மகாராஷ்டிரா தேர்தலில் விவிபேட், பதிவான வாக்குகளிடையே முரண்பாடு இல்லை: தேர்தல் ஆணையம் விளக்கம்

மும்பை: மகாராஷ்டிரா பேரவை தேர்தலில் பதிவான வாக்குகளுக்கும், ஒப்புகை சீட்டுக்கும் இடையே எந்த முரண்பாடும் காணப்படவில்லை என தலைமை தேர்தல் ஆணையம் விளக்கம் அளித்துள்ளது. மகாராஷ்டிரா சட்டப்பேரவை தேர்தலில் 235 தொகுதிகளை கைப்பற்றிய பாஜ தலைமையிலான மகாயுதி கூட்டணி ஆட்சியை தக்க வைத்து கொண்டது. இந்த தேர்தலில் காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ்(சரத் சந்திர பவார்) உத்தவ் சிவசேனா உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் முறைகேடு நடந்துள்ளதாக குற்றச்சாட்டை முன்வைத்தன.

எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டை தேர்தல் ஆணையம் மறுத்துள்ளது. இதுகுறித்து இந்திய தலைமை தேர்தல் ஆணையம் வௌியிட்டுள்ள அறிக்கையில், “உச்ச நீதிமன்றம், தேர்தல் ஆணைய வழிகாட்டுதல்களின்படி தேர்தல் நடந்த ஒவ்வொரு தொகுதியிலும் இருந்து 5 வாக்குச்சாவடிகளை தேர்வு செய்து அங்கு ஒப்புகை சீட்டுகளை எண்ண வேண்டியது கட்டாயம். இந்த சரிபார்ப்பு முடியும் வரை வெற்றியாளர் அறிவிக்கப்பட மாட்டார்.

அதன்படி மகாராஷ்டிராவில் நடந்து முடிந்த பேரவை தேர்தலில் 288 வாக்குச்சாவடிகளிலும் ஒவ்வொன்றிலும் 5 என்ற வீதத்தில் மொத்தம் 1,440 வாக்குப்பதிவு இயந்திரங்கள் வேட்பாளர்களின் பிரதிநிதிகள், தேர்தல் ஆணைய பொறுப்பாளர்கள் முன்னிலையில் சரிபார்க்கப்பட்டன. அதன்படி ஒப்புகை சீட்டுகளின் வாக்கு எண்ணிக்கையும், மின்னணு இயந்திரத்தில் பதிவான வாக்கு எண்ணிக்கையும் பொருந்துகிறது. இதில் எந்த முரண்பாடும் காணப்படவில்லை” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post மகாராஷ்டிரா தேர்தலில் விவிபேட், பதிவான வாக்குகளிடையே முரண்பாடு இல்லை: தேர்தல் ஆணையம் விளக்கம் appeared first on Dinakaran.

Related Stories: