சாலை விரிவாக்க பணிகளுக்காக ராஜகீழ்ப்பாக்கம் ஏரியில் 53 கட்டிடங்கள் அகற்றம்: அதிகாரிகள் நடவடிக்கை

தாம்பரம்: சாலை விரிவாக்க பணிகளுக்காக ராஜகீழ்ப்பாக்கம் ஏரியில் 53 ஆக்கிரமிப்பு கட்டிடங்கள் அகற்றப்பட்டுள்ளன. ஒரு வாரத்திற்கு பின் மீண்டும் பணிகள் தொடங்கும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். பெருங்களத்தூர், தாம்பரம் வழியாக சென்னைக்கு தென் மாவட்டங்களில் இருந்து தினமும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் வந்து செல்கின்றன. இதனால் தினமும் ஜிஎஸ்டி சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகி வருகின்றனர். இதனால் சென்னைக்கு வரும் வாகனங்கள் பெருங்களத்துார், தாம்பரம் வழியாக சென்னைக்குள் நுழையாமல் மாற்றுபாதை மூலம் பெருங்களத்துார், சதானந்தபுரம், ராஜகீழ்ப்பாக்கம் வழியாகச் சென்று தாம்பரம் – வேளச்சேரி பிரதான சாலை வழியாக செல்லும் வகையில் ஈஸ்டர்ன் பைபாஸ் திட்டம் அறிவிக்கப்பட்டது.

இதில் ஜிஎஸ்டி சாலையில் பெருங்களத்தூர் பகுதியில் தொடங்கி சதானந்தபுரம், ஆலப்பாக்கம், நெடுங்குன்றம், திருவஞ்சேரி, ராஜகீழ்ப்பாக்கம், சேலையூர் வழியாக வேளச்சேரி சாலையை அடையும் வகையில் 6 வழிப்பாதை அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. இதனையடுத்து சேலையூர் முதல் திருவஞ்சேரி வரை 3 கிமீ துாரத்திற்கும், திருவஞ்சேரி முதல் மப்பேடு வரை 1.4 கிமீ துாரத்திற்கும் ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணிகள் தொடங்கி ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன. இதனை தொடர்ந்து பெருங்களத்துார் முதல் அகரம்தென் பிரதான சாலை, மப்பேடு சந்திப்பு வரை சாலை அமைக்கும் பணிகள் தொடங்கப்பட்டு நடைபெற்று வருகின்றன. 60 சதவீத பணிகள் முடிவடைந்துள்ள நிலையில் மீதமுள்ள 40 சதவீத பணிகள் அடுத்த ஆண்டு, மார்ச் மாதத்திற்குள் முடிக்கப்படும் என கூறப்படுகிறது.

இந்நிலையில் இரண்டாம் கட்ட பணிக்காக அகரம்தென் சாலையில், சேலையூர் அம்பேத்கர் நகர் சந்திப்பில் இருந்து ராஜகீழ்ப்பாக்கம் ஏரி வழியாக வேளச்சேரி சாலை வரை பணிகளை தொடங்க ஏதுவாக ராஜகீழப்பாக்கம் ஏரியில் உள்ள 126 கட்டிடங்களை இடிக்கும் பணி நேற்று முன்தினம் தொடங்கியது. இதில் மொத்தம் 53 கட்டிடங்கள் இடிக்கப்பட்டுள்ளன. மீதமுள்ள சில கட்டிடங்களுக்கு டோக்கன் வழங்கும் பணிகள் நடைபெற உள்ளதால் ஒரு வாரம் அந்தப் பணிகள் நடைபெறும் எனவும், அந்தப் பணிகள் முடிவடைந்த பின்னர் மீண்டும் மீதமுள்ள கட்டிடங்கள் இருக்கும் பணிகள் தொடங்கப்படும் எனவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

The post சாலை விரிவாக்க பணிகளுக்காக ராஜகீழ்ப்பாக்கம் ஏரியில் 53 கட்டிடங்கள் அகற்றம்: அதிகாரிகள் நடவடிக்கை appeared first on Dinakaran.

Related Stories: