டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடர்; இந்தியா இறுதி போட்டிக்கு தகுதி பெற என்ன வழி?

அடிலெய்டு: 2025 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப் போட்டிக்கு முன்னேறும் வாய்ப்பு 3 அணிகளுக்கு மட்டுமே உள்ளன என்பது தற்போது உறுதியாகி உள்ளது. முன்பு இந்தியா, ஆஸ்திரேலியா, தென்ஆப்பிரிக்கா, நியூசிலாந்து மற்றும் இலங்கை ஆகிய 5 அணிகளுக்கு இறுதிப் போட்டிக்கு முன்னேறும் வாய்ப்பு இருந்தது. சமீபத்தில் நடந்து முடிந்த டெஸ்ட் போட்டிகளில் நியூசிலாந்து மற்றும் இலங்கை அணிகள் தோல்வி அடைந்ததை அடுத்து அந்த அணிகளும் இறுதிப் போட்டிக்கான வாய்ப்பை தவறவிட்டுள்ளன. அந்த அணிகள் தங்களுக்கு மீதமுள்ள போட்டிகளில் வெற்றிகளை பெற்றாலும் டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு முன்னேறுவது சாத்தியம் இல்லை. இந்த நிலையில், இந்தியா, ஆஸ்திரேலியா மற்றும் தென்ஆப்பிரிக்கா ஆகிய அணிகளுக்கு இடையே இறுதிப் போட்டிக்கான இடத்தை பிடிக்க போகும் 2 அணிகள் எவை என்ற ரேஸ் தொடங்கி உள்ளது. இதில் இந்தியா மற்றும் ஆஸ்திரேலியாவை, தென்ஆப்பிரிக்கா அணி முந்தி உள்ளது.

தென்ஆப்பிரிக்கா அணி, இலங்கை அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரை வென்று இருக்கும் நிலையில், பாகிஸ்தான் அணிக்கு எதிராக சொந்த மண்ணில் 2 டெஸ்ட் போட்டிகளில் விளையாட உள்ளது. அந்த 2 போட்டிகளில் ஒரு வெற்றி பெற்றாலும் தென்ஆப்பிரிக்கா அணி நேரடியாக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்று விடும். எனவே, தென்னாப்பிரிக்காவுக்கு இறுதிப் போட்டிக்கு முன்னேறும் வாய்ப்பு அதிகமாக உள்ளது. இந்தியாவை பொறுத்தவரை ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக 3 போட்டிகள் மட்டுமே மீதமுள்ளன. இந்த 3 போட்டிகளில் இந்திய அணி, 3 வெற்றிகளை பெற்றால் நேரடியாக இறுதிப் போட்டிக்கு தகுதி பெறும். மீதம் உள்ள 3 போட்டிகளில் 2 வெற்றிகள் மற்றும் ஒரு டிரா செய்தாலும் இந்திய அணி டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி போட்டிக்கு தகுதி பெறும். இந்த சூழ்நிலையில் ஆஸ்திரேலிய அணி இறுதிப் போட்டிக்கு முன்னேற முடியாத நிலை ஏற்படும்.

ஒருவேளை இந்திய அணி மீதம் உள்ள 2 போட்டிகளில் 2 வெற்றிகள் மற்றும் ஒரு தோல்வியை சந்தித்தால், ஆஸ்திரேலிய அணி அடுத்து இலங்கை அணி உடன் ஆட உள்ள டெஸ்ட் தொடரில் ஒரு தோல்வியையாவது சந்திக்க வேண்டும். ஒருவேளை இந்திய அணி மீதமுள்ள 3 டெஸ்ட் போட்டிகளில் ஒரு வெற்றி மற்றும் 2 தோல்விகளை சந்தித்தால், அதன்பின் 2 விஷயங்கள் நடந்தால் மட்டுமே இந்திய அணி டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற முடியும். அதாவது பாகிஸ்தான் அணி, தென்னாப்பிரிக்காவை 2 – 0 என வீழ்த்த வேண்டும். ஆஸ்திரேலிய அணி இலங்கையை ஒரு போட்டியில் மட்டுமே வீழ்த்தி இருக்க வேண்டும். இதுபோன்ற இக்கட்டான சூழ்நிலை ஏற்படும் என்பதால் இந்திய அணி அடுத்த மூன்று போட்டிகளில் 2 வெற்றிகளை பெறுவது அவசியமாகிறது. இந்திய அணி டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றுவிட்டால் ஆஸ்திரேலியா வெளியேறும் என்பது குறிப்பிடத்தக்கது.

The post டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடர்; இந்தியா இறுதி போட்டிக்கு தகுதி பெற என்ன வழி? appeared first on Dinakaran.

Related Stories: