முல்லைப்பெரியாறு விவகாரம்; நல்ல முடிவோடு முதல்வர் தமிழகம் திரும்ப வேண்டும்: டிடிவி தினகரன்

சென்னை: முல்லைப்பெரியாறு விவகாரத்தில் நல்ல முடிவோடு முதல்வர் தமிழகம் திரும்ப வேண்டும் என அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் வலியுறுத்தியுள்ளார் . கேரளா செல்லும் முதல்வர் பினராயி விஜயனை சந்தித்து சுமூக தீர்வை எட்ட வேண்டும் என தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து மேலும் அவர் தெரிவித்துள்ளதாவது; “வைக்கம் நூற்றாண்டு நிறைவு விழாவையொட்டி கேரள மாநிலம் கோட்டயத்தில் பெரியார் நினைவகம் மற்றும் நூலகத்தை நேரில் திறந்து வைக்க தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கேரள மாநிலத்திற்கு சென்றிருக்கிறார்.

முல்லைப்பெரியாறு அணையில் ஆண்டுதோறும் நடைபெறும் பராமரிப்பு பணிகளை மேற்கொள்ள அனுமதி மறுப்பதோடு, நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கார் பார்க்கிங் அமைக்கும் பணியை தீவிரமாக மேற்கொண்டு வரும் கேரள அரசின் பிடிவாதப்போக்கிற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வாய்ப்பை இந்த நிகழ்வு ஏற்படுத்திக் கொடுத்திருக்கிறது. கேரள முதல்வர் பினராயி விஜயன் அவர்களை சந்தித்து முல்லைப் பெரியாறு அணை விவகாரத்தில் சுமூக தீர்வை ஏற்படுத்த முயற்சிக்க வேண்டும்.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களின் கேரள மாநிலத்திற்கான பயணம் தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய ஐந்து மாவட்ட மக்களின் குடிநீர் மற்றும் பாசனத் தேவைகளை பூர்த்தி செய்யும் வகையில் பயனுள்ளதாக அமைய வேண்டும் என தமிழக விவசாயிகள் சங்கத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர். எனவே முல்லைப் பெரியாறு அணை விவகாரத்தில் நல்ல முடிவோடு தமிழகம் திரும்ப வேண்டும் என தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களை வலியுறுத்துகிறேன்” என தெரிவித்துள்ளார்.

 

The post முல்லைப்பெரியாறு விவகாரம்; நல்ல முடிவோடு முதல்வர் தமிழகம் திரும்ப வேண்டும்: டிடிவி தினகரன் appeared first on Dinakaran.

Related Stories: