×

அரசு மருத்துவமனையில் இருந்து தப்பி ஓடிய பெண் கைதி

 

பண்ருட்டி, டிச. 9: கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே உள்ள மாளிகைமேடு பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்தவர் சுப்பிரமணியன். இவரது மகன் சங்கர்(50). இவருக்கும், அதே பகுதியை சேர்ந்த செல்வம் என்பவரது மகன் செல்வக்குமார் என்பவரது குடும்பத்துக்கும் பணம் கொடுக்கல் வாங்கலில் முன்விரோதம் இருந்து வந்தது. இந்த நிலையில் சம்பவத்தன்று மாலை அங்குள்ள பிள்ளையார் கோயில் அருகில் நின்று கொண்டிருந்த சங்கரிடம் அங்கு வந்த செல்வக்குமார், இவரது தாய் அஞ்சலை(50), ஆதரவாளர் கிருஷ்ணகுமார் ஆகிய 3 பேரும் சேர்ந்து தகராறு செய்துள்ளனர்.

தொடர்ந்து சங்கரையும், தடுக்க முயன்ற சங்கரின் உறவினர்கள் அஷ்டலட்சுமி (40), முருகன் (43) மற்றும் சீதாராமன் மகன் ராமச்சந்திரன் ஆகிய 4 பேரையும் இரும்பு கம்பி மறறும் மண்வெட்டி, கம்பு ஆகியவற்றால் தாக்கினர். இதில் படுகாயம் அடைந்த 4 பேரும் பண்ருட்டி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர். இது குறித்த புகாரின் பேரில் செல்வகுமார், அவரது தாய் அஞ்சலை மற்றும் கிருஷ்ணகுமார் ஆகிய 3 பேர் மீது பண்ருட்டி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் எழில்தாசன் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து, அதில் அஞ்சலையை கைது செய்தனர்.

பின்னர் அவரை மருத்துவ பரிசோதனைக்காக பண்ருட்டி அரசு மருத்துவமனைக்கு போலீசார் அழைத்துச் சென்றனர். அப்போது அங்கு கூட்டம் அதிகமாக இருந்ததால், இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி கொண்டு அஞ்சலை அங்கிருந்து திடீரென மாயமானார். அவரை காணாமல் அதிர்ச்சி அடைந்த போலீசார் மருத்துவமனை வளாகம் முழுவதும் தேடினர். ஆனால் அவரை காணவில்லை. தொடர்ந்து அவரை தேடி வந்த நிலையில், நேற்று முன்தினம் இரவு மருத்துவமனை அருகில் பதுங்கியிருந்தவரை போலீசார் பிடித்து கைது செய்து, கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

The post அரசு மருத்துவமனையில் இருந்து தப்பி ஓடிய பெண் கைதி appeared first on Dinakaran.

Tags : Panruti ,Subramanian ,Majalimedu Pilliyar Kovil Street ,Panruti, Cuddalore District ,Shankar ,Selvam ,
× RELATED கண்காணிப்பு கேமராவுடன் பறந்து வந்த கழுகு