உத்தரபிரதேச அமைச்சர் மீது லஞ்சப் புகார்: மோடி உத்தரவிட்டால் நொடியில் பதவியை ராஜினாமா செய்வேன்; கூட்டணி கட்சியின் அமைச்சர் கதறல்

லக்னோ: உத்தரபிரதேச அமைச்சர் மீது லஞ்சப் புகார் எழுந்த நிலையில், அவர் மோடி உத்தரவிட்டால் நொடியில் அமைச்சர் பதவியை ராஜினாமா செய்வேன் என்று பரபரப்பு அறிக்கை வெளியிட்டுள்ளார். உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்தின் அமைச்சரவையில் இடம்பெற்றுள்ள அமைச்சரும், அப்னா தளம் (எஸ்) கட்சியின் செயல் தலைவருமான ஆஷிஷ் படேல் நேற்றிரவு வெளியிட்ட பேஸ்புக் பதிவில், ‘தொழில்நுட்பக் கல்வித் துறைத் தலைவரை தேர்வு செய்வதில், நேரடி தேர்வுக்கு பதிலாக லஞ்சம் வாங்கிக் கொண்டு நிரப்பப்படுவதாக என் மீது குற்றச்சாட்டுகள் வைக்கப்படுகிறது.

இதுகுறித்து முதல்வர் விசாரணை நடத்த வேண்டும். என்னை அரசியல் ரீதியாக அப்புறப்படுத்துவதற்கான சதி நடக்கிறது. இதன் பின்னணியில் யார் இருக்கிறார்கள் என்பது தெரியும். அரசியல் ரீதியாக என்னைக் கொல்லும் சதித்திட்டத்தின் ஒரு பகுதியாக, எனக்கு எதிராக ஊடகங்கள் மற்றும் சமூக ஊடகங்களில் அவதூறுகள் பரப்பப்படுகின்றன. இதுபோன்ற பொய்யான குற்றச்சாட்டுகளுக்கு நான் பயப்பட மாட்டேன்.

ஆதரவற்றவர்களின் உரிமைகளுக்கான போராட்டத்தில் அப்னா தளம் (எஸ்) என்றும் பின்வாங்காது. சமூக நீதியை நிலை நாட்டுவதற்காக, பிரதமர் மோடி மற்றும் உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோரின் தலைமையின் கீழ் கடந்த 2014ம் ஆண்டில் இருந்து தேசிய ஜனநாயக கூட்டணியில் அப்னா தளம் (எஸ்) அங்கம் வகிக்கிறது. பிரதமர் மோடி உத்தரவிட்டால், ஒரு நொடியில் எனது அமைச்சர் பதவியை விட்டு விலகுவேன். அமைச்சர் பதவி என்பது எனது தனிப்பட்ட விருப்பம் இல்லை’ என்று கூறியுள்ளார்.

The post உத்தரபிரதேச அமைச்சர் மீது லஞ்சப் புகார்: மோடி உத்தரவிட்டால் நொடியில் பதவியை ராஜினாமா செய்வேன்; கூட்டணி கட்சியின் அமைச்சர் கதறல் appeared first on Dinakaran.

Related Stories: