திருவொற்றியூர்: திருவொற்றியூர் முதல் எண்ணூர் வரை கடற்கரை பகுதியில் சுமார் 11 கிலோ மீட்டர் தூரத்திற்கு நல்ல தண்ணீர் ஒடை குப்பம், திருச்சினாங்குப்பம், திருவொற்றியூர் குப்பம், பட்டினத்தார் கோயில் குப்பம், காசி விஸ்வநாதர் கோயில் குப்பம், இந்திரா காந்தி குப்பம், எர்ணாவூர் குப்பம், சின்ன குப்பம், பெரிய குப்பம், தாழங்குப்பம், நெட்டுக்குப்பம், காட்டுக்குப்பம் என சுமார் 25க்கும் மேற்பட்ட மீனவ கிராமங்கள் உள்ளன. இந்த கிராமங்களில் வசிக்கும் மக்கள் பெரும்பாலானோர் கடலில் மீன்பிடி தொழிலை நம்பி வாழ்கின்றனர்.
ஒரு காலத்தில் இந்த கிராமங்களில் மெரினாவை போல் பரந்த மணல் பரப்பு இருந்தது. மீனவ குடியிருப்புகளில் இருந்து சுமார் 800 மீட்டர் தூரத்திற்கு மணலாகவே காட்சியளித்தது. இந்த மணல் பரப்பை ஒட்டி சுமார் 40 அடி உயரம் கொண்ட ராஜகோபுரத்துடன் கூடிய காசி விஸ்வநாதர் கோயில், 1850ம் ஆண்டு தொடங்கப்பட்ட ஆங்கிலேயர் பள்ளி, சுமைதாங்கி, பல்வேறு தொழில் செய்யும் 31 கூடங்கள் அடங்கிய சுந்தரம் எஸ்டேட், அம்பிகா திரையரங்கம், இறால் பதப்படுத்தும் தொழிற்சாலைகள், 100 ஆண்டுகள் பழைமையான ஆலமரம், புங்கை, பூவரசு, தென்னை போன்ற மரங்கள், கோயில்கள், கிணறுகள், பழங்காலத்து வீடுகள் உள்ளிட்டவை இருந்தன.
மேலும் கடற்கரையில் எந்த இடத்திலிருந்து பார்த்தாலும் சுமார் 2 கிலோ மீட்டர் தூரத்திற்கு படகுகள், கட்டுமரங்களை பார்க்க முடியும். அந்த அளவிற்கு ஒரு இயற்கை சூழல் நிறைந்த கடலோர பகுதியாக இருந்தது. ஆனால், 1975ம் ஆண்டுக்கு பிறகு இந்த எண்ணூர், திருவொற்றியூர் பகுதிகளில் உள்ள கடற்கரை சிறிது சிறிதாக கடல் அலையால் அரிக்கப்பட்டு மணல் பகுதி குறைய தொடங்கியது. இந்த கடல் அரிப்பை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அரசிடம் மீனவர்கள் கோரிக்கை விடுத்தனர். இதையடுத்து, கடலரிப்பை தடுக்க கரையோரங்களில் பாறாங்கற்களை கொட்டுவதற்கு அரசு முடிவு செய்தது.
ஆனால் இதை செயல்படுத்த காலம் அதிகமாக தேவைப்பட்டது. இந்த இடைவெளியில் கடல் அரிப்பு அதிகமாகி, கடலோரத்தில் இருந்த வீடுகள், பள்ளிகள், நீர் ஆதாரமாக இருந்த கிணறுகள் போன்றவற்றை படிப்படியாக கடலுக்குள் சென்றன. அதுமட்டுமின்றி நல்ல தண்ணீர் ஒடைகுப்பம், ஒண்டி குப்பம், லட்சுமிபுரம், சதானந்தபுரம், ஏழு குடிசை, பலகை தொட்டி குப்பம், காசி கோயில் குப்பம், காசி விசாலாட்சிபுரம் போன்ற பல மீனவ கிராமங்களில் பெரும்பாலான பகுதி படிப்படியாக கடலில் மூழ்கின.
ஒரு கட்டத்தில் மீனவர்களின் தெய்வமாக விளங்கிய காசி விஸ்வநாதர் கோயில் கோபுரத்துடன் படிப்படியாக கடலில் மூழ்கியது. இதையடுத்து கடல் அரிப்பை தடுக்க வேண்டும் என்ற குரல் மீனவர் மட்டுமின்றி அனைவர் மத்தியிலும் ஓங்கி ஒலித்தது. இதனை தொடர்ந்து காசிமேடு முதல் எண்ணூர் வரை குடியிருப்புகள் அதிகமாக உள்ள பகுதிகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து 1998ம் ஆண்டு கடல் அரிப்பை தடுக்க கடற்கரைகளில் ராட்சத பாறாங்கற்கள் கொட்டும் பணி தொடங்கியது.
இதன் காரணமாக 2004ம் ஆண்டு சுனாமியின் போது, இந்த கரையோரங்களில் பாறாங்கற்கள் போடப்பட்டிருந்த பல பகுதிகள் பாதுகாக்கப்பட்டன என்றாலும், பல இடங்களில் கடற்கரையில் கொட்டப்பட்ட பாறாங்கற்களையே சுனாமி அலைகள் கடலுக்குள் இழுத்து சென்றது. இதையடுத்து கடல் சார் விஞ்ஞானிகள் ஆராய்ச்சி செய்து, கடல் அரிப்பை தடுக்க தூண்டில் வளைவு அமைப்பது மட்டுமே நிரந்தர தீர்வாக இருக்கும் என தெரிவித்தனர்.
அதன்பேரில், திருவொற்றியூர் முதல் எண்ணூர் வரை தூண்டில் வளைவு அமைக்கும் நடவடிக்கையில் மீன்வளத்துறை அதிகாரிகள் ஈடுபட்டனர். அதன்படி, கடந்த 2006ம் ஆண்டு திருவொற்றியூர் சுங்கச்சாவடி முதல் ராமகிருஷ்ணா நகர் வரை முதல்கட்டமாக சுமார் ரூ.28 கோடி மதிப்பீட்டில் தூண்டில் வளைவு அமைக்கும் பணி தொடங்கியது. தொடர்ந்து 2017ல் நெட்டுக்குப்பம் – தாழங்குப்பம் வரை கடல் பகுதியில், ரூ.31.82 கோடியில் தூண்டில் வளைவு அமைக்கப்பட்டது.
இந்நிலையில், அதன் பிறகு வந்த புயல் கால கடல் சீற்றத்தில் நெட்டுகுப்பத்தில் போடப்பட்ட தூண்டில் வளைவுகள் கடலுக்குள் இழுத்துச் செல்லப்பட்டன. எடை குறைந்த கற்களை பயன்படுத்தியதால் இந்த தூண்டில் வளைவுகள் வலுவிழந்து கடலில் மூழ்கியது. இதையடுத்து 18.2.2019 அன்று ரூ.38.38 கோடி செலவில், நெட்டுக்குப்பத்தில் இருந்து எர்ணாவூர் குப்பம் வரை 9 இடங்களில் தூண்டில் வளைவு அமைக்கும் திட்டம் தொடங்கப்பட்டது. ஆனால் பல்வேறு காரணங்களால் சின்ன குப்பம் வரை மட்டுமே தூண்டில் வளைவு போடப்பட்டது.
விடுபட்ட இடங்களான சின்ன குப்பம் முதல் எர்ணாவூர் வடக்கு பாரதியார் நகர் வரை தூண்டில் வளைவு அமைக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் பல ஆண்டுகளாக கோரிக்கை விடுத்து வருகின்றனர். மேலும், இந்திரா காந்தி குப்பம் முதல் எர்ணாவூர் குப்பம் வரை கரையோரத்தில் போடப்பட்ட கடல் தடுப்பு பாறாங்கற்களும் சிதறி போதிய பாதுகாப்பு இல்லாமல் உள்ளது. இதனால் கடல் சீற்றம் ஏற்பட்டால் எண்ணூரின் மத்திய பகுதியில் உள்ள இந்த கிராமங்கள் கடல் அலையால் பாதிக்கப்படும் அபாயம் உள்ளது.
அதுமட்டுமின்றி சுனாமி போன்ற பேரிடர் ஏற்பட்டால் இந்த கிராமங்களின் வழியாக கடல் நீர் ஊருக்குள் புகுந்து குடியிருப்புகள் இடிந்து விழுவதோடு, அருகிலுள்ள கோரமண்டல் உர தொழிற்சாலையும் பாதிக்கப்பட்டு அமோனியா வெளியேறி சுற்று வட்டாரத்தில் 5 கிலோ மீட்டர் சுற்றளவு வரை வசிக்கும் மக்களுக்கு பேராபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே, சின்ன குப்பம் முதல் வடக்கு பாரதியார் நகர் வரை தூண்டில் வளைவு அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
இதுகுறித்து அப்பகுதி மீனவர்கள் கூறுகையில், ‘‘கடந்த காலங்களில் கடரிப்பை தடுக்க கால தாமதமாக திட்டத்தை செயல்படுத்தியதால் பல வீடுகள் கடலில் மூழ்கியது. 2011ம் ஆண்டு தானே புயலில் நெட்டு குப்பத்தில் மீனவர்களின் பல குடியிருப்புகள் கடலில் புதைந்தது. தற்போது எர்ணாவூர் குப்பம், இந்திராகாந்தி குப்பம் பர்மா நகர், நேதாஜி நகர் எர்ணாவூர் வடக்கு பாரதியார் நகர் ஆகிய கிராமங்களில் தூண்டில் வளைவு இல்லாததால், வரும் காலத்தில் அழிந்துவிடும் நிலை உள்ளது.
இங்கு தூண்டில் வளைவு அமைக்க அனுமதி கேட்டு கிடைக்க வில்லை என்று அதிகாரிகள் கூறுகிறார்கள். ஆனால் கடந்த 3 ஆண்டுகளாக தமிழகம் மற்றும் பாண்டிசேரி கடற்கரை பகுதிகளில் தூண்டில் வளைவு அமைக்கப்பட்டுள்ளது. விடுபட்ட இடங்களில் தூண்டில் வளைவு அமைக்காமல் அதிகாரிகள் அலட்சிய போக்கில் செயல்படுகின்றனர். கடலோடு போராடும் மீனவர்களின் வாழ்க்கை கடலோடு கரைந்து விடுகிறது. எங்களின் எதிர்காலத்தை பாதுகாக்க எண்ணூரில் விடுபட்ட கடற்கரை பகுதியில் தூண்டில் வளைவு அமைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்,’’ என்றனர்.
* கட்டமைப்பில் மாற்றம்
நீர்வளத்துறை, மீன்வளத்துறை, கடலோர ஒழுங்குமுறை மண்டலம், தேசிய பசுமை தீர்ப்பாயம் போன்ற பல்வேறு அரசு அமைப்புகள் கடற்கரையை பாதுகாக்க பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. இதில் கடல் அலையின் சீற்றத்தை தடுத்தால் கடல் அரிப்பை தடுக்கலாம் என ஆராய்ந்து கடலில் ‘டி’ வடிவில் தூண்டில் வளைவு அமைக்கப்படுகிறது. இதற்கு பதிலாக சென்னை மற்றும் எண்ணூர் துறைமுக விரிவாக்கத்தின் கட்டமைப்பை மாற்றி இருந்தால் கடல் அரிப்பு ஏற்படாமல் தடுத்து இருக்கலாம் என்பது கடல் சூழ்நிலையை அறிந்த வயது முதிர்ந்த மீனவர்களின் கருத்தாக உள்ளது.
* தடையில்லா சான்று சிக்கல்
மீன்வளத்துறை அதிகாரிகள் கூறுகையில், ‘‘சின்ன குப்பம் முதல் எர்ணாவூர் வடக்கு பாரதியார் நகர் வரை தூண்டில் வளைவு அமைப்பதற்காக கடந்த 2021ம் ஆண்டு கடலோர ஒழுங்குமுறை மண்டல ஆணையத்திடம் அனுமதி கோரினோம். ஆனால் தற்போதுள்ள கடலில் போடப்பட்டுள்ள தூண்டில் வளைவுகளால் ஆமைகள் போன்ற கடல் வாழ் உயிரினங்கள் இனப்பெருக்கம் பாதிக்கப்படுவதாகவும், இந்த தூண்டில் வளைவுகள் போடும்போது பிற பகுதிகளில் கடல் அரிப்பை ஏற்படுத்தும் என தேசிய பசுமை தீர்ப்பாயம் தெரிவித்ததால் இதற்கு தடையில்லா சான்று கிடைக்கவில்லை.
இதனால் பாறாங்கற்களுக்கு பதிலாக செயற்கையான பாறாங்கற்களை கொண்டு தூண்டில் வளைவு அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காக தேசிய கடல் தொழில்நுட்ப நிறுவனம் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. இதற்கு அனுமதி கிடைத்தவுடன் எண்ணூரில் விடுபட்ட இடங்களில் தூண்டில் வளைவு அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும்,’’ என்றார்.
* சமூக ஆர்வலர்கள் கூறுகையில், ‘‘தற்போது போடப்பட்டுள்ள இயற்கை பாறாங்கற்களால் கடல் வாழ் உயிரினங்கள் பாதிக்கப்படும் என்பதை ஏற்றுக் கொள்ள முடியாது. தற்போது கடலில் போடப்படும் தூண்டில் வளைவு முறை பிறப்பகுதியில் கடல் அரிப்பை ஏற்படும் என்பது ஓரளவு ஏற்றுக் கொள்ளக் கூடியது தான். ஆனால் அதே நேரத்தில். தேசிய கடல் தொழில்நுட்ப நிறுவனம் தயாரிக்கும் செயற்கை பாறாங்கற்கள் என்பது சிந்தடிக் டியூப் கொண்டு கடலில் அலையின் வேகத்தை கட்டுப்படுத்தும் முறையில் தயாரிக்கப்பட்டுகிறது.
ஆனால் இதே முறையை பயன்படுத்தி சில ஆண்டுகளுக்கு முன்பு காட்டுப்பள்ளி, மாமல்லபுரம், விழுப்புரம் போன்ற இடங்களில் சோதனை செய்யப்பட்டது. ஆனால் அது வெற்றி அடையவில்லை. அதே நேரத்தில் வெளிநாடுகளில் அனுபவம் வாய்ந்த வல்லுநர்களை கொண்டு செயல்படுத்தியதால் சிந்தடிக் டியூப் திட்டம் முழுமையாக வெற்றி கண்டதாக கூறப்படுகிறது.
ஆனால் இந்தியாவில் குறிப்பாக தமிழகத்தில் இந்த சிந்தடிக் டியூப் எனக்கூடிய செயற்கை பாறாங்கற்கள் கொண்டு கடலில் தூண்டில் அமைக்கும் திட்டத்தில் போதிய அனுபவம் இல்லாததால் அதை வெற்றிகரமாக செய்து முடிக்க முடியவில்லை. மேலும் இதற்கான செலவும் அதிகமாகும். எனவே, உலக அளவிலான அமைப்புகளுடன் இணைந்து செயல்படுத்தினால் தான் இது சாத்தியமாகும்,’’ என்றனர்.
* கடலில் மூழ்கிய கோயில்
திருவொற்றியூர் கே.வி.கே.குப்பம் அருகே கடற்கரை ஓரம் இருந்த பழமை வாய்ந்த காசி விஸ்வநாதர் கோயில் கடல் அரிப்பால் கடந்த 1998ம் ஆண்டு கடலில் மூழ்கியது. கடற்கரையில் இருந்து சுமார் 200 மீட்டர் தூரத்தில் தற்போது 40 அடி உயரம் ராஜா கோபுரத்துடன் அழகிய சிற்ப ஓவியங்களுடன் கூடிய இந்தக் கோயில் எந்தவித சேதமும் இல்லாமல் முழுமையாக கடலில் புதைந்துள்ளது. பழங்காலத்தில் கட்டப்பட்ட இந்த கோவிலை தமிழக அரசு மீட்டெடுத்து புனரமைக்க வேண்டும் என மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
The post எர்ணாவூர் வடக்கு பாரதியார் நகர் முதல் சின்ன குப்பம் வரை தூண்டில் வளைவு இல்லாததால் கடலில் மூழ்கும் குடியிருப்புகள்: மீனவ மக்கள் பரிதவிப்பு appeared first on Dinakaran.