டங்ஸ்டனுக்கு எதிரான தனித் தீர்மானம் அதிமுக உள்ளிட்ட கட்சிகளின் ஆதரவுடன் சட்டப்பேரவையில் நிறைவேறியது

சென்னை: அரிட்டாப்பட்டி டங்க்ஸ்டன் சுரங்கம் அமைக்கும் முயற்சிக்கு எதிரான தனித்தீர்மானம் அதிமுக உள்ளிட்ட கட்சிகளின் ஆதரவுடன் சட்டப்பேரவையில் நிறைவேறியது. தமிழக சட்டப்பேரவையில் இன்று மதுரை மாவட்டம் அரிட்டப்பாட்டியில் டங்ஸ்டன் சுரங்கத்துக்கு வழங்கப்பட்ட உரிமத்தை ரத்து செய்ய வலியுறுத்தி தனித் தீர்மானம் கொண்டு வரப்பட்டது. இந்த தனித் தீர்மானம் மீது பல்வேறு கட்சி உறுப்பினர்களும் உரையாற்றினர். அந்த வகையில் தனித் தீர்மானம் மீது எடப்பாடி பழனிசாமி உரையாற்றினார்.

காரசார விவாதம்
தமிழக அரசு 10 மாதங்களாக என்ன செய்துகொண்டிருந்தது என்று எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி எழுப்பிய கேள்விக்கு, தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் பதில் அளித்தார். தொடக்கம் முதலே டங்ஸ்டன் சுரங்கத்துக்கு எதிர்த்து வருகிறோம். சுரங்கத்துக்கு ஒப்பந்தம் விடுவதற்கான சட்டத்தில் ஒன்றிய அரசு தானே ஒரு திருத்தத்தை செய்துவிட்டது. யாரையும் கேட்கவில்லை. சட்டத்தைத் திருத்திவிட்டு மத்திய அரசு என்ன சொல்கிறது என்றால், சுரங்கத்துக்கான ஏலம் விடும் அதிகாரம் மத்திய அரசுக்கே உள்ளது.

மேலும், மத்திய அரசு தேர்வு செய்யும் ஏலதாரருக்கு சுரங்கத்தை குத்தகை விடும் அதிகாரம் மட்டுமே மாநிலத்துக்கு உள்ளது என்று கூறியிருக்கிறது. டங்ஸ்டன் சுரங்கத்தால் ஏற்படும் பாதிப்புகளை புள்ளி விவரங்களுடன் ஒன்றிய அரசுக்கு தெரிவித்துவிட்டோம். தமிழ்நாடு அரசு எதிர்ப்பு தெரிவிக்கவில்லை என்பது முற்றிலும் தவறானது என்று கூறினார்.

தொடர்ந்து பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின் திமுக ஆட்சியில் எந்த விஷயத்திலும் அலட்சியமாக இருந்தது இல்லை. ஏலம் விட்டாலும், நிச்சயமாக, உறுதியாக சுரங்கம் அமைக்க மாநில அரசு அனுமதி தராது. நாடாளுமன்றத்தில் சட்டம் நிறைவேற்றிய உடனேயே திமுக அரசு எதிர்ப்பு தெரிவித்தது. டங்ஸ்டன் சுரங்க திட்டத்தை தடுத்தே தீருவோம். நான் முதலமைச்சராக இருக்கும் வரை ஒன்றிய அரசு இந்த திட்டத்தை கொண்டு வரமுடியாது. டங்ஸ்டன் சுரங்கம் அமையும் சூழல் ஏற்பட்டால் நான் முதல்வர் பொறுப்பிலேயே இருக்க மாட்டேன் என்று கூறினார்.

தொடர்ந்து பேசிய துரைமுருகன்; திட்டத்தை தமிழ்நாடு அரசு அனுமதிக்காது என்று சட்டப்பேரவையிலேயே முதல்வர் பிரகடனப் படுத்தியிருக்கிறார். முதல்வர் ஸ்டாலின் தெளிவாக சொல்லிவிட்டார், இனியும் தொடர்ந்து பேசுகிறீர்கள் என்றால், நீங்கள் வேதாந்தா நிறுவனத்துடனேயே பேசி விடலாம் என்று கூறினார். அதனை தொடர்ந்து டங்ஸ்டன் சுரங்கம் அமைப்பதற்கு எதிரான தமிழக அரசின் தீர்மானத்திற்கு அனைத்து கட்சிகளின் உறுப்பினர்களும் வரவேற்பு தெரிவித்தனர். அதனை தொடர்ந்து அரிட்டாப்பட்டி டங்க்ஸ்டன் சுரங்கம் அமைக்கும் முயற்சிக்கு எதிரான தனித்தீர்மானம் அதிமுக உள்ளிட்ட கட்சிகளின் ஆதரவுடன் சட்டப்பேரவையில் நிறைவேறியது.

 

The post டங்ஸ்டனுக்கு எதிரான தனித் தீர்மானம் அதிமுக உள்ளிட்ட கட்சிகளின் ஆதரவுடன் சட்டப்பேரவையில் நிறைவேறியது appeared first on Dinakaran.

Related Stories: