நீர்வரத்து அதிகரிப்பால் முன்னெச்சரிக்கை பூண்டி நீர்த்தேக்கத்தில் இருந்து 5000 கன அடி உபரிநீர் திறப்பு: கரையோர மக்களுக்கு எச்சரிக்கை, அதிகாரிகள் தீவிர கண்காணிப்பு

சென்னை: தொடர் மழை காரணமாக பூண்டி சத்தியமூர்த்தி சாகர் நீர்த்தேக்கத்திற்கு நீர் வரத்து அதிகரித்துள்ளதால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, 5 ஆயிரம் கன அடி உபரி நீர் வெளியேற்றப்படுகிறது. சென்னை மக்களின் குடிநீர் ஆதாரமாக விளங்கும் நீர்நிலைகளில் ஒன்றான பூண்டி சத்தியமூர்த்தி சாகர் நீர்த்தேக்கம், 3,458 சதுர கி.மீ. பரப்பளவில் அமைந்துள்ளது. இதன் மொத்த உயரம் 35 அடியாகும். முழு கொள்ளளவு 3,231 மில்லியன் கன அடியாகும்.

நேற்று பிற்பகல் 1 மணி நிலவரப்படி இந்த நீர்த்தேக்கத்தில் 2,900 மில்லியன் கன அடியாக நீர் இருப்பு இருந்தது. நீர் வரத்து 3500 கன அடியாக இருந்தது. இந்நிலையில் தொடர் மழை காரணமாக நீர்வரத்து அதிகரித்துள்ளதால், பூண்டி ஏரியின் நீர் மட்டம் வேகமாக உயர்ந்து வருகிறது. விரைவில் நீர் மட்டம் 35 அடியை தொட்டுவிடும் என எதிர்பார்க்கப்படுவதால், பாதுகாப்பு கருதி நீர்த்தேக்கத்திலிருந்து நேற்று 1.15 மணியளவில், விநாடிக்கு 1,000 கன அடி உபரிநீர் கொசஸ்தலை ஆற்றில் திறக்கப்பட்டது.

இந்நிலையில் தொடர் மழை காரணமாகவும், ஆந்திர மாநிலம் கண்டலேறு அணையிலிருந்து வரும் நீர், ஆந்திர மாநிலம் அம்மம்பள்ளி அணையிலிருந்து வரும் நீர் ஆகியவையும் பூண்டி சத்தியமூர்த்தி சாகர் நீர்த்தேக்கத்திற்கு வருவதால், நீர் இருப்பு வேகமாக உயர்ந்து வருகிறது. இதன் காரணமாக, நேற்று இரவு 8 மணி நிலவரப்படி வினாடிக்கு 6,500 கன அடி வீதம் நீர் வந்து சேர்வதால் நீர் இருப்பு 2,972 மில்லியன் கனடியாக உயர்ந்தது.

இதனையடுத்து பூண்டி சத்தியமூர்த்தி சாகர் நீர்த்தேக்கத்திலிருந்து 4 மதகுகள் வழியாக 5 ஆயிரம் கன அடி வீதம் உபரி நீரை கொசஸ்தலையாற்றில் திறந்து விடப்பட்டுள்ளது. இதனால் உபரி நீர் வெளியேறும் கொசஸ்தலையாறு செல்லும் கிராமங்களான நம்பாக்கம், கிருஷ்ணாபுரம், ஆட்ரம்பாக்கம் ஒதப்பை, நெய்வேலி, எறையூர், பீமன்தோப்பு, கொரக்கந்தண்டலம், சோமதேவன்பட்டு, மெய்யூர் வெள்ளியூர், தாமரைப்பாக்கம், திருக்கண்டலம், ஆத்தூர், பண்டிக்காவனூர், ஜெகநாதபுரம், புதுகுப்பம்,

கன்னிப்பாளையம், வன்னிப்பாக்கம், அதவன்பாளையம், மடியூர், சீமாவரம், வெள்ளிவாயல்சாவடி, நாப்பாளையம், இடையான்சாவடி, மணலி, மணலி புதுநகர், சடையான்குப்பம், எண்ணூர் மற்றும் கொசஸ்தலையாற்றின் இரு புறமும் உள்ள தாழ்வான பகுதிகளில் வசிப்பவர்களை பாதுகாப்பாக இருக்க வேண்டும் என திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் பிரபுசங்கர் வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்துள்ளார்.

தொடர்ந்து மழை பெய்து, நீர் இருப்பு மேலும் உயரும் பட்சத்தில் உபரிநீர் திறப்பும் அதிகரிக்கும் என நீர்வளத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். ஏரிக்கு வரும் நீரின் அளவை பொதுப்பணித்துறை அதிகாரிகள் கண்காணித்து வருகின்றனர். இதேபோல், தொடர் மழை காரணமாக செம்பரம்பாக்கம் ஏரிக்கு வரும் நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்த வண்ணம் உள்ளது. நேற்று காலை நீர்வரத்து 713 கனஅடியாக இருந்த நிலையில், தொடர்ந்து அதிக மழை பெய்ததால் மாலை 6 மணியளவில் ஏரிக்கு வரும் நீர்வரத்து 5,440 கன அடியாக உயர்ந்தது.

இதன் காரணமாக செம்பரம்பாக்கம் ஏரியின் நீர்மட்டம் 22 அடியை நெருங்கிக் கொண்டிருக்கிறது. தொடர்ந்து ஏரிக்கு வரும் நீரின் அளவை பொதுப்பணித்துறை அதிகாரிகள் கண்காணித்து வருகின்றனர். கடந்த 2015ம் ஆண்டு‌ ஏரியில் 23 அடிவரை தண்ணீரை தேக்கி வைத்த நிலையில், தற்போது 22 அடியை தொட்டால் உபரி நீர் திறப்பது குறித்து மாவட்ட நிர்வாகத்துடன் அதிகாரிகள் ஆலோசித்து வருகின்றனர்.

இதனிடையே அடையாறு ஆற்றங்கரையோரத்தில் வசிக்கக்கூடிய மக்களுக்கு முறையான வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்ட பின்னரே செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து உபரி திறந்து விடப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். தொடர்ந்து ஏரிக்கு வரும் நீரின் அளவை அதிகாரிகள் கண்காணித்து வருவது குறிப்பிடத்தக்கது. தற்போது பொதுப்பணித்துறை அதிகாரிகளின் தொடர் கண்காணிப்பில் செம்பரம்பாக்கம் ஏரி இருந்து வருகிறது.

The post நீர்வரத்து அதிகரிப்பால் முன்னெச்சரிக்கை பூண்டி நீர்த்தேக்கத்தில் இருந்து 5000 கன அடி உபரிநீர் திறப்பு: கரையோர மக்களுக்கு எச்சரிக்கை, அதிகாரிகள் தீவிர கண்காணிப்பு appeared first on Dinakaran.

Related Stories: