ. இவர், கோவை நுகர்வோர் கோர்ட்டில் ஒரு மனு தாக்கல் செய்தார். மனுவில் கூறியிருப்பதாவது: கோவை மதுக்கரையில் கட்டுமான நிறுவனம் நடத்தி வரும் கோபாலகிருஷ்ணன் என்பவரிடம் வீட்டுமனை வாங்கி வீடு கட்ட ஒப்படைத்து இருந்தேன். 1,650 சதுரஅடி பரப்பளவில் வீடு கட்டுவதற்கு மொத்தம் ரூ.40 லட்சத்து 80 ஆயிரம் செலுத்தி இருந்தேன். ஆனால், கட்டுமானத்தை தாமதமாக நடத்தி கடந்த 2017-ம் ஆண்டு ஒப்படைத்தார். கட்டிட பணிகள் தரமானதாகவும் இல்லை.
ஒப்பந்தத்தில் குறிப்பிட்டபடி பொருட்களை பயன்படுத்தவில்லை. தரம் குறைந்த பொருட்களை பயன்படுத்தியுள்ளார். 10 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட குடிநீர் தொட்டிக்கு பதிலாக 8 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட குடிநீர் தொட்டி கட்டப்பட்டுள்ளது. தரமற்ற முறையிலும், பணிகளை முழுமையாக முடிக்காமலும் வீட்டை கட்டிக்கொடுத்த நிறுவனம், உரிய இழப்பீடு வழங்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது. மனுவை விசாரித்த நீதிபதி தங்கவேலு, உறுப்பினர்கள் மாரிமுத்து, சுகுணா ஆகியோர், கட்டுமான நிறுவனம் ரூ.1 லட்சம் இழப்பீடு வழங்கவும், கோர்ட் செலவாக ரூ.5 ஆயிரம் வழங்கவும் உத்தரவிட்டனர்.
The post கட்டுமான நிறுவனத்துக்கு ரூ.1 லட்சம் அபராதம் appeared first on Dinakaran.