கேரள உயர்நீதிமன்றத்தில், ஜஸ்டிஸ் வி.ஆர்.கிருஷ்ணய்யரின் 10 ஆவது நினைவுச் சொற்பொழி வாக மேனாள் உச்சநீதிமன்ற நீதிபதி ஜஸ்டிஸ் ரோகிந்தன் நாரிமன் ஆற்றிய ஒரு பேருரையில் EWS குறித்து முக்கியமாகக் குறிப்பிட்டு, ஆதங்கப்பட்டு எடுத்து வைத்துள்ள கருத்து மிகவும் அதிர்ச்சிக்குரியதாக பலருக்கும் இருக்கக் கூடும். உண்மை – நியாயங்களும் இப்போதாவது இவர்மூலம் துணிச்சலாக வெளி வருகிறதே என்று சமூகப் போராளிகளுக்கும் மகிழ்ச்சிக்குரியதாக இருக்கிறது என்பதில் அய்யமில்லை.
ஓய்வு பெற்ற உச்சநீதிமன்ற நீதிபதி
ரோகிந்தன் நாரிமன் கருத்து வரவேற்கத்தக்கதும் – சட்ட ரீதியானதுமாகும்! 7.12.2024 அன்று ஜஸ்டிஸ் ரோகிந்தன் நாரிமன் , நமது அரசமைப்புச் சட்டத்தின் அடிக்கட்டுமான அம்சங்களில் மிக முக்கியமான சமூகநீதி – இட ஒதுக்கீடுபற்றிய 103 ஆவது அரசமைப்புச் சட்டத் திருத்தம் செல்லத்தக்க ஒன்றா என்று ஆய்வு செய்யும் வழக்கில், 5 நீதிபதிகள் கொண்ட அமர்வு 2022 இல் அளித்த தீர்ப்பில், மூன்று நீதிபதிகள் செல்லும் என்றும், இரண்டு நீதிபதிகள் மாறுபட்ட தீர்ப்பையும் அளித்து, மெஜாரிட்டி தீர்ப்புப்படி அது (3:2) ஏற்கப்படுகிறது என்று சொன்னார்கள்.பல மாநிலங்களில் இதற்கு ஒன்றிய அரசால் தனி கூடுதல் நிதி ஒதுக்கீடு உள்பட செய்யப்பட்டு, அவசர அவசரமாக ராக்கெட் வேகத்தில் செயல்படுத்தவும் முடுக்கிவிடப்பட்டுள்ளது.
EWS–க்கு ஆதரவாக உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பு சட்ட விரோதமானதே!
பெரியாரின் சமூகநீதி மண்ணில் நடைபெறும் ‘திராவிட மாடல்’ ஆட்சி ஒன்றில் தான் இன்னமும் EWS என்று உயர்ஜாதி ஏழைகள் என்ற போர்வையில் 10 சதவிகித இட ஒதுக்கீடு பறிக்கப்படுவதை ஏற்க மறுத்துள்ளது.ஆண்டு ஒன்றுக்கு ரூபாய் 8 லட்சம் (நாள் ஒன்றுக்கு ரூ.2 ஆயிரத்திற்குமேல்) சம்பாதிக்கும் உயர் ஜாதியினர் ஏழைகள் என்றும், அவர்களுக்கு 10 விழுக்காடு இட ஒதுக்கீடு அளித்தது செல்லும் என்றும் 2022 இல் உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பு இந்திய அரசமைப்புச் சட்டத்தின் அடிக்கட்டுமானத்தையே சிதைத்துச் சின்னாபின்னப்படுத்தக் கூடியது என்றும் அந்தக் காலகட்டத்திலேயே விளக்கி எழுதியிருந்தோம், பல மேடைகளிலும் கருத்துத் தெரிவித்திருந்தோம், நமது பிரச்சாரக் கூட்டங்களிலும் தெளிவுபடுத்தியிருந்தோம். தொடர்ந்து இந்தப் பணியை கடமை உணர்வோடு செய்துகொண்டும் இருக்கிறோம்.
ஒடுக்கப்பட்ட, எஸ்.சி., எஸ்.டி., ஓ.பி.சி., மக்களின் உரிமையை அப்பட்டமாகப் பறிக்கும் அநியாயம் என்பதைத் தொடர்ந்து சுட்டிக்காட்டி வருகிறோம். திராவிடர் இயக்கம், தி.மு.க. கூட்டணி மற்றும் பல சமூகநீதி அமைப்புகளும் இன்றும் போராடி வருவது உலகறிந்த ஒன்றேயாகும்! இதுபற்றிதான் ஜஸ்டிஸ் ரோகிந்தன் நாரிமன் , அந்த அரசியல் சட்ட அமர்வு நீதிபதிகளின் தீர்ப்பு தவறானது என்பதுடன், இந்திய அரசமைப்புச் சட்டத்தின் தலையையே திருகியுள்ளது (Nothing short of turning the Constitution on its head) என்று ஓங்கி சம்மட்டி அடிபோல அடித்துள்ளார்.அதைவிட அந்த 3:2 என்ற விகிதப்படி உச்சநீதிமன்ற நீதிபதிகள் மூன்று பேர் (பெரும்பான்மையோர்) அளித்த தீர்ப்பு செல்லும்; மற்ற இரண்டு நீதிபதிகள் மாறுபட்ட கருத்து கூறினர். மாறுபட்ட கருத்துக் கூறியவர்களும், தத்துவ ரீதியாக பெரும்பான்மையான மூவரின் கருத்தை ஏற்றுக்கொண்டாலும், வேறு அடிப்படையில்தான் மாறுபட்ட தீர்ப்பு என்று கூறியுள்ளனர். அதன் அடிக்கட்டுமானத் தகர்ப்பு என்று கூறியதையும் நீதிபதி நாரிமன் சுட்டிக்காட்டத் தவறவில்லை.
‘Justice Nariman also questioned the views of the two Judges who differed with majority opinion on the Constitution Bench’’ என்பதையும் அருமையாகச் சுட்டிக்காட்டி, தனது 103 ஆவது அரசமைப்புச் சட்டத் திருத்தம்பற்றிய உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு ஏற்கத்தக்க தல்ல; அரசமைப்புச் சட்ட விரோதம் என்பதை அப்பட்டமாகத் தெளிவுபடுத்தியுள்ளார்!
இட ஒதுக்கீடு அளிக்கப்பட வேண்டியது யாருக்கு?
‘‘இட ஒதுக்கீடு அரசமைப்புச் சட்டத்தில் இடம் பெற்றதே, காலங்காலமாக ஒடுக்கப்பட்ட மக்களுக்கு இழைக்கப்பட்ட சமூக அநீதி, கொடுமைகளைக் களைந்து, அவர்களுக்குத் தனிச் சிறப்பு வாய்ப்பளித்து சமப்படுத்துவதற்காகவே! ஆனால், நீங்கள் (ஆளும் ஒன்றிய ஆட்சி) 103 ஆவது சட்டத் திருத்தத்தில் யாருக்கு இட ஒதுக்கீடு தருகிறீர்கள்? பிராமணர்கள், சத்திரியர்கள், வைசியர்கள் அத்துடன் முஸ்லிம், கிறித்தவர்கள்’’ என்று விளக்கம் தந்துள்ளார். (சிறுபான்மையினர் என்பது ஒரு மாய்மாலம்; கண்துடைப்புக் கோலம்). அரசமைப்புச் சட்ட கர்த்தாக்கள் யாருக்கு இட ஒதுக்கீடு கொடுத்தார்கள். சமூகநீதி மறுக்கப்பட்ட வர்களுக்குத்தானே! அவர்களுக்கு நீங்கள், இந்த 10 சதவிகிதத்தில் உரிமையில்லை என்று ஒதுக்கிவிட்டீர்கள் என்றால், அது ஏற்புடையதா?நமது அரசமைப்புச் சட்டத்தின் 46 ஆவது பிரிவு கூறுவதற்கு நேர் எதிராகத்தானே 10 சதவிகிதம் உயர்ஜாதியினர் பாதிக்கப்படாத மக்களுக்கு அளிக்கப்படுகிறது’’ என்ற நியாயமான கேள்வியை, இதன் பின்னால் ஒளிந்துள்ள சூது சூழ்ச்சித் திரையைக் கிழித்து விளக்கியிருக்கிறார்!நாம் அன்று முதல் இன்றுவரை ‘‘10 சதவிகித உயர்ஜாதி ஏழைகளுக்கு இட ஒதுக்கீடு’’ என்ற மோசடியை அமல்படுத்தி வருவதை, உச்சநீதிமன்ற நீதிபதியாக இருந்த சட்டமேதையே இப்போது நன்கு அம்பலப்படுத்தி விட்டார்! சமூகநீதிப் போராளிகள் எக்கட்சி, எந்த அணியினராக இருந்தாலும், சமூகநீதியாளர் என்று ஓர் அணியில் நின்று, மக்கள் மன்றத்திலும், உச்சநீதி மன்றத்திலும் இதனை எதிர்த்துக்களம் காணத் தவறக்கூடாது.
ஓய்ந்திருக்க நேரமில்லை, உதவாதினி தாமதம்!
சறுக்கப்பட்ட மறுக்கப்பட்ட நீதி அந்த 10 சத விகித EWS இட ஒதுக்கீடு ஒடுக்கப்பட்ட மக்களுக்கு வஞ்சனை செய்து ஏற்கெனவே கல்வி, வேலை வாய்ப்பில் கொழுத்துத் திரியும் கூட்டத்திற்கு மேலும் வலு சேர்க்கும் ஏற்பாடாகும்.துணிந்து பேசும் பல நாரிமன்கள் தேவை! மருத்துவமனையில், அதிலும் கடுமையான அளவிற்கு நோய் முற்றிப்போய், உயிருக்குப் போராடும் ஆபத்தான நோயாளிகளுக்கு மட்டுமே ‘‘தீவிர சிகிச்சைப் பிரிவு’’ (Intensive Care Unit) – அதில் ஓய்வெடுக்க உல்லாசவாசிகளை அனுமதித்து, விசிறி, சந்தனம் பூசி, தாம்பூலம் வழங்குவதுதான் ‘‘சமூகநீதியா?’’ – இதுதான் பி.ஜே.பி., ஆர்.எஸ்.எசின் சமூகநீதியா? தவறான போக்கைச் சரி செய்யவேண்டாமா?
அரசமைப்புச் சட்ட நாளைக் கொண்டாட முகப்புரையைப் படித்தால் மட்டும் போதுமா?அதில் உள்ள சமூகநீதியை, சமூக அநீதியாக்கி திசை திருப்புவதா? இதற்கு உச்சநீதிமன்றம் சரியான பரிகாரத்தைத் தந்து, அதன் நீதிப் போக்கு தடம் மாறாதது என்று உலகத்திற்குக் காட்டவேண்டிய கடமையும், பொறுப்பும் அதற்கும் உண்டு என்று காட்ட முன்வரவேண்டும்! இப்படித் துணிந்து பேசும் ‘‘பல ரோகிந்தன் நாரி மன்கள்’’ இப்போது தேவை! அவருக்குக் கோடானுகோடி ஒடுக்கப்பட்ட, பாதிக்கப்பட்ட, உரிமை மறுக்கப்பட்ட மக்களின் சார்பில் நமது நன்றியைக் கூறுகிறோம்! ‘‘உண்மை ஒரு நாள் வெளியாகும். அதில், பொய்யும், புரட்டும் பலியாகும்! – கவிஞர் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம். குறிப்பிட்டுள்ளார்.
The post EWS இடஒதுக்கீடு சட்டம் செல்லும் என்ற உச்சநீதிமன்ற தீர்ப்பு சமூகநீதிக்கு எதிரானதே!: கி.வீரமணி appeared first on Dinakaran.