‘சட்டமன்ற நாயகர்-கலைஞர் நூற்றாண்டு விழா’ சிறப்பு மலர் முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட அமைச்சர் துரைமுருகன் பெற்றார்: கருத்தரங்கில் வென்ற மாணவர்களுக்கு பரிசு தொகை

சென்னை: பேரவைத் தலைவர் அப்பாவுவை தலைவராகக் கொண்ட குழுவால் தயாரிக்கப்பட்ட ‘சட்டமன்ற நாயகர்-கலைஞர்’ என்ற நூற்றாண்டு விழா சிறப்பு மலர் வெளியீட்டு விழா தலைமை செயலகத்தில் நேற்று நடந்தது. சிறப்பு மலரை முதல்வர் மு.க.ஸ்டாலின், பேரவை தலைவர் அப்பாவு முன்னிலையில் வெளியிட, நீர்வளத்துறை அமைச்சரும், அவை முன்னவருமான துரைமுருகன் சிறப்பு மலரை பெற்றுக் கொண்டார்.

பேரவைத் தலைவரை தலைவராகக் கொண்ட ‘சட்டமன்ற நாயகர்-கலைஞர்’ குழுவால், ‘நூற்றாண்டு விழா நாயகர் கலைஞர்’ சட்டமன்றத்தின் மூலம் சமூக முன்னேற்றத்திற்கு ஆற்றிய சாதனைகளில் மாணவர்களை ஈர்த்தது” என்ற தலைப்பில் சென்னையில் கருத்தரங்கம் நடத்தப்பட்டது. சென்னை, ரோசரி மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளியில், பள்ளி மாணவ, மாணவியர்களுக்கான மாநில அளவிலான கருத்தரங்கு ஆகஸ்ட் 29ம்தேதி நடந்தது. அதில், 53 மாணவ, மாணவியர்கள் பங்கேற்று தங்களது கருத்துகளை எடுத்துரைத்தனர்.

கலைஞர் நூற்றாண்டு விழாவின் நிறைவாக, பேரவைத் தலைவரை தலைவராகக் கொண்ட குழுவால் தயாரிக்கப்பட்ட ‘சட்டமன்ற நாயகர்-கலைஞர்’ நூற்றாண்டு விழா சிறப்பு மலரை முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட, நீர்வளத்துறை அமைச்சரும், பேரவை முன்னவருமான துரைமுருகன் பெற்றுக் கொண்டார். இந்த சிறப்பு மலரில் சட்டமன்றத்தில் கலைஞர் ஆற்றிய முக்கிய உரைகள், சட்டமன்ற மேலவையில் ஆற்றிய முக்கிய உரைகள், கலைஞர் முதல்வராக இருந்தபோது முன்மொழிந்து நிறைவேற்றப்பட்ட முக்கிய அரசினர் தனித் தீர்மானங்கள், சட்டப் பேரவையில் கலைஞர் பொன்விழா முக்கிய உரைகள், கலைஞரின் சிறப்பினை போற்றிடும் தலைவர்கள், முன்னாள் இந்நாள் அமைச்சர்கள், சட்டமன்ற முன்னாள் இந்நாள் உறுப்பினர்கள், பத்திரிகை ஆசிரியர்கள், ஆன்மீகத் தலைவர்கள் போன்றவர்களின் வாழ்த்துச் செய்திகள், கட்டுரைகள் போன்றவை இடம்பெற்றுள்ளன.

அதை தொடர்ந்து, ‘நூற்றாண்டு விழா நாயகர் கலைஞர் சட்டமன்றத்தின் மூலம் சமூக முன்னேற்றத்திற்கு ஆற்றிய சாதனைகளில் மாணவர்களை ஈர்த்தது’ என்ற தலைப்பில் மாநில அளவில் நடந்த கருத்தரங்கில் கலைஞர் குறித்து சிறப்பான கருத்துகளை எடுத்துரைத்ததற்காக தேர்ந்தெடுக்கப்பட்ட திருநெல்வேலியைச் சேர்ந்த எஸ்.ரகுமாள் (முதலிடம்), திருப்பத்தூரைச் சேர்ந்த மா.மகேஷ் (இரண்டாமிடம்) மற்றும் சென்னையைச் சேர்ந்த நா.அழகேசன் (மூன்றாமிடம்) ஆகிய மூன்று கல்லூரி மாணவ, மாணவிகள் மற்றும் திருச்சி மாவட்டத்தைச் சேர்ந்த இ.முகம்மது ஹாரிஸ் (முதலிடம்),

விருதுநகர் மாவட்டத்தைச் சேர்ந்த கே.கவிலன் (இரண்டாமிடம்) மற்றும் கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்த பா.வர்ஷா (மூன்றாமிடம்) ஆகிய மூன்று பள்ளி மாணவ, மாணவியர்களுக்கு முதல் பரிசாக ரூ.1 லட்சம், 2ம் பரிசாக ரூ.75 ஆயிரம், 3ம் பரிசாக ரூ.50 ஆயிரம் ஆகிய பரிசுத் தொகைக்கான வங்கி வரைவோலைகளையும் கலைஞரின் சிலைகளையும் முதல்வர் மு.க.ஸ்டாலின் வெற்றி பெற்ற மாணவ, மாணவியர்களுக்கு வழங்கி வாழ்த்து தெரிவித்தார்.

The post ‘சட்டமன்ற நாயகர்-கலைஞர் நூற்றாண்டு விழா’ சிறப்பு மலர் முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட அமைச்சர் துரைமுருகன் பெற்றார்: கருத்தரங்கில் வென்ற மாணவர்களுக்கு பரிசு தொகை appeared first on Dinakaran.

Related Stories: