தமிழக அரசுக்கு களங்கம் ஏற்படுத்த முயற்சிப்பதா? அதானி என்னை சந்திக்கவில்லை: பேரவையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் விளக்கம்: பார்லி. கூட்டுக்குழு விசாரணைக்கு தயாரா என பாஜ, பாமகவுக்கும் சவால்

சென்னை: அதானியை நான் பார்க்கவும் இல்லை. அவரை சந்திக்கவும் இல்லை. அவரும் என்னை சந்திக்கவில்லை. அதானி விவகாரம் தொடர்பாக கூட்டுக்குழு அமைக்க வேண்டும் என்று நாடாளுமன்றத்தில் இந்தியா கூட்டணி கட்சிகள் மற்றும் எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன. பாமகவும், பாஜவும் அதற்கு ஆதரவு தெரிவிக்க தயாராக உள்ளீர்களா என சட்டப்பேரவையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் சவால் விடுத்தார்.சட்டப்பேரவையில் நேற்று பாமக சட்டமன்ற கட்சி தலைவர் ஜி.கே.மணி பேசும்போது, ‘‘சூரிய ஒளி மின்சாரம் முறைகேடு தொடர்பாக அமெரிக்காவில் உள்ள நியூயார்க் கிழக்கு நீதிமன்றத்தில் வழக்கு போடப்பட்டுள்ளது. அந்த வழக்கில் தமிழக அரசின் பெயரும் இடம்பெற்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அது உண்மையா?’’என்று கேள்வி எழுப்பினார்.

அதற்கு பதில் அளித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது: உறுப்பினர் ஜி.கே.மணி இந்த விவகாரம் பற்றி கேள்வி எழுப்பி இருக்கிறார். அவரது கட்சி தலைவர்களும் இதுதொடர்பாக வெளியில் பல்வேறு கருத்துகளை தெரிவித்துள்ளனர். அதில், அதானியை தமிழக அரசு சார்பில் நானும், பிரதிநிதிகளும் சந்தித்து இருப்பதாக உண்மைக்கு மாறான தகவல்களை தெரிவித்து வருகின்றனர்.

இதுபற்றி மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி உரிய விளக்கத்தை ஏற்கனவே அளித்துவிட்டார். அதன்பிறகும் அதுபற்றி உங்கள் கட்சி தலைவர்கள் தொடர்ந்து பேசி வருகிறார்கள். நீங்கள் இப்போது அவையிலும் அதுபற்றி பேசியிருக்கிறீர்கள். அதானியை நான் சந்தித்ததாக பொய்யான தகவலை பரப்பி வருகிறார்கள். நீங்கள் சட்டமன்றத்தில் இதுபற்றி ஆழமாக பேசவில்லை என்றாலும், உங்கள் தலைவர் ஆழமாக பேசி வருகிறார்.

அதானியை நான் பார்க்கவும் இல்லை. அவரை சந்திக்கவும் இல்லை. அவரும் என்னை சந்திக்கவில்லை என்பதை அவையில் தெரிவித்துக்கொள்கிறேன். அதானி விவகாரம் தொடர்பாக கூட்டுக்குழு அமைக்க வேண்டும் என்று நாடாளுமன்றத்தில் இந்தியா கூட்டணி கட்சிகள் மற்றும் எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன. பாமகவும், பாஜவும் அதற்கு ஆதரவு தெரிவிக்க தயாராக உள்ளீர்களா?
இவ்வாறு அவர் பேசினார்.

சபாநாயகர் அப்பாவு: நாடாளுமன்றத்தில் உங்கள் (பாமக) நிலைப்பாடு என்ன என்பது பற்றி பதில் சொல்ல முடியுமா? தொடர்ந்து பேசிய உறுப்பினர் ஜி.கே.மணி, “சூரிய மின் ஒளி வழக்கில் தொடர்பு இருப்பதாக வெளியான தகவல் உண்மைதானா? என்பதை அறியவே சட்டப்பேரவையில் கேள்வி எழுப்பினோம்” என்றார். அதற்கு பதில் அளித்த முதல்வர் மு.க.ஸ்டாலின், “நான் கேட்பது நாடாளுமன்றத்தில் கூட்டுக்குழு அமைக்க நீங்களும் வலியுறுத்துவீர்களா?. முதலில் அதற்கு பதில் சொல்லுங்கள். உங்கள் கட்சி தலைவர்கள் தான் இதை அரசியலாக்கி வருகிறார்கள்” என்று கூறினார். ஆனால், முதல்வரின் விளக்கத்தை ஏற்காமல் பாமக உறுப்பினர்கள் ஜி.கே.மணி தலைமையில் வெளிநடப்பு செய்தனர்.

* அதானியை தமிழக அரசு சார்பில் நானும், பிரதிநிதிகளும் சந்தித்து இருப்பதாக உண்மைக்கு மாறான தகவல்களை தெரிவித்து வருகின்றனர்.

* இப்போது அவையிலும் அதுபற்றி பேசுகிறீர்கள். அதானியை நான் சந்தித்ததாக பொய்யான தகவலை பரப்பி வருகிறார்கள்.

* இதுபற்றி மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி உரிய விளக்கத்தை ஏற்கனவே அளித்துவிட்டார். அதன்பிறகும் அதுபற்றி பாமக தலைவர்கள் தொடர்ந்து பேசி வருகிறார்கள்.

The post தமிழக அரசுக்கு களங்கம் ஏற்படுத்த முயற்சிப்பதா? அதானி என்னை சந்திக்கவில்லை: பேரவையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் விளக்கம்: பார்லி. கூட்டுக்குழு விசாரணைக்கு தயாரா என பாஜ, பாமகவுக்கும் சவால் appeared first on Dinakaran.

Related Stories: