பின்னர் வெளியில் வந்த திருமாவளவன் நிருபர்களிடம் கூறியதாவது: விசிக எம்.எல்.ஏ.க்கள் 4 பேர், எம்.பி.க்கள் 2 பேர் நிவாரண நிதி வழங்கி உள்ளனர். ரூ.2475 கோடி புயல் நிவாரணம் வழங்க ஒன்றிய அரசிடம் தமிழ்நாடு அரசு வலியுறுத்தியது. ஆனால் வழக்கம் போல் ஒன்றிய அரசு ரூ.944 கோடி மட்டும் கொடுத்து வஞ்சித்துவிட்டது. விசிக துணைப் பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜூனா, அண்மை காலமாக பல்வேறு நிகழ்வுகளில் அல்லது சமூக ஊடகங்களில் தன்னுடைய கருத்துகளை பதிவிட்டதன் மூலம் கட்சியின் நன்மதிப்புக்கும், நம்பகத் தன்மைக்கும் பாதிப்பை ஏற்படுத்தும் ஒரு சூழல் உருவானது. அதுகுறித்து தொடர்ச்சியாக அவரிடம் அறிவுறுத்தல் செய்தோம்.
எனினும் அண்மை நிகழ்வின் அவரது பேச்சு கட்சியின் நன்மதிப்புக்கும் தலைமையின் நம்பகத் தன்மைக்கும் எதிராக அமைந்தததால், கட்சியின் மூத்த நிர்வாகிகளுடன் ஆலோசனை செய்து 6 மாத காலம் இடைநீக்கம் செய்திருக்கிறோம். விஜய்யுடன் எங்களுக்கு சர்ச்சையோ சிக்கலோ ஏற்பட்டது இல்லை. ஆனால் அவருடன் ஒரே மேடையில் பங்கேற்றால் எங்களது கொள்கை பகைவர்கள், எங்களது வளர்ச்சியை விரும்பாதவர்கள், எங்களை வீழ்த்த வேண்டும் என்று விரும்புபவர்கள் அதனை ஒரு வாய்ப்பாக பயன்படுத்தி எங்களுக்கு எதிராக கதை கட்டுவதற்கு வாய்ப்பு இருப்பதால் முன் உணர்ந்து எங்கள் நலனை கருத்தில் கொண்டு நாங்கள் எடுத்த முடிவு.
ஆனால் அவர் பேசிய பேச்சு விசிகவின் நம்பகத் தன்மையை நொறுக்கும் அளவுக்கு அமைந்துவிட்டது. எனவே அவர் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டிய ஒரு தேவை எழுந்தது. அதன் அடிப்படையில் அவரை இடை நீக்கம் செய்யும் முடிவை எடுத்தோம். மாற்றுக் கட்சியினர் ஒரே மேடையை பகிர்ந்து கொள்ளலாம். ஆனால் தமிழ்நாட்டில் அந்த மாதிரியான ஒரு சூழல் இல்லை. பாஜ மாநில தலைவர் அண்ணாமலை, விசிக கட்சி திருமாவளவன் கட்டுப்பாட்டில் இருக்கிறதா, ஆதவ் அர்ஜுனா கட்டுப்பாட்டில் இருக்கிறதா என்று கேட்டிருக்கிறார். பாஜக கட்சி அதானி கட்டுப்பாட்டில் இருக்கிறதா? அல்லது மோடி கட்டுப்பாட்டில் இருக்கிறதா? என்பதை முதலில் அவர் சொல்லட்டும். பின்னர் இதற்கு நான் பதிலளிக்கிறேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
The post அதானியிடமா.. மோடியிடமா.. பாஜ இருப்பது யார் கட்டுப்பாட்டில்?அண்ணாமலைக்கு திருமாவளவன் பதிலடி appeared first on Dinakaran.