விசா இல்லாமல் இந்தியர்கள் பயணம் செய்ய ரஷ்யா அனுமதிக்கவுள்ளதாக தகவல்..!!

டெல்லி: அடுத்தாண்டு முதல் விசா இல்லாமல் இந்தியர்கள் ரஷ்யாவிற்கு பயணம் செய்ய அனுமதி வழங்கி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. விசா இன்றி ரஷ்யாவுக்குள் நுழைய சீனா மற்றும் ஈரான் நாட்டுக் குடிமக்களுக்கு 2023 ஆகஸ்ட் 1 முதல் அனுமதி அளிக்கப்பட்டது. இத்திட்டம் வெற்றியடைந்துள்ளதைத் தொடர்ந்து. கடந்த ஜூன் மாதம் விசா இல்லாத சுற்றுலா பரிமாற்றங்களை செயல்படுத்துவது குறித்து இரு நாட்டு அதிகாரிகளும் ஒப்பந்தம் கொண்டுவருவது பற்றி விவாதித்தனர். அந்த வரிசையில் இந்தியக் குடிமக்களுக்கும் அச்சலுகையை வழங்க ரஷ்யா ஏற்பாடு செய்து வருகிறது.

இந்த நிலையில், மாஸ்கோ நகர சுற்றுலா நிர்வாகக் குழுத் தலைவர் எவ்ஜெனி கோஸ்லோவ் கூறுகையில், இந்தியர்கள் விசா இல்லாமல் ரஷ்யா வருவதற்கு அனுமதிக்கும் ஒப்பந்தம் தயாராகி வருகிறது. 2025 மார்ச் மாதம் அது அமலுக்கு வரும் என்று எதிர்பார்க்கிறோம்.விசா இல்லாமல் ரஷ்யா வர அனுமதிக்கும் நடைமுறை அமலுக்கு வந்தால், இந்தியாவில் இருந்து வரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை கணிசமாக அதிகரிக்கும்.

கல்வி, தொழில், சுற்றுலா உள்ளிட்ட பல்வேறு காரணங்களுக்காக ஆண்டுதோறும் பல்லாயிரக்கணக்கான இந்தியர்கள் ரஷ்யா வருகின்றனர். 2023ஆம் ஆண்டில் 60 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பயணிகள் வந்தனர். அது 2022ஆம் ஆண்டைவிட 26 விழுக்காடு அதிகம். 2023முதல் இந்தியர்களுக்கு இ-விசா வழங்கப்படுகிறது. விண்ணப்பித்த நான்கு நாள்களில் இ-விசா வழங்கப்பட்டு வருகிறது. 2023ஆம் ஆண்டு 9,500 இந்தியர்களுக்கு இ-விசா வழங்கப்பட்டது. இவ்வாண்டு ஜனவரியில் 1,700 இந்தியருக்கு இ-விசா வழங்கப்பட்டது,” என்று அவர் தெரிவித்தார்.

 

The post விசா இல்லாமல் இந்தியர்கள் பயணம் செய்ய ரஷ்யா அனுமதிக்கவுள்ளதாக தகவல்..!! appeared first on Dinakaran.

Related Stories: